புதன், நவம்பர் 30, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - நான்கு

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும்
பகுதி நான்கு


எப்போதும் போல் அன்று இரவும் வந்தது. மறுநாள் பொழுதும் புலர்ந்தது. துரியோதனன் மன்னன் திருதராஷ்டிரனிடம் காலையிலேயே சென்று மாமா சகுனி சொன்னது போல் சொல்கிறான்.

மன்னன் திருதராஷ்டிரன் ஒன்றும் முழுமூடன் அல்ல. அவன் மனம் எண்ணுகிறது: 'துரியோதனன் சகுனியின் கையில் மற்றும் ஒரு காய்தான். இதை இவனிடம் எடுத்துச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. நாட்டை பிரிப்பது கூடாது. கிடைத்ததை வைத்து திருப்தி அடையலாம் துரியோதனன். அவன் காந்தாரி பிள்ளையாய் இருந்தால் இப்படி இருக்க மாட்டான். என் பிள்ளையல்லவா?

எனக்கு கண்கள் இல்லாமல் கிடைத்த இராஜ்யம் இவனுக்கு கண்கள் இருந்த்தும் கிடைக்காமல் போய்விடும் போல் தெரிகிறது. பேராசையோ அல்லது குரோதமோ. எது எப்படியோ. யுதிஷ்டிரனின் இராஜ்யத்தை சூதின் மூலம் கவர்ந்துவிட்டதாக இவனும் சகுனியும் நம்புகிறார்கள். யுதிஷ்டிரனைப் பற்றி இவர்கள் இருவரும் என்னதான் நினைக்கிறார்கள். தோற்றால் வனவாசம், ஜெயித்தாலும் ஒன்றும் கிடைக்காது. இது கூடவா புரியாது யுதிஷ்டிரனுக்கு? ஆனல் அவன் பெரியப்பா சொன்னால் சரி என்று சொன்னாலும் சொல்லி விடுவான். அப்படி சரி என்று யுதிஷ்டிரன் சொன்னாலும் சபையில் மற்றவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள்? நேற்று மௌனமே சிறந்தது என்று பலரும் இருந்து விட்டார்கள். இன்றும் அப்படியே இருந்துவிடுவார்களா? யுதிஷ்டிரன் இந்த சூதாட்டத்திற்கு சரி என்று சம்மதம் கூறிவிட்டாலும், மற்ற பாண்டு புத்திரர்கள், அதுவும் பீமன் இதை ஒப்புக் கொள்வானா? ஆனால் சபையில் யுதிஷ்டிரன் பேசும் போது சகோதரர்கள் நால்வரும் மௌனம் அனுஷ்டிப்பார்கள். நான் யுதிஷ்டிரனைப் பற்றி நினைப்பது இருக்கட்டும். துரியோதனன் என்னதான் நினைக்கிறான் யுதிஷ்டிரனைப் பற்றி?'

திருதராஷ்டிரன்: "துரியோதனா! யுதிஷ்டிரன் இந்த சோதனைக்கு உட்படுவானா?"

துரியோதன்: "தாங்கள் சொன்னால் நிச்சயம் யுதிஷ்டிரன் ஒப்புக் கொள்வான் - உடன் சரி என்று சொல்வான், என்று மாமாதான் சொன்னார்"

திருதராஷ்டிரன்: "ஓகோ! மாமாவிற்கு அவ்வளவு நம்பிக்கையா? எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. ஆனால் உனக்கு அந்த நம்பிக்கை இல்லை போல் தெரிகிறதே?"

துரியோதன் சங்கடத்துடன் ஏதோ முனகுகிறான்.

திருதராஷ்டிரன்: "சரி, சரி. துரியோதனா! சபைக்கு வா. யுதிஷ்டிரனைப் பற்றி கவலை வேண்டாம்”

முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)