புதன், செப்டம்பர் 02, 2015

ஸ்ரீ ஒப்பிலியப்பன் தல வரலாறு

ஸ்ரீ:
ஸ்ரீ ஒப்பிலியப்பன் தல வரலாறு

 ‘என்றும் பதினாறு’ – உடன் மனதில் வருவது மார்க்கண்டேயர் வரலாறு. பரமேஸ்வரன் சிறுவன் மார்க்கண்டேயனுக்கு மரண பயத்திலிருந்து விடுபட அருளிய வரம்.   மார்க்கண்டேயன் தவமிருந்து பெற்ற பெயர். மார்க்கண்டேய மகரிஷி. மகரிஷிக்கு பெற்ற வரமே பாரமாக தெரிகிறது. இன்றும் என்றும் இப்பூவுலகில் இருந்து என்ன செய்வது? வைகுந்தம் ஏக வேண்டாமா?

நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டார். விஷ்ணுவிடம் வைகுந்தம் வந்தடைய வரம் கேட்பது குறிக்கோள். பகவான் பார்த்தார். பரமேஸ்வரன் அருளிய வரத்திற்கு முரணாக எப்படி வரம் தருவது? மகரிஷியின் முயற்சிக்கு, தவத்திற்கு பலன் கொடுத்தாக வேண்டுமே!
 ஸ்ரீ மகாலக்ஷ்மியை பார்த்தார். 'தேவி! உடன் சென்று மார்க்கண்டேய மகரிஷி தவம் செய்யும் துளசிவனத்தில் ஒரு சிறு குழந்தையாக அவதரி. அவசரமானதும் அவசியமானதும் கூட.'

மகாலக்ஷ்மி உடன் செயல்பட மகரிஷியின் தவச்சாலை அருகில், துளசிவனத்தில், சிறு குழந்தை. மகரிஷி பார்த்தார். சிறு குழந்தை. யார் பராமரிப்பது? குழந்தையை பூமியிலிருந்து வாரி எடுத்தார். மனம் முழுவதும் குழந்தையிடம். பூமாதேவி, என பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தார். இந்த பெண் குழந்தையை நன்கு வளர்த்து, ஒரு வரன் தேடி மணமுடித்து, ஒருவனிடம் ஒப்படைத்து விட்டால் … தன் உடனடி குறிக்கோள், கடமை அது என தோன்ற, கவனம் முழுவதும் குழந்தையை பேணி வளர்ப்பதில் செல்ல, அவர் தவ முயற்சி மட்டும் மனதில் மெல்லிய இழையாக ஓடியது.

 பெண்ணுக்கு கலைகள் பல கற்பித்தார். கவனத்துடன் கற்ற பெண்ணைப் பார்த்து பெருமிதம் கொண்டார். ஆனாலும், உணவு சமைப்பதில் அந்த அளவு கவனம் காணோம். அதிதி யாராவது வந்தால் சற்று கவனம், ஏதோ சுமாரன உணவு. மற்ற நாட்களில் ஏனோ தானோ என்ற சமையில். பல நாட்கள் உப்பு சேர்த்து சமைப்பது என்பதே கிடையாது. பலமுறை சொல்லிப் பார்த்தார். கல்வி கற்பதில் கவனமாய் இருக்கும் பெண், ஏனோ உணவு சமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒருக்கால், தான் தவம் இயற்ற சுவை ஒரு தடையாக இருக்கக்கூடாது என எண்ணி, வெந்ததும் வேகாததுமான, உப்புச்சுவை இல்லாத சாப்பாடோ என்னவோ! ஏதும் புரியவில்லை மகரிஷிக்கு. உப்பு சப்பில்லாத உணவை பழகிக் கொண்டார்.

ஒருநாள் வயோதிகர் ஒருவர் அதிதியாக வந்து சேர்ந்தார். வந்தவரை உபசரித்து, வளர்ப்பு மகளிடம் வாஞ்சையுடன் கூறினார். வந்திருக்கும் அதிதிக்கும் என உணவு தயார் செய், என்று. அதிதி என்றவுடன் பெண் பக்குவத்துடன் உணவு படைப்பாள் என்ற எதிர்பார்ப்பு.

வந்த அதிதிக்கும் மகரிஷிக்கும் உணவு பரிமாறப்பட்டது. ஆகா! என்ன சுவை! மகரிஷி தன் வாழ்நாளில் இப்படிப்பட்ட பலவகை உணவு பதார்த்தங்களை சுவைத்தது என்பதே கிடையாது. தன் பெண்ணுக்கு இப்படியும் சமைக்கத் தெரியுமா! மனம் பெருமிதப்பட்டது. இவளுக்கு ஒரு வரன் தேடி மணம் முடித்தால் தன் கடமை நிறைவுபெறும் என மனம் எண்ணியது.
வந்த அததி இவர் எண்ணத்தை அறிந்தாரோ என்னவோ! வந்தவர் மகாவிஷ்ணு என சிறு பெண்ணான மகாலக்ஷ்மிக்கு தெரியாதா என்ன! சாப்பிட்டு முடித்த பிறகு வந்த வயோதிக அதிதி பேச்சை ஆரம்பித்தார்.
தான் இதுவரை இவ்வளவு சுவையான உணவு உண்டதில்லை, என்று ஆரம்பித்தார். மகரிஷியும் மனத்துள் மகிழ்ந்து, ‘ஆமாம்! என் வளர்ப்பு மகளுக்கு இவ்வளவு பக்குவமாக, சுவையாக உணவு சமைக்க தெரியும் என இன்றுதான் தெரிந்து கொண்டேன்’, என்றார்.

 வந்த அதிதி தொடர்ந்தார். ‘எனக்கு உமது பெண்ணை மணமுடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் உண்டாகிறது. நன்றாக, சுவையாக உணவு சமைக்கும் இந்த பெண்ணை மணந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. உமது பெண்ணை, எனக்கு, வாழ்க்கைத் துணையாக தாரை வார்த்து தருவீரா?

இது கேட்ட மகரிஷிக்கு, தன் மகள் நன்றாக சமைக்க தெரிந்திருக்கிறாளே, என்ற சந்தோஷம் போய், இன்று இவள், ஏன் மிக சிறப்பாக, விசேஷமாக உணவு படைத்தாள். இதுவே இவளுக்கு பாதகமாய் போய்விடும் போல் தெரிகிறதே. சிறு பெண்ணான இவளுக்கு இதுகாலம் சுவையாக உணவு சமைக்கத் தெரியவில்லையே என கவலைப்பட்டேன். இன்றோ, இவள் ஏன் இவ்வளவு சுவையாக சமைத்தாள் என மனம் வருந்தும்படி ஆகிவிட்டதே. அமிர்தம் போல் இனித்த உணவு, நெஞ்சம் முழுவதும் கசப்பாய் படர்ந்தது. ஆமாம்! ஒரு வயோதிகனுக்கு எந்த தந்தை தான் தன் அன்பு மகளை மணம் முடிக்க விழைவான்?

 ஒருவன் புத்திரனை பெறாவிட்டால் நரகத்தில் வீழ்வான், என சொல்லப்படுகிறது. அதேசமயம், ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, கன்னிகையாக, ஒரு நல்ல மணாளனுக்கு வாழ்க்கைத் துணைவியாக, கன்னிகாதானம் செய்யாதவன் சொர்க்கம் செல்ல முடியாது, என்றும், மறுபிறவி எடுத்து பெண்ணை பெற்று, வளர்த்து, கன்னிகாதானம் செய்த பிறகு தான் அவனுக்கு மோட்சம் எனவும் கூறப்படுகிறது.

மகரிஷி மனத்துள் நினைத்தார். ஒரு பெண் குழந்தை துளசிவனத்தில், தவச்சாலை அருகில் கிடைத்தது. நன்றாகவே வளர்த்தேன். ஏனோ எதிலும் பிடிமானம் இல்லாமலும், அதேசமயம் விரக்தியின் விளிம்பில் போய் நிற்காமலும், நன்றாக வளர்ந்தாள். என் வரை குறையேதும் தெரியவில்லை. எதிலும் ஒரு பற்றும் இல்லை, விருப்பும் இல்லை. அதேசமயம் வெறுப்பும் இல்லை. பெண்ணைப் பற்றி மனதில் கோட்டை கட்டினேனே தவிர, அவள் மணவாழ்க்கை பற்றி, சிந்தித்து செயலாற்றவில்லை. வந்திருக்கும் அதிதி, பகவான் அருளால் எனக்கு பெண்ணின் திருமணத்தை நினைவூட்ட வந்தவர் போலும். அவர் கண்ணில் தெரியும் ஒளி என்னை நிமிர்ந்து அவர் முகத்தை பார்க்க தடுக்கிறது. எடுப்பான அவர் முகம், நாசி, அவர் உறுதியானவர், உண்மையானவர் என்பதை சாற்றுகிறது.

 இருந்தும் வந்தவரின் வயோதிகம், பெரும் தடைச்சுவராக தெரிகிறதே! இப்போது ஏதோ காரணம் சொல்லி வந்தவரை ‘போய் வாரும்’ என வழியனுப்பிவிட்டால், பிறகு பெண்ணுக்கு உடனடியாக வரன் பார்த்து மணமுடித்து விடலாம். யோசித்து வார்த்தைகளை ஒருமுறைக்கு இருமுறையாக சிந்தித்து சொன்னார்.

தவசீலரே! உமக்கு என் வணக்கங்கள் பல. இன்று அதிதியாக வந்து என்னை கௌரவித்தீர்கள். என் மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்தினீர்கள். மிக்க நன்றி. உங்கள் கண்களில் காணப்படும் ஒளி, என்னை நிமிர்ந்து உம் முகம் பார்க்க தடுக்கிறது. அந்த ஒளியின் பிரதிபலிப்போ என்னவோ, தங்கள் முன் கேசம் முழுவதும் வெள்ளி இழையாக மின்னுகிறது. காதுகள் இரண்டும் பல பல வேத கோஷங்களை கேட்டு கேட்டு சிவந்த இரத்தினம் இழைத்த பாத்திரம் போல் ஜொலிக்கிறது. காதோர கேசங்களும் வைர மாலையாய் மின்னுகிறது. தங்களை மறுபடியும் வணங்குகிறேன். தங்களுக்கு உகந்த மனப்பெண்ணாக என் மகள் ஈடாவாள், என்பதும் எனக்கு புரியவில்லை. அவள் இதுவரை பல வருடங்களாக உணவு சமைப்பதில் அக்கரை காட்டியது கிடையாது. பல நேரங்களில் அது ஒரு குறையா என்ற ரீதியில் நடந்து கொள்வாள். ஞாபகப்படுத்தினாலும் பொருட்படுத்துவது கூட இல்லை. இப்படிப்பட்ட பெண் தங்களுக்கு தகுந்த துணையாவாளா என்ற என் சந்தேகம் நியாயமானது தானே? தாங்கள்தான் இது குறித்து யோசித்து சொல்லவேணும். தங்களைப் போன்ற பெரியவர்க்கு தகுந்த வரன் அமையும். சிறுகுழந்தையான இப்பெண் உப்பிட்டு கூட பிரசாதங்கள் சரியாக சமைக்கத் தெரியாதவள் என முன்பே கூறினேன். தங்களுக்கு சுவையான பிரசாதங்கள் தயாரிப்பதில் அதிக அக்கரை இல்லாத இந்த சிறு பெண் தகுந்த மனையாள் ஆகமுடியுமா?

மகரிஷி பலவாறு யொசித்து வந்த அதிதியின் காலடியில் கூப்பிய கரங்களுடன் மண்டியிட்டு அமர்ந்தார். பெரியவரிடம் சரணடைவதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. அதேசமயம் இதுவரை பின்கட்டில் இருந்த வளர்ப்பு மகளும் அதிதியையும் மகரிஷியையும் வலமாக வந்து மகரிஷிக்கு எதிர்ப்புறம் தானும் மண்டியிட்டு கைகூப்பி அமர்ந்தாள்.

 மகரிஷிக்கு பெண்ணின் முகபாவத்திலிருந்து ஏதும் உணர முடியவில்லை. தந்தையே! தாங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி என்ற பாவத்தில் இருக்கிறாளா? அல்லது தந்தையும் மண்டியிட்டு கெஞ்சுகிறார். நானும் மண்டியிட்டு கெஞ்சுகிறேன், என்று சொல்லாமல் சொல்லுகிறாளா? ஏதும் புரியவில்லை.  வந்த அதிதியோ சிறிதும் தயங்காமல், மகரிஷியே! உங்கள் பதிலும் பணிவும் என்னை மகிழ்விக்கின்றது. நான் உதியாகச் சொல்கிறேன். இந்தப் பெண் உப்பே சேர்க்காமல் உணவு படைத்தாலும், அதை இன்று உண்ட அமுதம் போல் ஏற்பேன். கவலை வேண்டாம். திருமணத்திற்கு நான் சந்தோஷமாய் சம்மதிக்கிறேன். தங்கள் சம்மதம் தான் பூரணமாக வேண்டும்.

பணிவான வேண்டுகோள் தான். மகரிஷி மனக்கலக்கம் கொண்டார். முடிவாக, பரந்தாமனை, ஹரியை, நாராயணனை வேண்டுவது தவிர ஏதும் தோன்றவில்லை. உடன் தியானத்தில் உள்மனத்தில் உறையும் பகவானிடம் முறையிட்டார். உடன் மனத்தில் எதிரொலியையும் கேட்டார். மகரிஷியே! உம்முன் நிற்கும், அதிதியை, விருந்துண்டவரை, சற்று கண் திறந்து பாரும்.

கண் திறந்து பார்த்த மகரிஷிக்கு ஆச்சர்யம்! ஆனந்தம் ! ஸ்ரீ மகாவிஷ்ணு சங்கு சக்கரதாரியாக காட்சி அளிக்கிறார். அதே ஒளிவீசும் கண்கள். தன் கண்களுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது. சுற்றிலும் பரவும் ஒளி வெள்ளத்தின் ஊடே பகவானின் முக மண்டலத்தை முழுவதும் அனுபவித்து பார்க்க முடிகிறது. சற்று கண்களை தாழ்த்தி திருவடிகளை வணங்குமுகமாய் பார்த்தார். வந்தவர் மகாவிஷ்ணு என்றால் தன் வளர்ப்பு மகள் யார்? எதிர்ப்பக்கம் பார்க்க, ஸ்ரீமகாலக்ஷ்மி அமர்ந்த திருக்கோலம்.

 ஆகா! திவ்யதம்பதிகள் நடத்திய நாடகம். பல வருடங்களுக்குப் பிறகு இன்று நொடியில் புரிகிறது. உடன் மனத்தில் எழுந்த எண்ண அலைகளை பகவான் திருவடிகளில் சமர்ப்பித்தார்.

பகவானே! உன் திருவடிகளில் சரணம். நான் கேட்காமலேயே திருமகளை எனக்கு மகளாக தந்தீர். உரிய காலம் வந்ததும், பெண் கேட்டபோது, நான் தர மறுத்தேன். அது என் அறியாமை. ஒரு பொழுதில், திவ்விய தம்பதிகளாய் காட்சி அளித்தீர்கள். மிக மிக சந்தோஷம்.

மகரிஷியே! உமது பல நாள் தவத்தின் பலன் இது. வேண்டிய வரம் கேளும். தருகிறோம்!

மகரிஷி தொடர்ந்தார். எங்கும் நிறைந்த விஷ்ணுவே! வாசுதேவரே! என்னப்பனே! மணியப்பனே! பொன்னப்பனே! என் மகளாய் இதுகாறும் வளர்ந்த மகாலக்ஷ்மியை, நான் கன்னிகாதானம் செய்ய, நீர், உமது திருமணத்தை நடத்தித்தர அருள்புரிய வேண்டும். எனக்கு காட்சி அளித்தது போல இந்த தலத்தில், இந்த துளசிவனத்தில், அர்ச்சாமூர்த்தியாக இருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தியுடன் வணங்கும் அவர்கள் இக பர வாழ்க்கையில் வேண்டும் வரங்களையும் அருள வேண்டும்.

மகரிஷியே! வேண்டிய வரம் தந்தோம். இனி இந்த துளசிவனம், மார்க்கண்டேய ஷேத்திரம் என அறியப்படும். தாங்கள் இதுநாள்வரை உப்பில்லாத உணவை உண்டது போல், நானும் இந்த தலத்தில் உப்புச் சுவையை விடுத்து, பிரசாதங்களை அமுதமாக ஏற்கிறேன்.

‘இருக்கும் இடம் வைகுந்தம்’ என்ற சொற்படி இந்த தலத்தில் எனது வலது பக்கத்தில் பூமிதேவி அமர்ந்தும், இடது பக்கத்தில் நீர் அமர்ந்தும், அஞ்சலிசமேதராய் வணங்கிய கோலத்தில் இந்த ஷேத்திரம்விளங்கும். பூலோக வைகுந்தம் என பெயர் பெறும்.

ஸ்ரீ ஒப்பிலியப்பன் தல வரலாறை என் மனோதர்மத்துடன் எழுதியிருக்கிறேன். குறைகளை நிறை செய்து ஸ்ரீ ஒப்பிலியப்பன் ஏற்க வேண்டும்.