வெள்ளி, அக்டோபர் 07, 2005

உழைப்பாளியின் குமுறல்!


மற்றுமொரு கவிதை - என் தந்தையின் குறிப்பிலிருந்து. பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.

உழைப்பாளியின் குமுறல்

'ஒரு நாள் உண்ணாவிரதம்' என
ஊர் முழுதும் ஓராயிரம் சுவரொட்டி
கண்ட சுவர் எல்லாம் ஒட்டி
கால்நடைக்கு தீனிபோடும்
அரசியல் அண்ணாத்தைகளே!
அரை வயிறு கஞ்சி குடிக்காமல்
கால்நடையாய் கழனிமேடு சுற்றும்
தம்பிகள் எங்களையும் கவனியுங்கள்

சுவரொட்டியில் 'மாபெரும் உண்ணாவிரதம்'
உண்மையில் ஒரு வேளை மட்டும் உணவு குறைப்பு
காலையில் உண்டு களைத்து 'விரத' ஆர்பாட்டம்
மாலையில் பழரசம் பருகி 'வெற்றி' கொண்டாட்டம்.
ஏமாறுவது எங்கள் மரபு என்றாலும்
ஏமாற்றுவது உங்கள் தொழிலாகலாமோ?
எல்லோரும் ஏமாந்தவர்கள் அல்ல
எல்லா நேரமும் எவரையும் ஏமாற்றமுடியாது!

சுவரொட்டிக் காகிதம் ஏமாற்றி உரித்தெடுத்த
எங்கள் பொதி சுமக்கும் முதுகுத்தோல்!
வண்ண வண்ண எழுத்துகள் நீங்கள்
உடலிலிருந்து உறிஞ்சியெடுத்த ரத்தம்
ஒட்டும் பசையோ, உழைத்துக்
களைத்து கால் வயிறு குடிக்க
கையில் வைத்திருந்த
கலயக் கஞ்சியே ஆகும்.

எங்களில் பலர் இதையறிந்தும்
ஒன்று சேராத ஊமைகள்;
பங்கு கேட்காத பேதைகள்!
நாங்கள் ஒன்று பட்டால்
உங்களையும் உண்மையாய்
உழைக்க வைக்க முடியும்!
எப்போது அது முடியும்?
எப்போது அது ஆரம்பம்?

2 Comments:

Blogger b said...

கவிதை நன்று ரங்கா அவர்களே.

9:50 PM  
Blogger ரங்கா - Ranga said...

மூர்த்தி, தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. தங்கள் பாராட்டை என் தந்தையிடம் தெரிவித்துவிட்டேன்.

ரங்கா.

10:59 AM  

கருத்துரையிடுக

<< Home