திங்கள், செப்டம்பர் 20, 2010

மெய்யும் பொய்யும்

மெய்யும் பொய்யும்

அரசர் அவையில் புலவர்கள் என்றால் அங்கு வாதம், விவாதம் இவைகளுக்கு குறைவு இருக்காது. அவையில் இரு புலவர்கள் வாதித்துக் கொண்டிருந்தார்கள். முதிய அரசவைப் புலவர் அடக்கமானவர், அமைதியானவர். அடுத்த தலைமுறைப் புலவரோ வயதில் இளையவரானாலும் அறிவில் முதிர்ந்தவர்தாம். இருந்தாலும், அவருக்கு துடிப்பானவர் என்ற பெயருடன் துடுக்கானவர் என்ற பெயரும் சேர்ந்தே வழங்கி வந்ததும் உண்மை.

ஒரு வாதத்தின் முடிவில் எதிர்பாராத திருப்பமாக, இளையவர் முதியவரைப் பார்த்து, “ஆக, தாங்கள் மெய்யை பொய்யாக்க வல்லீர்தாம்” என்று உரைத்தார். அவையில் பலருக்கும் அதிர்ச்சி. சூழ்நிலை சற்று இருக்கமானது போல் உணர்வு. எல்லோர் கண்களிலும் பெரியவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற கேள்வி விரிந்து நின்றது. அரசரும் மனத்துள் அவையை அளந்த போதும், அமைதி காத்து, முகத்தில் எவ்வித சலனமும் இல்லாது, கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

தலைமைப் புலவர் அமைதியாக எழுந்து வந்து, முகத்தில் புன்னகை தவிழ, எதிர் வரிசையில் அமர்ந்திருந்த புலவரை அழைத்தார். அவரும் எழுந்து வந்தார். இருவரும் எதிரும் புதிருமாக அரசர் முன்பு நின்றனர். பெரியவர் நிதானமாக, மிக மெதுவாக, “தாங்களே வல்லீராக இருந்து போமே!” என இளையவரைப் பார்த்து சொன்னார்.

பொறுமை, நிதானம் குறித்து ஒரு சிறு கதை வழக்கில் உண்டு. எதிர் எதிராக இரண்டு பண்டிதர்கள், ஒரு வயல் வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். யாராவது ஒருவர், வயலில் சகதியில் இறங்கி வழி விட்டால் தான் மற்றவர் எதிர்ப்பக்கம் போக முடியும் என்ற நிலை. கர்வம் கொண்ட பண்டிதர், எதிரே நின்றவரிடம், “நான் புத்திசாலிகளுக்கு வழி விடுவது இல்லை” என்றார். 'வீண்வாதம் வழிக்கு உதவாது. அவசரமாக செல்ல வேண்டும். வரப்பிலிருந்து இறங்கி, வீண்பேச்சு எதற்கு என்று வழி விட்டால், 'சகதியில் இறங்கி நடப்பதுதான் தங்கள் புத்திசாலித்தனத்திற்கு அழகோ?' என்று ஏளனமும் செய்வார் இந்த கர்வம் கொண்ட பண்டிதர்', என்றெல்லால் ஒரு நொடியில் தீர்மானித்து, எதிரே வந்த பண்டிதர், “நான் முட்டாள்களுக்கு வழிவிடும் வழக்கம் உடையவன்” எனக் கூறி, பதில் ஏதும் எதிர்பாராது, வயலில் இறங்கி இரண்டு தப்படி முன் சென்று, வரப்பில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

கர்வம் மிகுந்த பண்டிதர், தன் முன்னால் தெரியும் பாதை முட்டாள்கள் பாதையோ என, வெறித்துப் பார்த்து நின்றார். கர்வம் மிகுந்து அகம்பாவம் கொண்டவரை, பொறுமை, நிதானம் கொண்டவர்கள் எதிர்கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு கதை. முன்னோர்கள் புனைந்துரைத்ததுதான். இது சிலரின் மனத்தில் வந்து போனது. 'மெய்யை பொய்யாக்குவதில் நீரே வல்லீராக இருந்து போம்' எனக் கூறி, வரட்டு வாதத்திற்கு ஒதுங்கி வழி விடுகிறாரோ எனத் தோன்றியது.

அரசர், 'ஒரு சுவையான வாதம் வரப் போகிறது என்று எதிர்பார்த்தோமே? புலவர் ஒரு வரியில் "நீரே வல்லீராக இருந்து போம்!" எனக் கூறிவிட்டாரே?' என்று எண்ணலானார்.

இளையவர் உற்சாகமாக, "ஆக நான் வல்லவன் என்று ஒப்புக்கொண்டு தங்கள் தோல்வியை உறுதி செய்கிறீர்களா?" என்றார். பெரியவர் நிமிர்ந்து பார்த்தார், கேட்டார், "எது வாதம்? எது தோல்வி".

"நான் கேட்டது, மெயை பொய்யாக்க வல்லீரோ? அது வாதம். தங்கள் வாயால் 'வல்லீராக நீரே இருந்துபோம்', என்ற பதில் தோல்வியை ஒப்புக் கொண்டது என்றாகிவிடவில்லையா?" இளையவர் படபடத்தார்.

"ஓகோ! அப்படியா? முன் நடந்த விவாதத்தின் தொடர்பாய், தங்களின் மெய்யான வாதங்களை, நான் பொய்யாக்கிவிட்டேன் என்ற கருத்தில் தாங்கள் ‘ஆக, தாங்கள் மெய்யை பொய்யாக்க வல்லீர்தாம்’ என்று கூறியதாகக் கொண்டேன். அதே போல தாங்களும் முயலலாமே என்ற கருத்தில், 'என்வாதத்தைப் பொய்யாக்க முயன்று பாரும்' என்ற பொருளில் 'தாங்களே வல்லீராக இருந்து போமே' என்றேன். அது போகட்டும். இப்போது 'மெய்யைப் பொய்யாக்க வேண்டும்'. இதுதானே தங்கள் வாதம்?"

"ஆமாம்!"

"நான் வாதத்திற்குத் தயார். அதற்கு முன் சில கேள்விகள் நான் கேட்கிறேன். தங்களால் பதில் தர முடியுமா?"

"என்னால் கேள்வி கேட்கத்தான் முடியும். பதில் தர முடியாது என நினைத்தீரோ? திருவிளையாடல் புராண புலவர் தருமி போல் அல்ல நான். கேள்விகளைக் கேளும். உடன் பதில் தருகிறேன்."

"நல்லது. என் முதல் கேள்வி. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?"

"பல வகைப்படும். உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய், இன்னம் குறில் - நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம்; இப்படியாக நீண்டு கொண்டே போகும். அது சரி ஏன் இந்தக் கேள்வி?"

"கேள்விதான் தெளிவைத் தரும் என்பதை தாங்கள் உணரவில்லையோ?"

இளையவர் சற்று யோசித்தார். அவருக்கு கேள்வியும் புரிந்தது. தான் தந்த பதிலில், முன்னம் தான் எழுப்பிய 'மெய்யைப் போய்யாக்க வல்லீரோ?' என்ற வாதத்திற்கான பதிலும் புதைந்திருப்பது புரிந்தது.

"சரி. பாதி கிணறு தாண்டி விட்டீர்கள். தங்களின் அடுத்த கேள்வி என்ன?"

"பாதி கிணறு தாண்டுவது என்பது வழக்கத்தில் பாதி வேலை முடிந்தது என்ற பொருளில் தவறாக உபயோகப்படுத்தப்படுகிறது. பாதி கிணறு தாண்டுவது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும். அதுபற்றி பிறகு விவாதிக்கலாம். இப்போது நான் சரியான கேள்வியைத்தான் கேட்டேன் என்று புரிகிறது இல்லையா?"

"சரி பதில் சொல்லுங்கள்: தமிழ் எழுத்துக்கள் வகை என்ன?"

"இது என்ன சம்பந்தம் இல்லாத கேள்வி?"

"கேள்வியில் தெளிவு தேடு".

இவர் 'பாதி கிணறு' என்கிறார்; அவர் சரியான வழி என்கிறார். இப்போது இந்த் விவாதத்தில் அடி எது, நுனி எது, ஏதூம் புரியவில்லை. பலரும் பலவிதமாக சிந்த்தித்தார்கள்.

அவைப் புலவர் தொடர்ந்தார். "சரி, தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்து, மெய் எழுத்து என இருவகைப்படும் எனப் பார்க்கிறோம். என் முன்னால் நிற்கும் புலவரே, உமது உடலில் உறைந்திருப்பது, மறைந்திருப்பது உயிர் என்றால், மெய் எது?".

"எனது சரீரம், உடல்தான் மெய்"

"சரியான பதில். எனது அடுத்த கேள்வி. வழக்கில் 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா', என்று கூறப்படுகிறதே, இதில் காயம் என்றால் என்ன?"

"காயம், உடலை, சரீரத்தைக் குறிக்கிறது"

"ஆக உங்கள் சரீரம், உடல், அதாவது என் முன்னால் நிற்கும் மெய், 'காயமே இது பொய்யடா' என்பது போல, 'மெய்யே இது பொய்' என்று ஆகிறது இல்லையா? 'மெய் - இது பொய்' - ஆக மெய்யை பொய்யாக்கி விடலாம்!"

இளையவர் தொடர்ந்தார்: "தாங்கள் மெய்யை பொய்யாக்க வல்லவர்தாம். அதே சமயம் என்னையும் பொய்யாக்கி விட்டீரே!"

அவைத் தலைவர் தொடர்ந்தார்: "தங்களுக்கு வருத்தம் வேண்டாம். பொய்யை மெய்யாக்கி விட்டால் புலவருக்கு மகிழ்ச்சிதானே!"

"தாங்கள் மெய்யைப் பொய்யாக்கி விட்டீர்கள். தாங்களே பொய்யை மெய்யாக்க வேண்டும்"

"சரி; சுருக்கமாகச் சொல்கிறேன். புனைந்து உரைப்பது புலவர் வழக்கு. புனைதல் என்றாலே கட்டுக்கதையானது, நடக்காதது, பொய்யானது என்று பொருள். அடுத்து உரைப்பது: உரை என்றால் விளக்கம், தெளிவு என்று பொருள். உரை கல்லில் தங்கத்தின் தரம், உண்மை தெரிகிறது. அதுபோல புலவர் உரை. புனைதல் என்ற பொய்யை உரைத்து, பொருள் விளக்கி, உண்மையை உணர்த்துவது உண்டு. ஆக பொய்யும் மெய்யாகிறது புலவர் வாக்கில்".

இதுவரை அரசர் அவையில் பார்வையாளராக இருந்தது போதும். மேற்கண்ட பொய்மெய், மெய்பொய் சுழற்சியின் தொடர்பாக ஒரு சிறு கதை கூறுகிறேன். சற்று சேரம் என்னுடன் வாருங்கள்.

ஒரு கிராமத்தில் பெரும் தனவான் ஒருவர் இருந்தார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல அவர் நல்ல திடகாரத்திடத்துடன் பலரும் வியக்கும் வண்ணம் சுறுசுறுப்பானவராகவும் இருந்தார். அவர் பண்டிதரும் கூட. அவரிடம் வந்த ஒருவர் 'தங்கள் இளமையின் ரகசியம் என்ன?' என்று வினவ, அவர் பதில் சொன்னார். "என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. நான் ஒரு திறந்த புத்தகம். இருந்தும் நீங்கள் கேட்பதற்கு என் பதில் இதுதான்".

"நான் ஓரடி நடவேன். ஈரடி நில்லேன். இருந்து உண்ணேன். கிடந்து உறங்கேன். இதுவே எனது மகிழ்வுக்குக் காரணம்".

கேட்டவர் திரும்பத் திரும்ப இந்த நான்கு வரிகளையும் அலசிப் பார்த்தார். ஏதும் புரியவில்லை. உண்மை தெரியவில்லை. ஒரு பண்டிதரிடம் போனார். அவரிடம் தான் தனவானிடம் கேட்ட கெள்வியையும், அவர் தந்த பதிலையும் கூறி, இதில் உண்மை ஏதும் புரியவில்லை. தனவானிடம் மறுமுறை கேட்ட போது, 'நான் உண்மையை உரைத்தேன்; உம் அறிவால் உணர்ந்து கொள்ளும்' என்று கூறி விட்டார். தாங்கள் எனக்கு உண்மையை உணர்த்த வேண்டும்' எனக் கேட்டார்.

அந்த பண்டிதர் தொடர்ந்தார்.

"முதல் வார்த்தை: நான் ஓரடி நடவேன். இதற்கு என்ன பொருள் கொண்டீர்?"

"நான் ஒரு அடி கூட நடப்பது இல்லை. இதுதான் புரிகிறது. ஆனால் அவர் தினமும் காலை, பொழுது புலர்வதற்கு முன்பே வயல்வெளிக்கு கால் நடையாகப் புறப்பட்டு விடுகிறார். மதியத்திற்கு முன்பாகவே, வேலைகளை முடித்துக் கொண்டு திரும்ப நடந்து வருவதை தினமும் பார்க்கிறேன். பின் ஓரடி நடவேன் என்றால் பொருள் என்ன?"

பண்டிதர் சொன்னார்: "அவர் சொன்ன உண்மையை நீர் உணரவில்லை. அவர் ஓரடி நடவேன் என்றது, உச்சி வெய்யில் ஒரு அடி நிழல் விழும் வேளையில் வெளியில் நடமாட மாட்டேன். எந்த வேலையையும் விடியலுடன் ஆரம்பித்து மதியம் வெயில் ஏறுவதற்கு முன் முடித்து வீடு திரும்புவேன் என்பது ஆகும்."

"அதே போல ஏரடி நில்லேன் என்பதும்! அவர் தினமும் குளத்தில் குளிர்ந்த நீரில் ஆழ அமிழ்ந்து குளிக்கிறார். வயலில் சகதியில் இறங்கி வேலை செய்கிறார். வேலை காரணமாய் தண்ணீரில் இருப்பது வேறு. ஈரப்பதமான இடத்தில் நிற்பது வேறு. ஈரமான இடத்தில் நின்றால் சீதம் தலைக்கு ஏறும். ஜலதொஷம் என்று ஆரம்பித்து பிரச்சனைகள் பல வரும். ஆக அவர் வெய்யிலும் வறுபட மாட்டார்; ஈர இடத்தில் நின்று குளிர்ச்சி தலைக்கு ஏறி உடல உபாதைக்கு வழி தரமாட்டார். பொருள் புரிந்ததா, அவர் உடலைப் பேணும் விதம்?"

"ஆகா! அப்படியா?"

"ஆமாம். 'இருந்து உண்ணேன்' என்பதையும் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன் எனப் பொருள் கொள்ளக் கூடாது. 'செல்வர்க்கு அழகு செழுங்கினைத் தாங்குவது'; 'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்'; 'தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்ற வார்த்தைகளின்படி அவர் தினமும் பல விருந்தாளிகளுடன் அமர்ந்து உணவு உண்கிறார். 'இருந்து உண்ணேன்' என்றால், தான் முதல் வேளை உண்ட உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் இருந்தால், அடுத்த வேளை உணவை உண்ண மாட்டேன், என்ற பொருளில் அவர் 'இருந்து உண்ணேன்' என்றார். ஆக, பசித்து புசி என்பதை தவறாமல் கடைபிடிக்கிறார்."

"ஆகா!"

"அடுத்து 'கிடந்து உறங்கேன்' என்பது. நாம் பழகும் பலரும் 'எனக்கு இரவு தூக்கம் வருவது இல்லை. இரவு முழுவதும் அனேகமாக விழித்துக் கிடக்கிறேன்; விடியற்காலை சிறிது தூங்கினேன்' என்பார்கள். ஆனால் அவர் பகல் முழுவதும் சரியானபடி உழைத்து, மன அமைதியுடன், சந்தோஷத்துடன் உணவு உண்டு, இரவு உறங்கப் போவது என்பது உடல் ஓய்வுக்காகத்தான். படுத்தவுடன் தூக்கம் என்பது அவர் பழக்கம். உறக்கம் வராமல் கிடந்து பிறகு உறங்குவது என்பது கிடையாது. 'கிடந்து உறங்கேன்' என்பதன் பொருள் அதுதான்."

"ஆமாம்! அழகான வார்த்தைகள்; பொருள் பொருந்திய வாக்கு"

"ஆமாம்! அந்த தனவான் தன்னிடம் அபரிமிதமான செல்வம் உள்ளது என்பதால் உழைக்காமல் இருப்பது இல்லை. உழைப்பே உடலை உறுதி செய்யும் என்பதை அறிந்தவர். அதே போல் 'உணவே மருந்து; மருந்தே உணவு' என்பார்கள். இதன் பொருள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். வைத்தியர் தரும் மருந்து, அவர் சொல்லிய அளவுப்படி, வேளைப்படி உட்கொள்ள வேண்டும். அளவு, வேளை குறைந்தால் வியாதி குணமாகாது. அளவு அதிகமானாலும் ஆபத்து. அதே போல உணவும் அப்படித்தான். அளவு குறைந்தால் உடல் வாடும். அதிகமானால், உடல் பெருத்து தன் சரீரத்தை தானே சுமையாக நினைக்கச் செய்து விடும்"

"ஒரு உபநிஷதத்தில் அன்னம் சொல்வது போல கூறப்பட்டுள்ளது. 'என்னை அளவாக உண்பவனை நான் காப்பாற்றுகிறேன். அளவுக்கு மீறி உண்பவனை, நான் சிறிது சிறிதாக சாப்பிட ஆரம்பிக்கிறேன்'. உணவை மருந்தைப் போல் சரியான அளவில் சாப்பிட வேண்டும். அல்லாது போனால், அவன் மருந்தை மட்டுமே உணவாக ஏற்கும் நிலை வரலாம், என்பதை சூசகமாக கூற 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பார்கள்."

"உடலுக்கு உழைப்பும், உணவும் சரியானபடி தேவை. அதே போல ஈட்டிய பொருளை, தான தருமம் செய்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, இம்மை, மறுமை பயனை அடையலாம். தான தர்மம், மன நிம்மதி, அமைதி தரும். வாழ்நாட்கள் இனிதாக கழியும்".

"பண்டிதரே! மிக்க நன்றி. புரியாத வார்த்தைகள் பொய்யாகத் தோன்றியது. பொருள் புரிந்ததும் உண்மை தெரிந்தது. மனமும் நிறைந்தது".