புதன், செப்டம்பர் 02, 2015

திருமலை

திருமலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

அரசர்கள் ஆண்ட காலம். திருமலைக்கு வடஇந்தியாவிலிருந்து பைராகி ஒருவர் வந்தார். சுவாமி தரிசனம் செய்ய கோயில் வாசலை அடைந்தபோது, காவலர்கள் தடுத்தார்கள். காரணம்? உடல் முழுவதும் ஒரே புழுதி. இடுப்பில் கட்டிய வேட்டியோ அழுக்கு மயம். போய் கோயில் திருக்குளத்தில் குளித்து முழுகி வந்தால் கோயில் உள்ளே அனுமதிக்கிறோம் என்ற பதில்.

‘சரி’ என சொல்லி ஸ்நானம் செய்து வந்தவரைப் பார்த்தால், இன்னும் மோசம். உடல் சுத்தம், உடையும் பரவாயில்லை. ஆனால், தலையிலிருந்து கால் வரை தொங்கும் சடையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. ஒருவித நாற்றம். மறுபடியும் காவலர்கள் கூறினார்கள். தயவு செய்து, தலை, முகம் முழுவதுமாக மழித்துவிட்டு வாருங்கள். இந்த கோலத்தில் கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது.

பைராகி மறுத்தார். என் நினைவு தெரிந்த நாள் முதல் நான் யாரையும் தொடுவதில்லை. என்னை மற்றவர் யாரும் தொடுவதையும் அனுமதிப்பதும் இல்லை. என்னால் முடி துறக்க முடியாது. காவலர்கள் கூறினார்கள், அப்படியானால் எங்களாலும் உங்களை கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது.

மேலும் பேச்சு எதற்கு, என்ற நினைவுடன் பைராகி திரும்ப நடந்தார். மலை மீது ஏறி, தனியான ஒரு இடத்தில் அமர்ந்து கண்மூடி பகவானை பிரார்த்தித்தார். ‘நான் இதுவரை பல தலங்களுக்கும் கால்நடையாக சென்று இமயமலை முதல் ஆரம்பித்து, பல பிரதேசங்களில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறேன். திருமலைவாசா! எனக்கு ஏன் இந்த சோதனை? உன் தரிசனம் கிடைக்குமா?' ஒரு நாள் போயிற்று. மறுநாள் என காலம் கடந்தது. அசையாது அமர்ந்திருந்தார்.

வேங்கடவன் பொறுப்பானா? மனித உருவுடன் பக்தன் முன் நின்று, ‘அன்பனே! கண் திறந்து பார்’ என கூற, பைராகி பார்த்தார். தன் முன் ஒரு மனிதன் நிற்பதை. நல்ல களையான முகம். பளபளவென கருமையான சுருள் கேசம். தூய உடைகள். மெத்த படித்த மேதை, பண்டிதன் போல் தோற்றம்.

"ஐயா! வணக்கம். நான் திருமலையப்பனை நினைத்து கண்மூடி தியானம் செய்து கொண்டிருக்கிறேன். மனித வாடை இல்லாத இடமாக, நான் தனித்து இருந்து தியானம் செய்கிறேன். இந்த இடம் எனக்கு நிம்மதி தருகிறது. தொந்தரவு செய்யாதீர்கள். தங்கள் கேசம் மிக அழகாக இருக்கிறது. உடையோ பளிச்சென மின்னுகிறது. உங்கள் முக வசீகரம் என்னை மயக்குகிறது. பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்களை கோயில் காவலர்கள் தடையில்லாமல் உள்ளே அனுமதிப்பார்கள். நிம்மதியாக இரவு ஓய்வெடுத்து விட்டு, காலையில் கோயில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வாருங்கள். என்னை தொந்திரவு செய்யாதீர்கள்."

 மறுபடியும்  கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தார். பகவானும் மகிழ்ந்து, ‘அன்பனே!’ என மறுமுறை கூப்பிட, பைராகி "என்ன வேண்டும்? ஐயா!" என சலிப்படைந்தார். "காலையில் கோயிலுக்கு சென்று வாருங்கள், என சொன்னேனே. உங்களை தடையேதும் சொல்லாமல் அனுமதிப்பார்கள். போய் வாருங்கள்", படபடத்தார் பைராகி.

வந்தவரோ, ‘கண்மூடி என்னை கூப்பிடுகிறாய். கண் முன் வந்தால் ‘போ’ என விரட்டுகிறாயே. கண் மூடி என்னை கூப்பிடாமல் இருந்தால் நான் போய்விடுகிறேன்’, என சொல்லிவிட்டு தெய்வமே, என நின்றார்.

பைராகி மூளை மட்டும் வேலை செய்தது. நான் கண் மூடி பகவானை கூப்பிடுகிறேன். என் முன் நிற்பது ஒரு மனிதர். மேலும் தொடர்ந்தார். "என் சடையையும் உடையையும் பார்த்து கோயில் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். உங்களுடைய கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து, தடையேதும் சொல்லாமல் கோயில் உள்ளே அனுமதிப்பார்கள், என நினைத்து தான், காலையில் கோயிலுக்கு சென்று வாருங்கள் என கூறினேன். உங்களை இங்கிருந்து விரட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பகவானை தியானிக்க வேண்டும். என்னை மன்னியுங்கள்".

 ‘நான் தான் திருமலை தெய்வம், என நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்’.

"பகவான் என்றால் இன்னும் இரண்டு கைகள் இருக்க வேண்டும். சங்கு சக்கரம் வேண்டும், சுவர்ண கிரீடம் தரித்து, ஆபரணங்கள் மின்ன, பீதாம்பரதாரியாய் அல்லவோ காட்சி தர வேண்டும்". பைராகி படபடத்தார்.
'வா! வா! என மனதுள் துதித்து, வந்தவுடன் போ! போ! என வாயால் சொன்னால் எனக்கு உன் குறை என்னவென்று எப்படி தெரியும். பீதாம்பரதாரியாக காட்சி தர வேண்டும். இதோ இப்போதே பார்'. பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க உடன் சங்கு சக்கரதாரியாய், பீதாம்பரம் பளபளக்க காட்சியளிக்க பைராகி விழுந்து வணங்கி, தன் அறியாமையை மன்னிக்குமாறு வேண்டி நின்றார்.

‘அது போகட்டும். இப்போது என்ன வேண்டும். என்னால் முடிந்தால் செய்கிறேன்’. இது பகவானின் பேச்சு.

பைராகி இப்போது சிநேகபாவத்துடன் பேச ஆரம்பித்தார். "பகவானே! உன்னால் முடியாதது உண்டா? ஏன் இப்படி நாடகம் ஆடுகிறாய்?"

 ‘அன்பனே! உன்னிடம் உண்மையாகத்தான் பேசுகிறேன். உனக்கு பொய்யாமொழி புலவன், வள்ளுவன் குறள் ஒன்று சொல்லுகிறேன். கேள். ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’. பக்தனின் முயற்சிக்கு உழைப்புக்கு பலன் உண்டு. சிலசமயம் சிலவற்றை என்னாலும் முடியாது என விட்டுவிடுவேன். அது பற்றி விவாதம் வேண்டாம், இப்போது ஏதாவது கேள். மறுபடியும் சொல்கிறேன். என்னால் முடிந்தால் செய்கிறேன்’.

 பைராகிக்கு புதிர் புரியவில்லை.

 ‘பகவானே! உன் தரிசனம் கிடைத்தபிறகு எனக்கு ஏதும் தேவையில்லை. இந்த பிறவியின் பலன் கிடைத்துவிட்டது. மறுபடியும் கேட்பதனால் ஒன்று கேட்கிறேன். இப்போது என்னை கோயிலுக்குள் அழைத்துச் செல். அங்கே உன் அர்ச்சாவதார அழகை காணவேண்டும். பக்தர்கள் புடைசூழ உன் அழகை காண வேண்டும். இது சுலபமானது ஒன்றுதானே!’

பகவான் சிரித்தார். 'இப்போதுதானே சொன்னேன். என்னால் முடிந்தால் என்று. இப்போது கேட்டது என்னால் முடியாத ஒன்றுதான். இந்த இரவு நேரத்தில், கோயில் நடை சாத்தியபிறகு பக்தர்கள் கூட்டத்திற்கு என்ன செய்வது? சரி, நாளை காலை என்றாலும் யோசித்துப் பார். நான், உன் முன் சாதாரண மனிதனாய் தோன்றியபோது உடன் நீ நம்பவில்லை. சங்கு சக்கரதாரியாய் காட்சி அளித்ததும் நம்பிக்கை வந்தது. நான் சாதாரண மனிதனாய் கோயில் காவலாளிகளிடம் சென்றால், நிச்சயம் என்னை நம்ப மாட்டார்கள். சங்கு சக்கரத்துடன் சென்றாலும், அப்போதுகூட நாடக வேடத்துடன் வந்திருக்கும் நாடக மனிதன் என என்னை ஏசி விரட்டுவார்கள். ஏச்சும் பேச்சும் எனக்கு தேவையா? நான் இப்போது உனக்கு ஒரு வழி சொல்லுகிறேன். அது சம்மதமானால் அதன்படி நடக்கலாம்.'

"பகவானே! சரி என சொல்வதைத் தவிர எனக்கு ஏதும் தோன்றவில்லை."

'சரி, இனி தினமும் இரவு பூஜை முடிந்தபிறகு, நடை சாத்திய பிறகு, இங்கு மலையில் நீ எங்கிருந்தாலும் அங்கு வந்துவிடுகிறேன். இரவு முழுவதும் உன்னுடன் இருக்க சம்மதிக்கிறேன். விடியற்காலை, நடை திறப்பதற்கு முன் நான் திரும்பிவிட வேண்டும். உன் சம்மதம் என்ன?'

"பூரண சம்மதம். இந்த மலையை விட்டு நான் ஏன் இறங்க வேணும்."

 மறுநாள் இரவு வந்தது. பகவானும் சங்கு சக்கரத்துடன், சுவர்ண கிரீடத்துடன் வந்தார். வரும்போதே ஒரு நாடகத்தை நடத்தும் முடிவுடன் வந்தார்.

'அன்பனே! நேற்று இரவு முழுவதும் என் முன்னால் அமர்ந்து, என்னைப் பார்த்து, மகிழ்ச்சியுடன் இருந்தாய்! இன்றும் அப்படி என்றால் எனக்கு சலிப்பாகவும், சுறுசுறுப்பு என்பதே இல்லாமல் போகும். நான் வரும்போதே இரவு காவலாளிகள், தூங்காமல் இருக்க, விழித்திருந்து விளையாட வைத்திருந்த சதுரங்க காய்களை எடுத்து வந்திருக்கிறேன். நாம் இருவரும் இந்த பெரிய பாறையில் அமர்ந்து விளையாடலாம்’ என கூறி பகவான் நாடகத்தை ஆரம்பித்தார்.

பைராகியும் மகிழ்ச்சியுடன், "நான் இதுவரை காய் விளையாடியது இல்லை. ஆனாலும் பல கோயில் மண்டபங்களிலும், நதிக்கரை தங்குமிடங்களிலும் காய் விளையாடுவதைப் பார்த்து மனத்தளவில் பழகியிருக்கிறேன். பகவானே! வாருங்கள் விளையாடலாம். உங்கள் விருப்பமே என் பாக்கியம்."

சில நாழிகைகள் கடந்ததும், தான் நடத்த வந்த நாடகத்தின் அடுத்த பகுதியை ஆரம்பித்தார். ‘அன்பனே! உன் சடை உனக்கு பாரமில்லை. என்னைப் பார் சொர்ண கிரீடம் என்றாலும் அதற்கும் ஒரு எடை உண்டல்லவா? அதன் சுமை தலையை அழுத்துகிறது. ஆபரணங்கள் சுமையும் கூடுகிறது. இவைகளை களைந்து, பக்கத்தில் வைத்திருந்து, பிறகு காலையில் புறப்படும்போது, எடுத்துக் கொள்கிறேன்’, என கூறியவாறு மேல் அங்கவஸ்திரத்தை இரண்டாக மடித்துப் போட்டு, கிரீடம் முதல் எல்லா ஆபரணங்களையும் களைந்து வைக்க, பைராகியும் "இதை நானே சொல்லலாம் என நினைத்தேன். பகவானே! தாங்களே செய்துவிட்டீர்கள். தங்கள் விசாலமான முன்நெற்றியும், கருமையான கூந்தல் கற்றையும் கண்டு மகிழ வேண்டும்’ என்ற எண்ணம் வந்தது. கேட்டால், நீ மட்டும் உன்னுடைய முடியை சடையை களையமாட்டேன் எனக்கூறி, கோயில் வாசலிலிருந்து வந்து, வேகமாய் மலையேறினாயே, நான் மட்டும் ஏன் சுவர்ண கிரீடத்தை துறக்க வேண்டும் என எதிர்க்கேள்வி கேட்டால் என்ன சொல்லுவது என பயந்தேன். இப்போது எனக்கு மிகவும் சந்தோஷம் தான்."
 தான் நடத்தும் நாடகத்தில் பக்தனும் தன்னை மறந்து ஈடுபடுவதில் பகவானும் திருப்தி கொண்டு பொழுது புலரும் நேரம் வந்ததும், ‘ஆகா! நேரம் ஆகிவிட்டதே. கோயில் நடைதிறப்பதற்கு முன் போகவேண்டும்’ என எழுந்து நின்றவுடன் மறைந்து போனார்.

பைராகியும் அரைநொடி பிரமிப்புக்கு பிறகு, நிலைமையை  உணர்ந்தார். கோயில் நடை திறந்ததும், பகவான் இடுப்பு வேட்டியுடன், எந்த ஆபரணமும், கிரீடமும் கூட இல்லாமல், ஏன் மேல் அங்கவஸ்திரம் கூட இல்லாமல் காட்சி தருவார். பெரிய குழப்பம் ஏற்படும், என உணர்ந்து, அவசரமாய் அந்த அங்கவஸ்திரத்திலேயே எல்லா ஆபரணங்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு, கீழே இறங்கி கோயில் வாசலை அடைய விரைந்தார். அதுசமயம் கோயில் நடைதிறக்க, பெருமாள் கிரீடம், ஆபரணம் அனைத்தும் காணவில்லை. மேல் அங்கவஸ்திரம் கூட காணவில்லை. அதிலேயே அனைத்தையும் கட்டி எடுத்துப் போயிருக்க வேண்டும். ஒரே குழப்பம். அரச காவலாளிகள் பல திசையிலும் விரைந்தார்கள். முக்கியமான வீரர்கள் இருவர் குதிரையில் விரைந்து அரசரிடம் தெரிவிக்க பறந்தார்கள். பொதுமக்கள், பக்தர்கள் எவருக்கும் இந்த செய்தி தெரியாமல் இந்த தேடுதல் வேட்டையை தீவிரமாக்கினார்கள்.

கோயில் வாசலில்பெருமாள் வஸ்திர மூட்டையுடன் பைராகியை பார்த்ததும், காவலாளிகள் விரைந்து சூழ்ந்து கொண்டார்கள். கையும் களவுமாக பிடித்துவிட்டோம் என அவர்கள் சந்தோஷப்பட பைராகி பாடு திண்டாட்டமாகி விட்டது. பெருமாள் அவசரத்தில் விட்டுவிட்டு வந்த ஆபரணங்களை கொண்டு வந்து கொடுக்க வந்தேன், என எல்லா விபரங்களையும் பைராகி சொல்ல, காது கொடுத்து கேட்க ஆளில்லை.

பெருமாளாவது நேரில் வருவதாவது. ஏதோ மாய மந்திரம் செய்து திருடிவிட்டு, அகப்பட்டுக் கொண்டவுடன் கதை சொல்லுகிறார். பெருமாள் தன் ஆபரணங்களை பத்திரமாக இவரிடம் கொடுத்தது போலும், இவர் காலையில் திரும்பக் கொடுக்க வந்தது போலவும் பேசுகிறாரே! பல பல கூக்குரல்கள் காவலாளிகள் மத்தியில். பைராகியின் வார்த்தையை கேட்க ஆளில்லை. ஆபரணங்களை சரிபார்த்து, கோயில் உள்ளே சேர்த்த பிறகு, பைராகியை கோயில் முன் இருந்த பண்டார அறை ஒன்றை காலி செய்து சிறை வைத்தார்கள். இரவு வந்ததும், காவலாளிகள் இருவர் மட்டும் பைராகியின் வார்த்தைகளை கேட்டு, இவர் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். பல வருடங்கள் எல்லாவற்றையும் துறந்து, சடைமுடியுடன் திரியும் இவர் ஏன் திருடப்போகிறார்? இவரால் எப்படி பல காவல்களை மீறி, கோயில் உள்ளே செல்ல முடியும்? அந்த இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பைராகி மீது அனுதாபம் ஏற்பட்ட பின் இரவில் பைராகியுடன் பேச்சுக் கொடுத்து, ‘பெரியவரே! நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். ஆனால், பல காவலாளிகள் உங்கள் கையில் இருந்த ஆபரண மூட்டையை பார்த்து, கையும் களவுமாக பிடித்ததாக சொல்லி வருகிறார்கள். அரசர் நாளை வந்ததும், சந்தர்ப்ப சாட்சிகள் உங்களுக்கு பாதகமாக இருப்பதால், அரச தண்டனை, அநேகமாக மரண தண்டனையாகக் கூட இருக்கலாம். பெருமாள் நேரில் வந்து சாட்சி சொல்வாரா என தெரியாது. ஏதும் புரியவில்லை. நீங்கள் சொன்னது போல், இன்று இரவு நிச்சயம் உங்களை தேடி பெருமாள் வருவார். ‘பெருமாள் வந்ததும் இதோ இருக்கும் கட்டு கரும்புகளை சாப்பிடச் சொல்லுங்கள். பார்ப்போம், உங்கள் பெருமாள் சாப்பிடுகிறாரா’ என்று. கோபமாக சத்தமிட்டு சென்றாரே தலைமை காவலர், அவர் அதட்டலுக்காக, பெருமாள் ஏதும் செய்யப் போவதில்லை. ஆனால், நீங்கள் கேட்டுக் கொண்டால் ஏதும் நடக்கலாம். நாங்கள் இருவர் மட்டும்தான் இரவு காவல். பெருமாள் வரும்போது கட்டு கரும்புகளை சாப்பிடச் சொல்லுங்கள். நாங்கள் சாட்சி சொல்கிறோம். பெருமாள் எல்லோர் முன்பாக வருவார் என எதிர்பார்ப்பது சரியில்லை. புண்யபலன் இருந்தால் தரிசனம் கிடைக்கும். நீங்கள் ஆகாரம் ஏதும் வேண்டாம் என கூறிவிட்டீர்கள். நாங்கள் வாயிலில் காவல் தொடர்கிறோம்’. காவலர்கள் சென்றார்கள்.

இரவு வந்தது. பைராகி முன் பெருமாள் பிரசன்னமானார். பைராகி வணங்கி வரவேற்றார். நடந்ததை முழுவதுமாக விபரித்துவிட்டு, "பகவானே! நான் இவர்களிடம் ஏதும் வாதம் செய்யப்போவது இல்லை. மரணத்தைப் பற்றி கவலை இல்லை. உன் தரிசனம் கிடைத்தபிறகு எனக்கு ஏதும் தேவையில்லை. ஒரு வருத்தம் மட்டும் உண்டு. பகவான் பிரசன்னமாவார் என்பதை யாரும் நம்பவில்லை. கோயில் விக்ரகத்தில் மட்டும் தான் உன்னை காண முடியும் என்றும், மற்றபடி உன்னை உணர முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள். உன் தரிசனம் கிடைக்கப்பெற்ற எனக்கு ஏன் திருடன், பொய்யன் என பெயர் வருகிறது. மரண தண்டனை நிறைவேற்றினால் திருடன் என்ற பெயர் மட்டும் நிலைபெற்று விடும். என்ன தவறு செய்தேன் இந்த அவப்பெயர் வருவதற்கு?"

'அன்பனே! அனாவசியமாக கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே. இப்போது, நேற்று போல் முதலில் சொக்கட்டான் விளையாடுவோம்.'

பைராகிக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஒரு ஈடுபாடும் இல்லாமல் காய்களை நகர்த்தினார்.  பெருமாள் நடுசாமத்தில் மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார். 'உனக்கு நான் ஏதாவது செய்யவேண்டுமானால் சொல். என்னால் முடிந்தால் செய்கிறேன்.'

பைராகி விரக்தியாய் சிரித்தார். "பகவானே! உன்னை தரிசித்த பிறகு எனக்கு ஏதும் வேண்டாம் என முன்பு சொன்னேன். ஏதாவது கேள் என சொல்லி, நான் கோயில் உள்ளே வந்து உன் அர்ச்சாவதார உருவை காண வேண்டும் என்றேன். அவர்களிடம் போய் நான் ஏதும் கேட்கமுடியாது என ஏதோ காரணங்களை கூறி மறுத்து விட்டாய். பிறகு நடந்ததெல்லாம் தெரிந்த விஷயம்தானே. நான் எதை கேட்பது? அது உன்னால் முடியும், முடியாது என எனக்கு ஏதும் தெரியாது. உன்னை மறுமுறையும் சங்கடத்தில் ஆழ்த்த என் மனம் சம்மதிக்கவில்லை."

'கேட்பது உன் உரிமை. முடியும் முடியாது என்பதை தெரிவு செய்வது என் கடமை. உன் முயற்சியை ஏன் நிறுத்த வேண்டும். எது வேண்டுமோ அதை கேள்.'

காவலர்கள் சொன்னது ஞாபகம் வர, "இங்கு காவல் புரியும் இரண்டு காவலர்கள் மட்டும் உன்னையும், கூடவே என் வார்த்தைகளையும் நம்புகிறார்கள். இதோ அறைக்கு வெளியே இருக்கும் கட்டு கரும்புகளை பகவானை சாப்பிடச் சொல். நாங்கள் உனக்காக சாட்சி சொல்கிறோம், என்றார்கள். உனக்கு பக்குவமாக தோல் சீவி, சிறு துண்டுகளாக ஏதோ கொஞ்சம் கரும்பு கொடுத்தால், அது சரி. அதை விடுத்து கட்டு கரும்பை சாப்பிடு என சொல்ல எனக்கு நா எழவில்லை. எனக்கு தண்டனை எது கிடைத்தாலும் பரவாயில்லை. உன்னை சிரமப்படுத்த எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ‘கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே’ எனச் சொன்ன உனக்கு எது சரியோ, அதுவே எனக்கும் சரி."

‘கட்டு கரும்பை சாப்பிட வேண்டும். இது சுலபமானதுதானே. மறுபடியும் சொல்கிறென். கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே’.  பொழுது புலரும் நேரம். அறைக்கு வெளியே வந்த பகவான் பெரிய யானை உருவம் எடுத்தார். கரும்பு கட்டுகளை லாவகமாக துதிக்கையால் அவிழ்த்து, கரும்புகளை முறித்து சாப்பிட ஆரம்பித்தார். பைராகி மெய்மறந்து, கைகூப்பி நின்றார். சிறிது நேரத்தில் கரும்பு கட்டுகள் காலி. சந்தோஷத்தில் யானை வேகமாய் பிளிறியது. காவலர்கள் எழுந்து பார்த்தார்கள். பூட்டிய கம்பிக்கதவுகளுக்கு பின் யானை நிற்பதையும், கரும்பு கழிவுகள் சிதறியிருப்பதையும் பார்த்து, பகவான் தான் யானை உருவில் வந்து கரும்புகளை சாப்பிடுகிறார், என உணர்ந்து அப்படியே கீழே விழுந்து வணங்கினார்கள்.

அரசர் மலை ஏறி வரும் ஆரவாரம் தெரிந்தது, உடனே ஓடி, அரசரிடம், 'பிடித்து வைக்கப்பட்டவர் திருடர் இல்லை. பகவானின் பரம பக்தர். பகவான் அவர் வேண்டுகோளுக்கு இணங்க, யானை உருவம் எடுத்து கரும்பு கட்டுகளை சாப்பிடுகிறார். உடனே வாருங்கள்', என முழு விபரமும் தெரிவித்தனர்.

அரசரும் அவசரமாய் ஓடி வந்து பைராகி சிறை வைத்திருக்கும் இடம் வந்து பார்த்தார். அங்கு யானையைக் காணோம். ஆனால், கரும்பு கழிவுகளும், யானை லத்தியும் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன.  எல்லாவற்றையும் நொடியில் புரிந்து கொண்டு பைராகியை பார்த்து, தன்னை மன்னிக்கும்படியும், தானே அவரை கோயில் உள்ளே பெருமாளை தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாய் கூறினார்.  பொழுது புலர்ந்த நேரத்தில், ராஜமரியாதையுடன் அரசர், அவர் பரிவாரம் சூழ பைராகி கோயில் வாசல் வந்ததும் அசரீரி ஒலித்தது.

'மன்னனே! உன் காவலர்கள் இருவர் மட்டும் நான் நேரில் வருவேன் என நம்பி, என் பரம பக்தனின் வார்த்தைகளையும் நம்பினார்கள். அவர்களுக்கு யானை உருவில் தரிசனம் தந்தேன்.   மன்னனே! என் கட்டளைகள். முதலாவது, என் பக்தன் இனி காலை கோயில் நடை திறந்ததும், இரவு அர்த்தசாமம் வரையிலும் எப்போது வேண்டுமானாலும் தங்கு தடையில்லாமல் வந்து என்னை தரிசனம் செய்யலாம். அடுத்து, அரசு நைவேத்தியம் காலையில் முதலில் எனக்கு சமர்ப்பிக்கப் படுகிறது. அதற்கு முன் இந்த பக்தன் எது கொடுத்தாலும், அது காயோ, கிழங்கோ, பாலோ, பழமோ அதுதான் முதல் நிவேதனம்.  முடிவாக, என் சந்நிதி முன்பாக வலதுபுறம் இருக்கும் மேட்டில் இந்த பக்தன் தங்க வசதி உன்னால் செய்து தரப்பட வேண்டும்.'

மன்னனும், கூடியிருந்தவர்கள் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் சொன்னான்.  ‘பகவானே! உன் தரிசனம் கிடைக்கவில்லை. வருத்தம்தான். ஆனாலும் உன் கட்டளைகளை காதால் கேட்டு நிறைவேற்றும் பாக்கியம் கிடைத்ததில் மிக மிக சந்தோஷம்’.  உடன் நடைமுறைப்படுத்தினான், அரசன்.

இன்றும் ‘ஹாதிராம் பாபா மடம்’ என்ற பெயரில் பெரிய கட்டிடத்தை கோயிலின் வலது பக்க மேட்டில் காணலாம். பல பசுக்கள் அங்கு கோசாலையில் பராமரிக்கப்படுகின்றன. இன்றும் விடியற்காலை திருமலையப்பனுக்கு முதல் நிவேதனமாக அந்த மடத்திலிருந்து ‘பசுவெண்ணை’ தினமும் மேள, தீப (தீவட்டி) மரியாதையுடன், சமர்ப்பிக்கப்படுகிறது.

நிறைவாக இந்த வரலாறு எனக்கு கிடைத்த விபரம் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் நன்றி மறந்தவனாவேன். என் நிலையிலிருந்து ஆரம்பித்து, திருவேங்கடவன் பக்தர் யார் ஒருவர் வாயிலாக இவற்றை அறிந்தேனோ, அவரைப் பற்றியும், நடந்த சூழ்நிலை பற்றியும் கீழே தருகிறேன்.

எனது அறுபது வயது பூர்த்தியானதும், ஒரு வருடம் தீட்சை வளர்த்து, வருட முடிவில் திருமலை சென்று முடிகாணிக்கை கொடுப்பதாக பல வருடங்களுக்கு முன் எடுத்த பிரார்த்தனைப்படி, சரியாக ஆங்கில தேதி 14, அக்டோபர் 2000 அன்று எதிர்பாராதவிதமாக, என் மனைவி, எனது மூத்த மகன், அவன் மனைவி, அவள் தாய், தந்தையுடன் திருமலையை அடைந்தேன். கல்யாண உற்சவத்தில் அமர்ந்திருந்தபோது, யாரோ ‘இன்று தேதி அக்டோபர் 14’ எனக் கூற, என் பிரார்த்தனை உடன் ஞாபகம் வர, அன்றிலிருந்து தீட்சை வளர்க்க ஆரம்பித்தேன். ஒரு வருட பூர்த்தியில், அக்டோபர் கடைசியில் திருமலை யாத்திரை தொடங்குவதற்கு பதில், உறவினர் சிலர் யோசனையின் பேரில், புது வருடம் பிப்ரவரி 2002-ல் திருப்பதி செல்லலாம் என முடிவெடுத்தோம். காரணம் அக்டோபர், நவம்பர் மழைக்காலம். டீசம்பர், ஜனவரி குளிர்காலம்.

ஆனால், நவம்பர் (2001) வாக்கில், கைசிக ஏகாதசிக்கு முன் ஞாயிறு அன்று, என் உள்மனம் ‘இன்று புறப்பட்டு திருப்பதி செல். உன் பிரார்த்தiயை உடன் செலுத்து’ என கூற, அன்று மதியம் புறப்பட்டேன்.  திருச்சியிலிருந்து புறப்பட்ட திருப்பதி விரைவு ரயிலில் பயணம். மாயவரத்தில், நடுத்தர வயது அன்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் ஒரு தங்க, வைர வியாபாரி. ‘சேட்’ வகுப்பினர். அவர் திருமலையப்பனின் பக்தரில் ஒருவர். அவர் பணிவு, அடக்கம், பக்தி பற்றி சொல்வதானால் சில பக்கங்கள் தேவைப்படும். அவர் பல கோயில்களுக்கும், பல மகான்கள் சமாதி அடைந்த தலங்களுக்கும் போய் வந்தவர். திருப்பதி மண்ணை அடைந்ததும் அவர் கூறியது, ‘நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள். நானும் அப்படியே. வயதில் பெரியவரான உங்களுக்கு உதவியானவற்றை நான் செய்கிறேன்’ எனக் கூறி எனக்கு வழிகாட்டியாக இருந்து, சுவாமி தரிசனத்துக்கான உதவிகளையும் செய்தார். மேலும், அவர் கூறியது, நான் சுவாமி தரிசனம் செய்யும் முன்பாக, இங்கு இருக்கும் பசு மடத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுத்துவிட்டு, பிறகு காலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம், என கூறி தீவனத்துடன் மடத்திற்கு (ஹாதிராம் பாபா மடம்) அழைத்துச் சென்றார்.

கைசிக ஏகாதரி இரவு அங்கு நடந்த பூஜை முடிவில், சிறு கரும்பு துண்டு மட்டும் பிரசாதமாக கொடுக்க, ஏன்? என்ற கேள்விக்கு விடையாக இந்த வரலாறு முழுவதும், அன்று பின்னிரவு அவர் கூற, என் மனதில் பதிந்தது.
இது நடந்தது 2001, நவம்பர் மாதம், கைசிக ஏகாதசி அன்று. அநேக தமிழ் அன்பர்கள் அந்த மடத்தின் பெயரை பார்த்தாலும், அது வடஇந்தியர் வந்தால் தங்குவதற்கான ‘தங்குமிடம்’ என்று நினைத்திருக்கலாம். ஆனால், அந்த மடத்திற்கு இப்படி ஒரு மகான் வரலாறு இருப்பதை பலரும் அறிய வாய்ப்பில்லை. தமிழர் பலர் அறியச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மாயவரம் அன்பருக்கு செய்யும் மரியாதையும் கூட.

கைசிக ஏகாதசிக்கு முன் ஞாயிறு அன்று என் உள்உணர்வு கூறியது ஏன்? இப்போது தெரிகிறது. ‘மாயவரத்தில் என் பக்தன் ஒருவன் உனக்கு வழித்துணையாக வந்து சேர்வான். உன் எதிரில் அமர்ந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, திருமலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்னை தரிசனம் செய்ய வந்த ‘பாபா’வின் வரலாறு முழுவதையும் கூறி, பாபாவின் மடம், சமாதி என உன் கண் முன் காட்டுவார். இது பகவானின் சங்கல்பம்.

இதற்கு மேலும் முக்கியமான காரணம் ஒன்று இருந்தது. மூன்று மாதம் சென்றதும் அதை உணர்ந்தேன். பிப்ரவரி, 17-ம் தேதி, 2002-ல் நடந்தது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அன்று எனது தாயார் (85 வயது) இயற்கை எய்திய நாள். ‘ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்’ என திருமால் பக்தர்கள் கூறுவது. அந்த சரீரத்தில் உறைந்த ஜீவன், ஆச்சாரியன் வழிகாட்டுதலுடன் பகவான் பக்கம் போய் சேர்வதான நிகழ்வு, நம்பிக்கை. ஆமாம்1 பிப்ரவரி மாதம், தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னால் திருமலை வரமுடியாது. முடி காணிக்கை என்ற எளிமையான, பணிவான, பக்தி காணிக்கை, மன திருப்பதியுடன், சந்தோஷத்துடன் செய்ய வேண்டியது. மன அழுத்தத்துடன், ஒரு சோகத்துடன், மழித்துக் கொள்வதான செயலாய் திசை மாறாமல், திருமலை அப்பன் வழிநடத்த, கைசிக ஏகாதசி அன்று ‘திருமலை தெய்வம்’ தரிசனம் நடந்தது அவன் செயல்!