திங்கள், நவம்பர் 28, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - இரண்டு

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்

பகுதி இரண்டு

திரௌபதி: "'மகளே!' என்று என்னை அழைத்து பெரியப்பா வரங்கள் தருவதற்கு முன்னால், சில விஷயங்களை யோசிக்க வேண்டும். தன் தம்பி மகன்களையே இந்த அவையில் அடிமைகளாய் நிற்கச் செய்து விட்டு, அவர்கள் மனைவியை மட்டும் 'மகளே' என அழைத்து வரம் தருவது முரணாய் இல்லையா? பெரியப்பாவை நான் மன்னிக்கலாம். ஆனால் பெண்மையை அவமதித்த இந்த அவையின் மன்னவரை, மொத்த பெண்மையின் சார்பில் நான் மன்னிக்க முடியுமா? இந்த ஹஸ்தினாபுரத்தின் ஒவ்வொரு பெண்ணும் மன்னித்தாலும், இந்த பரந்த பூமியில் இருக்கும் மற்ற பெண்கள், அவர்களால் உருவாக்கப்படும் சந்ததிகளும் மன்னிக்குமா? அவமானப்பட்டிருக்கும் திரௌபதி நீதி கேட்டு, மன்னர் திருதராஷ்டிரர் முன்னால், மற்றவர்கள் வாய்மூடி மௌனமாய் இருக்கும் போது தன் பக்கத்தைத் தானே எடுத்துச் சொல்லும் நிலையில் நிற்கிறாள். முதலில் 'என்னை இழந்து தன்னை இழந்தாரா?' என்ற என் கேள்விக்கு பதில் என்ன? தன்னை இழந்த பிறகு, என்மீது என்ன உரிமை இருக்க முடியும்? ஆக, நான் சுதந்திரமானவள் என்பதை அரசர் அறிவிக்கட்டும். பிறகு..."

திருதராஷ்டிரன்: "ஆமாம் மகளே! நீ சுதந்திரமானவள்தான். நெருப்பை யாராவது கட்டிப் போட முடியுமா?"

திரௌபதி: "இது போதும் மன்னரே, இது போதும். இந்த சபையில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ளட்டும். பாஞ்சாலி, பாண்டவர் ஐவர் அன்புக்கு மட்டும் அடிமை. மற்றபடி அவள் சுதந்திரமானவள், என்பதை. தாத்தா பீஷ்மர் 'மனைவியின் மீது கணவனுக்கு உரிமை உண்டல்லவா?' என்று வினா எழுப்பினார். பாவம்! தந்தைக்கு செய்யும் கடமையாய் நினைத்து தன் உரிமைகளை அடிமைப்படுத்தியவர் அவர். கணவன், மனைவி இவர்கள் உரிமை என்ன? கடமை என்ன? என்று அவர் அறிய வாய்ப்பில்லை. அது அவர் தவறல்ல. மன்னரே! நான் அடிமை அல்ல. என்னை அடிமைப்படுத்த நினைக்கும் இவர்களுடன் ஒரு முறையல்ல, இரு முறை பணயம் வைத்தாட அனுமதி தாருங்கள். இதுவரை இவர்கள் பணய பொருட்களைக் கேட்டதுபோல் நான் இருமுறை கேட்டு ஆட எனக்கு அனுமதி தாருங்கள்."

காந்தாரி: "மகளே! நீயும் தவறு செய்யப் போகிறாயா? சூதை சூதால் வெல்ல முடியுமா? அரசவையை சூதாட்ட களமாக பெண்ணான நீயும் ஆக்க முடியலாமா? உன்னைத் தடுக்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. ஆனால் இதை தவிர்க்கலாமே என்றுதான் எண்ணுகிறேன். கொஞ்சம் யோசி, மகளே!"

திரௌபதி: "சூதை இந்த மாதால் வெல்ல முடியும் என்று நிச்சயம் உணர்த்துவேன் ஹஸ்தினாபுரத்து அரசியே!"

காந்தாரி: "அரசி என்றழைக்காதே மகளே! நடப்பது எல்லாம் மேலும் மேலும் அச்சத்தையே உண்டு பண்ணுகிறது. அரசி அஞ்ச மாட்டாள். தாய் என்ற முறையில் மிகவும் அச்சப்படுகிறேன், மகளே!"

திரௌபதி: "தாயே! அரச சபைக்கு அவமானம் என்று மட்டும் நினைத்துத்தானே சூதாட்டகளமாக்காதே என்று என்னிடம் கூறினீர்கள்? தன் மருமளுக்கு இந்த பாதகர்கள் கூடி அரச சபையில் செய்த தீராத அவச்செயல், அதைக் காட்டிலும் நான் சூதாடுவது தவறா? தாயே! நான் சாபம் இடுவதை தடுத்ததின் மூலம் அழிவை ஒத்திப் போட்டுவிட்டீர்கள். ஆனால் என் அவமானத்தை துடைக்கவில்லையே? என்னை அனுமதியுங்கள்."

காந்தாரி: "உன்னைத் தடுக்க வேண்டும் என தோன்றவில்லை என்று முன்னே கூறிவிட்டேன். முடிவு உன்னுடையதுதான் மகளே!"

திரௌபதி மனத்துள் எண்ணுகிறாள்.

'பரந்தாமா! உன் அருளால் என் வஸ்திரம் வளர்ந்து மானத்தைக் காத்தது. இந்த துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய நீ முடிவு செய்யவில்லை. காரணம் கேட்டதைத் தரவேண்டும் என்று இருக்கலாம். கேட்காமல் தருபவனும் நீயேதான். உன் எண்ணத்தை யாரறிவார்? உன்னருளால் வளர்ந்த வஸ்திரம் எனக்காக, என்னுடனேயே இருக்க அருள்புரி. துர்த்தன் துச்சாதனன் கைசோர வளர்ந்த வஸ்திரம் என்னுடலோடு ஒட்டிவர அருள் புரி. (தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, திரௌபதி வஸ்திரத்தை உடலில் சுற்றிக் கொள்கிறாள்). இருமுறை ஆடுவேன் என மன்னனிடம் அனுமதி பெற்றுவிட்டேன். உன் அருளால் வெற்றி நிச்சயம். உன் சித்தம் எப்படியோ? என்னால் ஆன முயற்சி ஒருமுறைக்கு இரு முறை முயலுவது என்று இருமுறை ஆடுவேன்.

முதல் முறை தோற்றுவிட்டால் 'அடிமை ஆட அனுமதி இல்லை' என்று துரியோதனன் மற்றும் சகுனி விவாதம் செய்யலாம். இரண்டாம் முறை ஆட அரசர் அனுமதி முன்பே பெற்று விட்டேன். அடிமையானாலும் சுதந்திரத்திற்கு முயற்சி செய்ய அனுமதி உண்டு என வாதிடலாம். அப்படியே இரண்டாம் முறையும் தோற்றால் என்ன செய்வது? இந்த அடிமை முயன்றது போல் மற்ற ஐவரும் முயலலாம் என்ற கருத்தை அவை நடுவே எழுப்புவேன். அவர்கள் சூதாடி வெல்வார்களோ அல்லது போராடி வெல்வார்களோ, எனக்குத் தெரியாது. கோபாலா! உன்னிடம் வேண்டிக் கேட்கிறேன். எனக்கு ஆட்டத்தில் ஜெயம் உண்டாக அருள்புரி. பாண்டவர்கள் இப்போது போராடித்தான் பெற வேண்டும் என நினைத்தால் அதை எனக்காக தயவுசெய்து மாற்றிக் கொள். பிறகு வேண்டுமானாலும் போராடட்டும். இந்த அவையில் நடந்த இந்த இழிசெயல், பாரத பூமியெங்கும் இதோ பரவியிருக்கும். பெண்மையை மதிக்காமல் அவமதிப்பது, அதை பெண்ணான நானும் வாயைமூடி பொறுப்பது என்பது கூடாது. காந்தாரி நான் சாபமிடுவதைத் தடுததின் மூலம், இவர்களுக்கு உடனடி உயிர் பிச்சை கொடுத்துவிட்டார். நான் இபோது வெல்வது மொத்த பெண் குலத்திற்கே ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காக்க உன்னிடம் வேண்டி நிற்கிறேன், உன் சித்தம் என் பாக்கியம்'. இம்மாதிரி எண்ணி திரௌபதி மனத்துள் கண்ணனைத் துதிக்கிறாள்.

கர்ணன் துரியோதனன் பக்கம் திரும்பி: "நண்பா, மாமா பக்கத்தில் இருக்க ஜெயம் நமக்குத்தான். அடிமை இல்லை என இவள் வாக்கு சாதுரியத்தால் மன்னரை சொல்ல வைத்துவிட்டாள். நாமும் ஒருமுறைக்கு இரு முறை ஆடி இவள் அடிமை என்று ஊரறியச் செய்யலாம்."

சகுனி, துரியோதனன், துச்சாதனன் எல்லோரும் கோஷமாய் 'ஆட்டத்திற்கு நாங்கள் தயார்' என்று கூறுகிறார்கள்.

திருதராஷ்டிரனும் தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலையில் ஆகட்டும் என அனுமதி கொடுக்கிறான்.

திரும்பிய திரௌபதியைப் பார்த்து கர்ணன் "ஐந்து அடிமைகளின் மனைவியே! என் நண்பன் துரியோதனனுக்கு அடிமையாவதில் அவ்வளவு அவசரமா? இந்த ஆட்டத்தில் உன் கைவளை குலுங்கும் ஓசையைக் கேட்க நான் ஆவலாய் இருக்கிறேன். இந்த பட்டு மெத்தையில் உட்காருகிறாயா? அடிமையான பின்பு இந்த சுகமெல்லாம் கிடைக்காது" என்று கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் தோள்கள் வேகமாய் குலுங்கியது. பீமனின் பெருமூச்சு பெரிய பாறைகளை உருட்டிச் செல்லும் நதியோசை போல வருகிறது. இருவரையும் கைகளால் தடவி சாந்தப்படுத்துகிறார் யுதிஷ்டிரர்.

கண்களில் கோபத்துடன் திரௌபதி, கர்ணனை முகத்துக்கு நேரே பார்த்துக் கூறுகிறாள்: "அங்க நாட்டு முதல் அடிமையே! ஐவருக்கு நான் அடிமையா, இல்லை அவர்களுடன் நானும் அடிமையா என சூதாடித் தீர்மானிக்கப்படவில்லை. பானுமதியுடன் சூதாடி, கைவளையோசை கேட்டுக் கேட்டு, அடிமையான புத்தி அப்படித்தான் பேசும். பாஞ்சாலி இங்கு அமர்ந்து சூதாட மாட்டாள். கைகளாலும் பகடை உருட்டமாட்டாள். கால்களால்தான் உருட்டுவாள் - இது சத்தியம். இதை எல்லாரும் அறியட்டும்".


தன் நண்பன் கர்ணனை 'முதல் அடிமை' என்று திரௌபதி விளித்ததை துரியோதனன் ஆட்சேபிக்க விழைந்தான். சூதையும் பானுமதியையும் அவள் சேர்த்துக் கூற, பேசாமல் இருந்துவிட்டான்.

துரியோதனன்: "நீ காலால் ஆடினால் என்ன? கையினால் ஆடினால் என்ன? மாமா என் சார்பில் ஆடுவார். அதிகம் பேசாதே. ஆட்டத்தைத் துவக்கு."

திரௌபதி: "சூதின் கருவான காந்தார இளவரசர் ஆட்டத்தை முன்பு துவக்கினார். இப்போது நான் தான் ஆட்டத்தை துவக்கப் போகிறேன். தாங்கள் காயை என் காலடியில் வந்து வைக்கிறீர்களா? நான் கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன்."

துரியோதனன் (அவசரமும் ஆத்திரமும் கலந்த குரலில்): "மாமா காயை உன் காலடியில் வந்து வைக்கமாட்டார். அவர் இங்கு சூதாட்ட மேடையில் வைப்பதை உன் ஐந்து கணவர்களில், அதாவது இந்த அடிமைகள் யாரையாவது எடுத்து வந்து உன் காலடியில் வைக்கச் சொல்."

திரௌபதி பெரிதாகச் சிரிக்கிறாள். அந்த சிரிப்பு அங்கு கூடியிருந்த பலருக்கும் பெருத்த அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அது சாதாரண பெண்ணின் சிரிப்பாய் தெரியவில்லை. ஆயிரம் கரம் கொண்ட காளியின் சிரிப்பாய் தெரிகிறது. சபையில் நிசப்தம்.

சகுனி, தனது வலது மடியில் இருந்த காயை சற்று கலக்கத்துடன் சூது மேடை ஓரத்தில் வைக்கிறான்.

பாஞ்சாலி தன் விரித்த கூந்தலுடன், பரந்தாமன் அருளால் வளர்ந்த வஸ்திரத்தை மேலும் நான்கு சுற்று தன் மீது சுற்றிக் கொண்டு, மெதுவாய் மேடையை நோக்கி வருகிறாள். அரசசபையில் ஏற்பட்ட அவமானத்தில் வெளுத்த அவள் முகம் இன்னம் வெளிரி கணப்படுகிறது. கண்கள் சிவந்திருக்கின்றன. சபையில் நன்கு படர்ந்த வஸ்திரம், பரந்தாமனின் கருணையில் வளர்ந்த நீர்பொழியும் மேகம் போல் அங்கும் இன்கும் நீண்டு கிடக்கிறது. தன் கைவளை ஓசை ஏதும் எழக்கூடாது என்று, வளர்ந்த வஸ்திரத்தினால் உடலோடு கைகளையும் சேர்த்து மூடிய நிலையில் நடந்து வருகிறாள். சட்டென தனது வலது காலை தூக்கி சூதாட்ட மேடையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்களை வேகமாய் தட்டி விடுகிறாள். அது மன்னர் திருதராஷ்டிரர் வீற்றிருந்த சிம்மாசனத்தின் முதல் படியில் வேகமாய் மோதி கீழே விழுகிறது. திரௌபதியின் இச்செயல் பலரையும் துணுக்குறச் செய்கிறது. கர்ணன் இதை ஆட்சேபிக்கிறான்.

திரௌபதி: "அடிமை மன்னரே, சற்று அமருங்கள். இது எனக்கும் மாமா சகுனிக்கும் இடைப்பட்டது. நான் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கூறட்டும். பிறகு அரசர் நீதி வழங்கட்டும். நான் செய்தது சரியென்றால் 'ஆமாம்' அல்லது தவறென்றால் 'இல்லை' என்று இரண்டில் ஒன்றாய் சகுனி அவர்கள் பதில் கூறட்டும். என் கேள்வி, 'நான் மோட்சத்திற்கு பாதை காட்டினேன். இது உண்மைதானா? இல்லை, சிறுவண்டு இல்லையா?', பதில் கூறும் சகுனி அவர்களே."

சகுனி மிகவும் கலங்கிவிட்டான். ஆமாம் அல்லது இல்லை என்று கூற வேண்டிய கட்டம். தான் சிறுவண்டை 'அகஜ்ஜுவாலா' என்னும் மரத்தில் செய்த பகடைக்காயில் வைத்திருப்பதை, தெரிந்தே சொல்கிறாளா? தான் துரியோதனனுக்கும் கூட சொல்லாத இந்த ரகசியத்தை இவள் எப்படி அறிந்தாள்? இவள் எற்றிய வேகத்தில் காயில் இருந்த சிறுவண்டு நிச்சம் இறந்து போயிருக்கும். அதைத்தான் இவள் பூடகமாய் மோட்சத்திற்கு வழி என்கிறாள். ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லை என்று சொன்னால் 'சிறுவண்டு இல்லையா' என்று கேட்டு பகடைக்காயை உடைத்து சிறுவண்டை இந்த சபையில் காட்டினாலும் காட்டுவாள். தான் சங்கேதமாய் சொல்லியபடி காயின் உள்ளே நகர்ந்து சிறுவண்டுகள் பகடை எண்ணிக்கையை விழும்படி இதுவரை செய்தது எல்லோருக்கும் தெரிந்துவிடும். இதில் தோற்றுவிட்டோம். இனி என்ன செய்வது?

நொடியில் தீர்மானித்து சகுனி எழுந்து நின்று 'ஆமாம்' என்று தலை கவிழ்ந்து குற்றவாளி போல் நின்றான். துரியோதன், துச்சாதனன் முதலியோர்க்கு, சகுனியின் இந்த செயல் மேலும் பிரச்சனையை வளர்த்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை.

ஆனால் கர்ணன் சிந்தனை மட்டும் வேறு விதமாய் இருந்தது. திரௌபதி காயை காலால் எட்டி உதைத்ததை கண்ட துரியோதனன் கலக்கம் கொண்டான். ஆனால் தன்னை அடிமை என்று அவள் இருமுறை கூறிய போதும் காணாமல் இருந்துவிட்டானே? உண்மையில் தான் துரியோதனனின் அடிமையாய் நடத்தப் படுகிறோமா அல்லது தான் அடிமையாக நடந்து கொள்கிறோமா? ஏதும் தோன்றவில்லை கர்ணனுக்கு. 'ஆமாம்! தான் எந்த மூதாதையர் விட்டுச் சென்ற இராஜ்யத்தை ஆள்கிறோம், அல்லது எந்த மன்னனுடன் போர் புரிந்து வென்ற தேசத்தை கட்டியாள்கிறோம்? துரியோதனன் கொடுத்த அரசு அங்க தேசத்து அரசன் என்ற அடிமைப் பட்டயம். திரௌபதி பார்வையில் நான் அடிமைதான். அவள் பார்வை தவறா? மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?' கர்ணன் சுய சிந்தனையில் ஆழ்ந்தான்.

திரௌபதி: "காந்தார தேசத்து மன்னரே! ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?"

சகுனி ஆசனத்தை விட்டு எழ ஆரம்பிக்கிறான்.

துரியோதனன்: "மாமா! சற்று அமருங்கள். இவள் காயை எட்டி உதைத்தாள். ஏதோ கேட்டாள். ஆமாம் என்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டீர்கள். தற்போது காயை எடுத்துவந்து அவள் காலடியில் வைக்கப் போகிறீர்களா? கூடாது. இந்த ஐந்து அடிமைகளில் ஒருவர் அதைச் செய்யட்டும்."

திரௌபதி (திருதராஷ்டிர மன்னரைப் பார்த்து): "நல்ல வார்த்தை மன்னரே! காய்கள் தங்கள் காலடியில் இருக்கின்றன. குந்திபுத்திரர் காய்களை எடுத்து வர அனுமதி தருகிறீர்களா?"

மன்னன் திருதராஷ்டிரன் அரை குறையாய் நடந்தவற்றை கேட்டு மிகவும் கலங்கியிருந்தான். 'ஏதோ நமக்கு நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது. திரௌபதி தான் நினைத்ததை நடத்தப் போகிறாள். இந்த சபையில் நானும் ஒரு காய்தான். விதுரன் இது சவங்கள் வீற்றிருக்கும் சபை என்று முன்பே கூறிவிட்டான். பொருளில்லாமல் அவன் பேச மாட்டான். எது செய்யக்கூடியது, எது செய்யக்கூடாதது என்று ஏதும் புரியவில்லை. திரௌபதி காய்களை என்னை நோக்கித்தான் உதைத்தாளா? செய்த காரியத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் 'மன்னரே!'என்று அழைத்துக் கூறும் வார்த்தைகள் மரியாதையாய் தெரிகிறது. எது எப்படியோ! நடப்பது நடந்தே தீரும்', என்றவாறு அவன் சிந்தை ஓடியது.

திருதராஷ்டிரன்: 'யுதிஷ்டிரா! காய்களை நீயே எடுத்துக் கொடுக்கலாமே".

யுதிஷ்டிரர் மௌனமாய் நடந்து வந்து மன்னர் காலடியில் கிடக்கும் பகடைக்காய்களை இரு கைகளாலும் எடுக்கிறார். திரௌபதியும் பாதி வழி வரை யுதிஷ்டிரரை பின் தொடர்ந்து நின்று விடுகிறாள். திரும்பி வந்த யுதிஷ்டிரர் திரௌபதி முன்னால் காய்களை கையில் ஏந்தி நிற்கிறார். கண்களில் ஆறாய் பெருகும் கண்ணீரால், யுதிஷ்டிரர் கைகளில் உள்ள காய்கள் மீதும், அவர் கால்களிலும் இரு கைகளாலும் ஏந்தி தெளிக்கிறாள் திரௌபதி. தன் வலது காலை அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க, யுதிஷ்டிரரும் காலை மண்டியிட்டு, காய்களை அவள் வலது கால் மேல் வைக்க குனிகிறார். யுதிஷ்டிரர் குனிவதற்கு முன்பே திரௌபதி இன்னம் ஓரடி வந்து தன் வலது காலை சற்று மேலாகத் தூக்குகிறாள். யுதிஷ்டிரரும் தன் கைகளுக்கு நேரே தெரியும் அவள் காலின் மேல் காய்களை வைத்து தன் இரு கைகளாலும் அவள் பாதத்தை பற்றி பூமியில் படும்படி வைக்கிறார். யுதிஷ்டிரர் ஓரடி பின்னே நகர்ந்து நிற்க, திரௌபதியும் தன் வலது காலை சற்று மேலே தூக்கி முன்னும் பின்னுமாக ஆட்டி, காய்களை கைகளினால் உருட்டுவது போல உருட்ட ஆரம்பிக்கிறாள்.

சபையில் உள்ளவர்கள் யாவரும் என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் இருக்கிறார்கள். திரௌபதி யுதிஷ்டிரரை அவமானப்படுத்துவது போல் நடந்து கொண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை.

திரௌபதி: 'காந்தார மன்னரே! நான் ஆட்டத்திற்கு தயார். சூதிலும் ஒரு தர்மம் வேண்டும். நான் ஒரு எண்ணிக்கையைச் சொல்லி அது விழுந்தால் நான் வெற்றி பெற்றதாக வைத்துக் கொண்டால் எனது வெற்றி வாய்ப்பு பனிரெண்டில் ஒரு பாகம் தான். அதே சமயம் தங்கள் வெற்றி வாய்ப்பு பதினோரு பாகம். இதேபோல் தாங்கள் ஒரு எண்ணிக்கையை சொல்லி நான் காய்களை உருட்டினால் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு குறைவு, எனக்கு மிக அதிகம். ஒருவருக்கு மிக குறைவாகவும் மற்றவருக்கு அதிகமாகவும் வெற்றி வாய்ப்பு உள்ளது. இருவருக்கும் சரி சமமான வெற்றி வாய்ப்பு வேண்டும். சூதில் தேர்ந்தவரான தாங்கள் இதை சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இப்போது நான் ஒரு எண்ணிக்கையும், தாங்கள் ஒரு எண்ணிக்கையும் வெற்றிக்காக சொன்னால், இருவருக்கும் சம வெற்றி வாய்ப்பு உண்டு. இதில் ஏதாவது ஆட்சேபம் உண்டா?'

சகுனி: (மனதிற்குள்) 'இவள் புத்திசாலித்தனத்திற்கு முன் ஏதும் செய்ய முடியாது போல் தோன்றுகிறதே. தானாக பாதி, தன்னால் பாதி என்று இதுவரை நடந்த பாதகங்கள் யாவும் நம் பக்கத்திலிருந்து தான் வந்தவை. கர்ணன் குறுக்கிட்டு பேச, அவள் காலால் ஆடுவேன் என்றாள். துரியோதனனும் காலென்ன கையென்ன என்று கூறிவிட்டான். தவிர காயை அவள் காலடியில் வைத்திருந்தால் அதை அவளும் அவ்வளவு தூரம் மன்னர் சிம்மாசனம் வரை உதைத்திருக்க முடியாது. அதை கொலுமண்டபத்தின் முதல் படி வரை தான் எத்தியிருக்க முடியும். அப்போது காயில் உள்ள சிறு வண்டுகள் இறக்க வழியில்லை. மெத்தென இருக்கும் பட்டு மெத்தையின் மேல் வைத்த காய்களை அர்ச்சுனன் பாணம் போல் அரசர் காலடியில் விழச் செய்து விட்டாள். இதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. கர்ணன் மட்டும் ஏதோ முனகினான். அவளும் பதிலுக்கு அங்க தேசத்து முதலடிமையே, அமரும் என்று கூறி அதையும் முடித்துவிட்டாள்.

போகட்டும்! காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வரும் சாக்கில் சிறுவண்டு உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா? இறக்காமல் இருந்தால், வண்டின் துணையோடு ஆட்டத்தை வெல்ல முயலலாம். இறந்து விட்டாலும் பாதகமில்லை. கையில் காயை எடுத்ததும் சிறுவண்டு எந்நிலையில் இறந்திருக்கின்றன என்பதை நொடியில் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் எண்ணிக்கையை நாமே முன்னால் கேட்டு ஏதாவது சூது வாது செய்யலாம். இதையும் துரியோதனன் இடத்தை விட்டு நகராதே இன்று கூறிக் கெடுத்தான். வண்டு பிழைத்திருக்க வழியில்லை. திடீரென இவள் உதைத்ததால், எப்போதும் அவை இருக்கும் நிலையில் இறந்து போயிருக்கும். அப்படியென்றால் ஐந்து தான் நிச்சயமான எண்ணிக்கை. இவள் ஒரு நொடி காயை உருட்டுவதை நிறுத்தினாலும் ஏதாவது சூசகம் கிடைக்கும். ஏதாவது பேச்சுக் கொடுத்து இவள் காயை உருட்டுவதை நிறுத்த வைத்தால், காயைப் பார்த்து நிச்சயமான ஒரு முடிவிற்கு வரலாம்'. இவ்வாறு சிந்தித்து சகுனி மறுபடியும் எழுந்தான்.

துரியோதனன்: "மாமா! ஆசனத்தில் அமருங்கள். இவள் சொல்லும் யோசனையும் இவளைப் போலவே அழகாய் அல்லவா இருக்கிறது. முதல் ஆட்டத்தில் இவள் ஜெயித்தாலும் நமக்கு இரண்டாவது ஆட்டம் இருக்கிறது. அமர்ந்த படியே இவளுக்கு பதில் கூறுங்கள்".

சகுனி (மனதிற்குள்): 'இவனுக்காக விளையாடும், போராடும் நான் நம்பிக்கை குறைந்து, எப்படியோ என்னை நானே தேற்றிக் கொண்டு முயலுகிறேன். அவளும் காலிலுள்ள காயை சற்று நிறுத்துவதாகவும் தெரியவில்லை. இவனும் என்னை சற்று சுதந்திரமாய் விடுவதாய் இல்லை. என் கை, கால் இரண்டையும் கட்டி விட்டு, கழுத்தை மட்டும் நீட்டி யுத்தம் செய் என்கிறான் இந்த மூடன். அவளோ மத யானையைப் போல் பெரிதாகத் தெரிகிறாள். காயை மட்டும் பார்த்தால், மத யானையின் துதிக்கையில் இருக்கும் சிறு கரும்புத் துண்டு போல் தெரிகிறது. யானை எந்த நொடியிலும் வாயில் போட்டுக் கொண்டு விடும். பின் யானை வாய் கரும்பு போல் தான்! காலை ஆட்டும் திசையைப் பார்த்தால் என் தலையை நோக்கி முன்னும் பின்னும் ஆட்டுவது போல் தெரிகிறது. இந்த மூடன் சொன்னதும் சரிதான். கிட்டே போனால் நம் தலை தப்புமே என்னவோ! இருக்கும் இடத்திலிருந்தே ஏதாவது யுக்தி செய்ய வேண்டியது தான்'. எழ நினைத்த சகுனி ஆசனத்தில் அமருகிறான்.

திரௌபதி: "மாமா அவர்களே! தாங்கள் அங்கு அமர்ந்தபடியே பேசலாம். எனக்கு சரி சமமாய் குந்தி மைந்தர் மட்டும் நின்றால் போதுமானது. தாங்கள் நிற்பது அவ்வளவு கௌரவமாகாது. ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை வெற்றிக்காக சொன்னால் வாய்ப்பு சமமாகும் என்றேன். அதேபோல் காயை நான் உருட்டுவதால் தாங்கள் முதல் எண்ணிக்கையை கூறுங்கள். எனது வெற்றிக்கான எண்ணிக்கையை அடுத்துக் கூறுகிறேன்".

சகுனி (மனதில் சந்தோஷத்துடன்): "எனது எண்ணிக்கை ஐந்து".

திரௌபதி: "எனக்குப் பேராசையில்லை, என் எண்ணிக்கை ஒன்று".

எங்கும் நிசப்தம். சபையில் உள்ள பலரிடம் பலவித அபிப்பிராயங்கள், எண்ணங்கள், ஆசைகள். திருதராஷ்டிரன் மனத்திற்குள் எண்ணிக்கை ஐந்து என்று ஐயாயிரம் முறை சொல்லி முடித்திருப்பான்.

எல்லோரும் திரௌபதியையே பார்த்துக் கொண்டிருக்கும் போது அவள் அறிவிக்கிறாள்: "எனது வெற்றிக்கான எண்ணிக்கை ஒன்று. இதற்காக நான் விரும்பி கேட்பதும் ஒருவரைத்தான்".

பாண்டவர் ஐவரையும் கேட்பாள் என்று நினைத்த பலர் மனத்திலும் யார் ஒருவரை இவள் கேட்கப் போகிறாள் என்ற துடிப்பு.

திரௌபதி: "மன்னர் திருதராஷ்டிரர் அவர்களிடம் நான் விண்ணப்பிப்பது, பகடை ஒன்று விழுமானால் குந்தியின் மைந்தர், எனக்கு முன்னால் எனக்கு சரியாக நிற்பவர் இவரை, மன்னர் சுதந்திர புருஷர் என்று அறிவிக்க வேண்டும். தோற்றால் நானும் பாண்டவர் ஐவருடன் அடிமை".

திருதராஷ்டிரன்: "பாஞ்சாலி, நீ பாண்டவர் ஐவரையும் வரமாய் வேண்டிக் கேட்டிருந்தாலும் உடனே தந்து விட வேண்டும் என்றிருந்தேன். ஆனால், வெற்றி தோல்வி இரண்டையும் சரி சமமாய் எதிர்கொள்ளும் சித்தத்துடன் கேட்கிறாய். உன் இஷ்டப்படி ஆகட்டும். பகடை ஒன்று விழுந்தால் இச்சபைக்கு வந்தவுடன் யுதிஷ்டிரன் எங்கு அமர்ந்தானோ அங்கு அமர்வான். உனக்கு என் ஆசிகள்".

திரௌபதி: "மன்னருக்கு வணக்கம். நான் கேட்கும் முன்பே கொடுத்த ஆசிகளுக்கு மறுமுறை வணங்குகிறேன். தர்மத்தின் துணையை நாடும் சபையோர்களே நானும் தர்மத்தையே விரும்புகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்".

கையிரண்டையும் கூப்பி, இதுவரை வலது புறங்காலில் ஆட்டிக்கொண்டிருந்த பகடைக்காய்களை தனக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையே போடுகிறாள். பகடை ஒன்று!

பக்கத்தில் இருந்த விகர்ணன் ஆவலாய்ப் பார்த்து: "மன்னரே! பகடை ஒன்று. மந்திரி விதுரரே, பகடை ஒன்று. தாத்தா பீஷ்மரே பகடை ஒன்று. எல்லோரும் பாருங்கள் பகடை ஒன்று" என சந்தோஷ மிகுதியால் கூவுகிறான்.

துரியோதனன் முதல் ஆட்டம் தனக்கு தோல்வி என ஏனோ தீர்மானித்துவிட்டான். அவன் மனம் 'திரௌபதி பகடை ஒன்று என்று கேட்டு யுதிஷ்டிரன் ஒருவனை மட்டும் பெற்றுவிட்டாள். அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரில் ஒருவரையோ இல்லை நால்வரையுமே கேட்டு இவள் வெற்றி கொண்டாலும் பாதகமில்லை. எப்படியும் இந்திரபிரஸ்தம் நம்முடையது தான். இவளை அவையில் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். துச்சாதனன் கூந்தலைப் பற்றி தரதரவென்று இழுத்து வந்து அதைச் செய்து விட்டான். நல்ல வேளை அந்த கண்ணனின் மாயையோ அல்லது இவள் தந்திரமோ ஆடை வளர்ந்து ஒரு மாதிரியாக நடந்து முடிந்து விட்டது. தாய் காந்தாரி கூட அரசவையில் இதற்காக கோபத்தைக் கொட்டிவிட்டாள். வேறு ஏதாவது நடந்திருந்தால், தாயாருடன் மற்ற பெண்கள் என்ன, சபையில் உள்ள பலரும் சேர்ந்து நிச்சயம் என்னை காலால் துவைத்து பிண்டமாய் உருட்டி வைத்திருப்பார்கள்', என் நினைத்ததோடு, அடுத்த ஆட்டத்தில் மற்ற நால்வரையும் சந்தோஷமாய் கொடுக்க தயாராகி விட்டான்.

திருதராஷ்டிரன்: "விதுரரே! யுதிஷ்டிரனை அழைத்து அவனுக்குரிய ஆசனத்தில் அமர்த்துங்கள். மகளே திரௌபதி! மறுமுறை நீ ஆட வேண்டாம். மற்ற நால்வரையும் அடிமையல்ல என இதோ அறிவித்து விடுகிறேன். ஏன்? இந்திரபிரஸ்தத்தையும் திரும்பக் கொடுத்து விடுகிறேன். உன் சம்மதத்தை சொல்."

திரௌபதி: "மகளே! என மன்னர் அழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இருமுறை ஆடுவது என முதலிலேயே அறிவித்து விட்டேன். தங்கள் சம்மதத்தையும் பெற்றிருக்கிறேன். எந்த ஆட்சேபமும் இல்லது ஆட சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. தோல்வி ஏற்பட்டிருந்தால், மகளே! என்றழைத்த மன்னரே 'ஐவரோடு நீயும் அடிமை' என்றே அறிவிக்க நேர்ந்திருக்கும். அடிமை இரண்டாவது ஆட்டம் ஆடலாமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பலாம். ஆனால் இப்போது ஆடக்கூடாது என தடுப்பதற்கு குந்தி புத்திரர் மட்டும் தான் உரிமை பெற்றவர் ஆகிறார். ஏனெனில் கணவனுக்கு கட்டுப் பட்டவள் மனைவி. தர்மம் தெரிந்த அவர் என்னை இப்போது தடுக்க மாட்டார். அவருக்கு தெரியும் மனைவி தொடங்கிய நற்செயலை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டுமென்று. சற்றுப் பொருங்கள் மன்னரே! சித்தப்பா விதுரர், யுதிஷ்டிரரை அவர் ஆசனத்தில் அமர்த்த அழைத்துச் செல்கிறார். முதலில் யுதிஷ்டிரரை வணங்கி பிறகு பதில் கூறுகிறேன். மன்னியுங்கள் மன்னரே!"

திருதராஷ்டிரன்: "திரௌபதி! என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது. உன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கு, நீ சொன்ன பதிலென்ன? 'மொத்த பெண்மையின் சார்பில் மன்னரை மன்னிக்க நான் யார்' என கூறி விட்டாய். இங்கு யாரிடம் மன்னிப்பு கேட்பது என்று நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். நான் உன்னை மன்னிப்பதா? என்னை யார் மன்னிப்பது?"

யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்ந்ததும் திரௌபதி அவரை வணங்குகிறாள்.

திரௌபதி: "குந்தி புத்திரரே! என்னை மன்னியுங்கள். தனியாக நின்ற அபலை அவசரத்தில் இருமுறை சூதாடுவேன் என அறிவித்துவிட்டேன். என்னை முதல் ஆட்டத்திற்கு பணயமாய் வைத்தேன். முதல் ஆட்டத்தில் வென்றால், தர்மத்தை உணர்ந்த தாங்கள் தடையேதும் சொல்ல மாட்டீர்கள் என திடமாய் நம்பியிருந்தேன். பகடைக் காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வந்து, தாங்கள் என் காலில் காயை வைத்த போது பலரும் தங்களுக்கு நான் செய்யும் அவமரியாதை என்றே நினைத்திருக்கக் கூடும். அந்த நிலையில் வேறு வழி ஏதும் தெரியவில்லை. மாமா சகுனியின் ஆயுதமான பகடைக்காயை மன்னர் காலடியில் வைத்து ஆசி பெற நினைத்தேன். கைகளால் தொடுவதில்லை என சத்தியம் செய்ததால், காலால் வேகமாய் உதைத்து, போர் புரியும் வீரன் குருவின் காலடியில் பாணம் விடுவது போல செய்யும்படி ஆயிற்று. அவமரியாதை செய்யும் எண்ணம் தங்களை கணவராகப் பெற்ற எனக்கு இல்லை. மாமா சகுனிக்குத் தெரியும் அவர் ஆயுதம் எவ்வளவு சக்தி வாய்ந்ததென்று. ஆடுவதற்கு முன்பு அதன் வீர்யத்தைக் குறைக்க அது ஒன்றுதான் வழி. தவிர எதிர்பாராத மரணம் நேர்ந்தால், காரணமானவர் அதற்குரிய சடங்குகளையும் செய்யலாம். தங்களிடம் எடுத்துச் சொல்ல வழியில்லை. மோட்சத்திற்கு வழி என்று நான் சொன்ன போதே மரணம் நிகழ்ந்து விட்டது. அதை மாமா சகுனி மட்டும்தான் அறிவார். பின் அஸ்தி கரைப்பது, தங்கள் கையால் நடக்க வேண்டும் என நான் விரும்பியபடி, காய்களை தாங்கள் ஏந்தி வந்தீர்கள். கண்ணில் வழியும் கண்ணீரை கங்கையாக பாவித்து, தங்கள் கையில் தெளித்து அதையும் தாங்களே செய்து முடிக்கும்படி செய்தேன். இது மாமா சகுனிக்கு முழுவதுமாய் புரிந்திருக்கும். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

பின்பு தாங்கள் என் கால்களில் காயை வைத்து, கைகளால் பற்றி பாதம் தரையில் படும்படி வத்ததை இங்கு சில மூடர்கள், நான் தங்களுக்கு செய்த அவமரியாதை என நினைத்து அகமகிழ்ந்தார்கள். கற்றோரும் சான்றோரும் சற்று புரிந்தும் புரியாமலும் குழம்பினார்கள், அவர்களுக்காக இதைச் சொல்கிறேன். ஒரு ஆணும் பெண்ணும் மணமுடித்து கணவன் மனைவியானதும் குடும்பம் தோன்றுகிறது. கணவர் மனைவி என இருவர் ஆனாலும் குடும்பம் ஒன்றுதான். இரு உடல்களும் ஓர் உயிரும் என வழக்குப்படி, கை கால்களை, கணவனுடையது மனைவியுடையது என தனித்தனியாக பார்க்காமல் யுதிஷ்டிரர் தன் கையால் தன் காலைப் பிடித்ததாய் எண்ணிப் பார்த்தால் அதில் தவறு ஏதும் தெரியாது. யுதிஷ்டிரரே! தாங்கள் என் கால்களைப் பற்றி பாதம் பூமியில் படியும்படி வைத்ததின் மூலம் சொக்கட்டான் ஆட தாங்கள் சம்மதமும் வெற்றி பெற ஆசியும் கொடுத்ததாய் கொண்டேன். என்னை மணம் புரிந்தவரே! நான் இப்போது தர்ம சங்கடத்தில் இருக்கிறேன். எனது கணவர் என்ற முறையில் எனக்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும். முதலில் நான் தனியாக இருந்த போது, அந்த இக்கட்டான சமயத்தில் என்னையே பணயமாய் வைப்பதைத் தவிர வழி ஏதும் தென்படவில்லை. ஆனால் தற்போது நிலமை வேறு - நான் இப்போது தங்களில் பாதி. சுதந்திர புருஷனாக கணவன் பக்கத்தில் இருக்கும் போது, என்னால் என்னையே பணயமாய் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதே போல் மனைவியும் தன் மறு பாதியான கணவனையும் பணயமாய் வைக்க முடியாது. இப்போது நான் இருமுறை ஆடுவேன் என்ற சொல்லின் படி, இரண்டாம் ஆட்டம் ஆட வழி கேட்டு தங்கள் முன் நிற்கிறேன். இந்த காரணத்தினால் தான் மன்னரிடம் என்னை மன்னியுங்கள் என்று சொன்னேன். தர்மத்தை உணர்ந்த தாங்கள், எனக்கு இரண்டாம் முறை ஆட அனுமதியையும் பணயம் வைப்பதற்கு வழியையும் காட்டுங்கள்.”

யுதிஷ்டிரர்: "பாஞ்சாலி, உன்னை நன்கு உணர்வேன். நாம் இருவரும் பணயமாய் இரண்டாம் ஆட்டத்திற்கு உட்படுவதை தவிர எனக்கு வழி ஏதும் தெரியவில்லை. சூதில் ஒன்றுக்கு இரண்டாய் வெற்றி பெருவாய், என் ஆசிகள்!"

திரௌபதி யுதிஷ்டிரரை வணங்கி, திருதராஷ்டிரர் பக்கம் திரும்பி, "மன்னரே! இரண்டாம் முறை ஆடுவேன் என்று கூறி தர்ம சங்கடத்தில் இருந்த எனக்கு யுதிஷ்டிரர் அனுமதி கொடுத்து, பணயத்திற்கு தன்னையும் என்னையும் காட்டி விட்டார். அவர் சொன்ன வார்த்தைப்படி ஒன்றுக்கு இரண்டு என்ற படி எங்கள் இருவரையும் பணயமாய் வைத்து, மற்ற நால்வரையும் சுதந்திர புருஷர்களாய் எல்லோரும் பார்ப்பதற்கு, இரண்டாம் ஆட்டத்திற்கு நான் தயார்".

திருதராஷ்டிரன் உண்மையில் விசனம் அடைந்தான். 'பாண்டவர் ஐவர் மட்டும் அடிமை என்ற நிலையில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விடாது. பாஞ்சாலி என்ற நெருப்பை அடிமை என்ற பெயரில் மடியில் கட்டிக் கொண்டால் என்னவாகும்? இரண்டாம் ஆட்டத்தில் தோற்பதே நமக்கு மிகப் பெரிய வெற்றி. ஆனால் துரியோதனனும் சகுனியும் என்ன செய்யப் போகிறார்களோ?' இரண்டாம் ஆட்டத்தில் திரௌபதி வெல்ல வேண்டும் என திருதராஷ்டிரன் மனம் புலம்ப ஆரம்பித்துவிட்டது.

துரியோதனனுக்கு தான் நினைத்தபடி பாண்டவர் மீதி நால்வரை மட்டும் தான் இவள் கேட்கிறாள். இந்த முறை மாமா தோற்றாலும், நமக்கு வெற்றிதான். நாடு முழுவதும் நமக்குத்தான், என்று மனம் குதூகலித்தது.

சகுனி மனத்தில் கலக்கம். 'திரௌபதி மற்றவர்களுக்கு என்ன புரிய வைத்தாளோ என்னவோ, எனக்கு விபரமாய், "சிறுவண்டை கொன்றேன்; மன்னர் காலடியில் மூண்டிருக்கும் அரசுப் பேராசை என்னும் நெருப்பில் சுட்டெரித்து சாம்பலாக்கினேன்; என் கணவர் யுதிஷ்டிரர் கையினால் அதையும் கரைத்துவிட்டேன்; உன் அஸ்திரத்தின் சுவடு கூட இல்லாமல் செய்துவிட்டேன்" என்று சொல்லிவிட்டாள்.

இப்போது என் இடது மடியில் இருக்கும் பகடைக்காயை, முன்பு மாண்ட என் முன்னோர்கள் எலும்பில் செய்து வைத்திருக்கிறேன். அதில் துர்தேவதைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உட்செலுத்தி, என் எண்ணப்படி ஆடும்படி செய்திருக்கிறேன். இதை எடுத்து ஆடலாம். ஆனால் திரௌபதி அதோ அனாதையாய் கிடக்கும் அந்த கட்டொழிந்த செந்நிற காய்களை வைத்து மறுமுறையும் ஆடுவேன் என்று சொல்லிவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு என்ன வழி?' சகுனியின் சூதுமனம் எண்ணமிட்டது.

திரௌபதி அவை நடுவே குவிந்திருந்த வளர்ந்த வஸ்திரத்தை மேலும் மேலும் தன் உடலில் சுற்றிக் கொள்கிறாள். அவள் வஸ்திரம் உடலோடு ஒட்டியதாகவும், அதே சமயம் மாலை சூரியன் மஞ்சள் கிரணங்கள் போலும் ஜொலிக்கிறது.

திரௌபதி: "மாமா அவர்களே! இரண்டாவது ஆட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன். சொக்கட்டான் ஆட்டத்தில், தங்கள் செந்நிற காய்கள், அதாவது சொக்கட்டான் போரில் தங்கள் முதல் அஸ்திரம் தோற்றுவிட்டது. இந்த இரண்டாம் ஆட்டத்திற்கு இரண்டாம் அஸ்திரம் இருந்தால் அதை எடுத்து தாங்கள் பிரயோகிக்கலாம். அது மற்றொரு செந்நிற காயானாலும் சரி அல்லது தந்தம் போன்ற வெண்ணிற காயானாலும் சரி, தங்கள் சௌகரியம்."

கர்ணன் மனம், 'போர்', 'தந்திரம்', 'அஸ்திரம்' என்ற வார்த்தைகளை கேட்டதும், 'திரௌபதி நிச்சயம் சொக்கட்டான் காயை வைத்து விளையாடவில்லை. மாமா சகுனி அடிக்கடி சொல்வது போல் அவர் அஸ்திரங்கள் முழுவதையும் தவிடு பொடியாக்கப் போகிறாள்' என்று எண்ணமிட்டது. 'முதலில் வைத்த சிகப்பு மரக்காய், வெறும் சொக்கட்டான் காய் என்றால் அதையே ஏன் எடுத்து ஆடக்கூடாது? மாமா அவர்கள் இப்போது வெள்ளைக் காய்களை எடுத்தால் அது நிச்சயம் ஒரு அஸ்திரம்தான். திரௌபதி அதை வைத்து ஜெயித்தால் நிச்சயம் அவள் இந்த ஐந்து வீரர்களின் வீரமனைவிதான்.' திரௌபதியின் வீரத்தை, விவேகத்தை பற்றி எண்ணமிட ஆரம்பித்தான் கர்ணன்.

துரியோதனன் மனத்தில் 'இவள் யுத்தம், அஸ்திரம் என்று மாமாவைப் போல் பேசினாலும், கையடக்கமான இந்த காய்களில் விசேஷமாய் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. மாமா காயை உருட்டினால் ஏதோ சூதுவாது செய்து வெற்றி பெற்றுவிடுவார். அதைத்தான் இவள் நான் ஆடுவேன் என்று கூறி தடுத்துவிட்டாள். இரண்டாம் முறையும் இவள் ஜெயித்தாலும் மோசமில்லை. தான் எண்ணியபடி மற்ற நால்வர்களை மட்டும்தான் இவள் மீட்க முடியும். அரசு முழுவதும் நமக்குத்தான்' என்று எண்ணங்கள் கொப்பளிக்க ஆரம்பித்தன.

ஆட வந்த சகுனி ஆடிப்போய்விட்டான். 'இவள் யுத்தத்தில் எதிர்வரும் அஸ்திரத்தைப் பார்த்து, அதை முறியடிக்கும் அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வீரனைக் காட்டிலும், அடுத்த அஸ்திரமான உன் வெள்ளைக்காயை எடு, என சூளுரைக்கிறாள். இதையும் இவள் வென்றுவிடுவாளா? எப்படியோ அடுத்த அஸ்திரத்தை எடு என்று கூறி, இடது மடியில் உள்ள காய்களை எடுத்துவிட சம்மதம் கொடுத்துவிட்டாள். இதை எடுத்து முன் போல் சூதுமேடையில் வைத்தால் முன் செய்தது போல் இவள் மன்னர் காலடியை நோக்கி மறுமுறையும் உதைத்தால் இதில் உள்ள துர்தேவதைகள், மன்னரையே தாக்கினாலும் தாக்கும். காலால் ஏவினால் இன்னமும் மூர்க்கமாய்த் தாக்கும். இவள் காலடியில் வைத்தால், இதைத் தொடும் பண்டவர்களை செயலிழக்கச் செய்யலாம். பிறகு நடப்பதை வைத்துத் தான் நாடகத்தைத் தொடர முடியும்'. சகுனி யுத்த வியூகத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தான்.

திரௌபதி (கம்பீரமாக): "மாமா அவர்களே! காய்களை எடுத்து எங்கே வைப்பது என்று யோசிக்கிறீர்களா? முன்பு சொன்னதையே திரும்ப சொல்கிறேன். என் காலடியில் வந்து வைக்கிறீர்களா? அல்லது சூது மேடையில் வைக்கிறீர்களா?"

சகுனி உடனேயே தன் இடது மடியில் இருந்த வெள்ளைப் பகடைக் காய்களை எடுத்து, வேகமாய் வந்து திரௌபதியின் காலடியில் வைக்கிறான்.

கர்ணன் சற்று துணுக்குருகிறான். 'அஸ்திரம் என்று திரௌபதி சொன்னதை, காலடியில் வைப்பதன் மூலம் இவை வெறும் காய்கள்தான் என அவையோருக்கு உணர்த்த விரும்புகிறாரா என்ன?' கர்ணன் யோசனை அப்படி.

துரியோதனன் எண்ணமிடுகிறான். 'மாமா அவர்கள் மேடையில் வைத்தால், இவள் மறுபடியும் எட்டி உதைத்து மன்னர் காலடியில் விழச் செய்யும் சாகசத்தை தவிர்ப்பதற்காக, தன் கௌரவத்தையும் விட்டுக் கொடுத்து அவள் காலடியில் வைத்து அவள் திட்டத்தை முறியடித்துவிட்டார்'.

சகுனி எண்ணுகிறான்: 'மேடையில் வைத்தால் மன்னரைத் தாக்க வாய்ப்பு உண்டு. காலடியில் வைத்தால் அஸ்திரத்தை காலடியில் வைக்க மாட்டேன் என்று எண்ணி இவள் ஏமாற வாய்ப்பு உண்டு. நடப்பதை வைத்து என்ன நடக்குமென்று பிறகு யோசிப்போம்'. எதிர்நோக்குகிறான் சகுனி.

திரௌபதி: "மாமா அவர்களே! காலடியில் சரணமாய் வந்தவர்களுக்கு அனுகூலம் செய்ய வேண்டியது கடமையாகிரது. என்னால் முடிந்த வரை நிச்சயம் அதைச் செய்வேன். தவிர காக்கும் தெய்வங்களையும், தேவதைகளையும் வேண்டி, வேண்டியதைச் செய்வேன். இது நிச்சயம். இப்போது பகடை எண்ணிக்கையை தாங்கள் கேட்கிறீர்களா அல்லது நான் கேட்கட்டுமா?"

சகுனி (மனத்துள்): 'நிச்சயம் இவள் பஞ்ச பாண்டவர்களை அல்லது மீதி நல்வரை மனத்துள் கொண்டு நான்கு அல்லது ஐந்து என்று தான் எண்ணிக்கையை கேட்பாள். சதுர் வேதங்களை இந்த தேவதைகளுக்கு பிடிக்காது. பஞ்ச பூதங்களிடம் ஒரு பயம். நான்கு, ஐந்து இவை இரண்டும் இவள் கேட்டால் விழாது. நான் மிகவும் உற்சாகப் படுத்தினால் தான் இந்த இரண்டு எண்ணிக்கையும் விழும். ஆக திரௌபதியை முதல் எண்ணிக்கையை கேட்க வைத்தால் நல்லது'. இவ்வாறு எண்ணி சகுனி கூறுகிறான்: "முதல் முறை நான் கேட்டு விட்டேன். இந்த இரண்டாம் ஆட்டத்தில் எண்ணிக்கை என்னுடையது இரண்டாவதாய் இருக்கும். முதல் எண்ணிக்கை உன்னுடையதாக இருக்கட்டும்".

திரௌபதி: "நல்லது மாமா அவர்களே! தங்களுக்கு நன்றி. நான் எண்ணிக்கையில் சற்று குழம்பியிருக்கிறேன். இதோ பகடைக்காயை இடமாக வந்து கேட்கிறேன்" என்று கூறி இடது பக்கமாக காயை சுற்றி வருகிறாள். பலமுறை இடமாக வந்த திரௌபதி சட்டென யுதிஷ்டிரரைப் பார்த்தபடி நின்று விடுகிறாள். அவளுக்கும் யுதிஷ்டிரருக்கும் இடையில் காய்கள்.

யுதிஷ்டிரரைப் பார்த்து திரௌபதி: "குந்தி புத்திரரே! ஆசீர்வதியுங்கள். முதல் முறை ஆட்டத்தில் வெற்றிபெற காலில் காயை வைத்து வாழ்த்தினீர்கள். இப்போது பலர் விமோசனத்திற்காக என்னை ஆசீர்வதியுங்கள். இதற்காக திரௌபதி வேண்டி நிற்கிறேன். நான்கு வேதங்களையும் முறைப்படி உணர்ந்து ஓதும் சான்றோர்களே! பஞ்ச பூதங்களையும் வழிபடும் நல்லோர்களே, பெரியோர்களே! எனக்கு அருள் புரியுங்கள். பல வருடங்களாக, விமோசனம் வேண்டி நிற்பவர்கள் சார்பில் கேட்கிறேன், விமோசனம் தரும் புண்ணிய பலத்தை எனக்குத் தாருங்கள்", எனக் கூறிக் கொண்டே தன் இடது காலை எடுத்து பகடைகள் மேல் கூப்பிய கரங்களுடன் வைக்கிறாள்.

அந்த சில நொடிகளில் அவையில் ஒரே வெப்பம்; எதோ எரிவது போல் எல்லோர் மனத்திலும் எண்ணம். பிறகு குளிர் காற்று. கண் பார்வை இல்லாத திருதராஷ்டிரன் முதல் கண்மூடி நிற்கும் பாண்டவர் மீதி நால்வர் வரை எல்லோரும் இதை உணர்கிறார்கள்.

திரௌபதி இடது காலை காய்களை விட்டு எடுக்கிறாள். அவை இன்னும் சற்று வெளுத்து, வெண்சாம்பல் நிறத்தில் தெரிகின்றன. மெதுவாக இடது கால் விரல்களால் எடுத்து வலது பாதத்தின் மேல் வைத்து, நான்கு அடி நடந்து சூது மேடையை நோக்கி வந்து நின்று கொண்டு, சகுனியைப் பார்த்து, "மாமா அவர்களே! என் வெற்றிக்கான எண்ணிக்கை ஐந்து. தங்கள் எண்ணிக்கை என்ன?" எனக் கேட்கிறாள்.

சகுனி: "என் எண்ணிக்கை ஒன்று"

திரௌபதி: "நல்லது. நான் முதல் ஆட்டத்தில் ஒன்றைக் கேட்டேன். யுதிஷ்டிரர் ஒருவரை அடைந்தேன். இந்த முறை நால்வருக்காக நான்கு என்று கேட்கலாம். ஆனால் என் கணவர்கள் ஐவரும் சமம் என்று எல்லோரும் அறிந்து கொள்வதற்காக ஐந்து என்று கேட்கிறேன். மேலும் பாழும் கிணற்றில் விழுந்த ஐவரை மீட்க வேண்டிய நிலையில் உள்ளவர், கடைசியாக விழுந்த ஒருவரை மீட்பது நல்லது. மீட்ட அவர் உதவியுடன் மற்ற நால்வரையும் மீட்கலாம்.

ஐவரையும் ஒரே முறையில் மீட்பேன் என எண்ணுவது, ஆணவம் ஆகலாம். அதே சமயம் முடியாமல் போய், நானும் பாழும் கிணற்றில் விழ வழி வகுக்கலாம். ஆகையால் தான் முதல் முறை யுதிஷ்டிரரை மீட்டு அவர் ஆசியுடன், அருளுடன் மற்றவர்களை மீட்பது என்ற முடிவிற்கு வந்தேன். ஐவரும் சமம் என்பதை எல்லோரும் அறிவதற்காக பகடை ஐந்து நான் வேண்டுகிறேன். இதோ! மாமா சகுனி அவர்களே! சொக்கட்டான் மேடையில் விரித்திருக்கும் இந்த சிறு சொக்கட்டான் துணியைப் பாருங்கள். இதன் நடுவே நான் காய்களைப் போடப் போகிறேன். பகடை ஐந்து விழுந்தால் உடனே நான்கு முனைகளாலும் அதை மூடி எடுத்துக் கொண்டு நீங்கள் அரச அவையை விட்டு உடன் போக வேண்டும். தங்கள் விருப்பப்படி, உசிதப்படி மற்ற காரியங்களைச் செய்யுங்கள். அநேகமாய் நான் கூறியது அனத்தும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். தாங்கள் அவையை விட்டு வெளியேறியதும் தான் மற்றபடி ஏதும் நடக்க முடியும். தங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்."

ஒரு நொடியில் திரௌபதி காயை ஒரே ஒரு முறை முன்னும் பின்னும் ஜாக்கிரதையாக ஆட்டி, பகடைக் காயை சொக்கட்டான் விரிப்பின் நடுவில் போடுகிறாள்.

சகுனி சற்றும் தாமதியாது "பகடை ஐந்து துரியோதனா!" என்று கூறி இரு கைகளாலும், நான்கு முனைகளையும் பற்றி காயை மூடி எடுத்துக் கொண்டு சபையை விட்டு வெளியேறுகிறான்.

சபையில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. விதுரர் மட்டும் நடந்ததை எதிர்பார்த்தவர் போல் உடன் எழுந்து மன்னர் திருதராஷ்டிரரிடம் நடந்ததை விளக்கி, பாண்டவர் நால்வரையும் அவர்கள் ஆசனத்திற்கு அழைத்து வந்து அமர வைக்க வருகிறார்.

திரௌபதி சபை நடுவே நிற்கிறாள். அவள் உடலோடு ஒட்டிய சிகப்பும் மஞ்சளும் கலந்த வஸ்திரம், கொழுந்து விட்டு எரியும் தீயின் நாக்குகள் போல் தெரிகிறது. ஆனால் தீயில் மேலே எழும் புகை மட்டும் ஏன் கீழ் நோக்கி ஆடுகிறது? அது புகையில்லை; திரௌபதியின் விரிந்த கருங்கூந்தல்தான் அது.

சகுனி, தன் முன்னோர்கள் அஸ்தியை கரைக்க நதிக்கரைக்கு சென்றுவிட்டான். கர்ணன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறான். துரியோதனன் ஆட்டம் இரண்டிலும் தோற்றபோது, இந்திரப் பிரஸ்தத்தை வென்றுவிட்டதாக எண்ணி, மனத்துள் மகிழ்கிறான்.

திருதராஷ்டிரன் சபையில் இருந்த சஞ்சயனை அருகில் அழைத்து, "நான் காதால் கேட்கக் கூடியவற்றை எல்லாம் கேட்டேன். திரௌபதி நடுவில் ஒரு உண்மை சொன்னாள். 'மன்னர் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், நல்ல கண்கள் படைத்த நல்லவர்கள், பார்த்ததை எடுத்துக் கூற உண்மையை அறிய முடியும்' என்று சொன்னாள். அந்த வார்த்தை எனக்கு ஒரு தெளிவை தந்தன. இப்போது நீ சபையில் யார் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்ததை பார்த்தபடி சொல். அத்துடன் உன் மனம் எப்படிப் பார்க்கிறது என்பதையும் கூறு", என்றான்.

சஞ்சயன் ஒவ்வொருவர் நிலைமையையும் எடுத்துக் கூறுகிறான். “சகுனி குனிந்த தலையுடன் சொக்கட்டான் காய்களை பத்திரமாய் மூடி எடுத்துக் கொண்டு அவையை விட்டு வெளியேறிவிட்டார். நடந்ததை வைத்து ஊகிக்கும் போது அவர் தனக்கு வேண்டிய முக்கியமானவர் அஸ்தியைத்தான் எடுத்துச் செல்கிறாறோ என நினைக்கத் தோன்றுகிறது. பின் சபையை விட்டு வெளியேறிய பிறகு தான் மற்றவை நடக்க முடியும் என்று திரௌபதி கூறியதின் பொருள் என்ன? தங்கள் மைத்துனர் சகுனியும் சப்தமில்லாமல் சென்று விட்டார். கர்ணன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். ஆனால் எதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என எனக்குப் புரியவில்லை. பாண்டவர்கள் ஐவரும், முகத்தில் எவ்வித சலனமும் இன்றி, திரௌபதியின் கால்களை மட்டும் பார்த்தவாறு இருக்கிறார்கள். சபையில் உள்ள மக்கள் முகத்தில் வெறுப்பும், அருவெறுப்பும் தான் தெரிகிறது".

திருதராஷ்டிரன்: "சஞ்சயா! திரௌபதி எப்படி இருக்கிறாள்?"

சஞ்சயன்: "மன்னரே! பார்பதற்கு கண் கூசும்படி திரௌபதி ஜ்வலிக்கிறாள். சபை நடுவே நிற்கும் அவள் இதுவரை வளர்ந்த வஸ்திரத்தை, நடக்கும் போதும், பேசும் போதும் இடைவிடாது தன் மீது சுற்றிக் கொண்டு வந்தாள். இராம காதையில் அனுமன் வால் முதலில் வளர்ந்து, பின் சுருங்கி, வைத்த தீ இலங்கையை அழித்தது. அதுதான் உடன் மனதில் வருகிறது. இந்த வார்த்தை தங்களுக்கு விசனத்தைத் தரலாம். அபசகுனம் இல்லையா என்றும் தோன்றலாம். ஆனால் திரௌபதி அப்படித்தான் தோன்றுகிறாள். ஆமாம், அவள் உடுத்தியிருக்கும் சிகப்பு மஞ்சள் கலந்த வஸ்திரம் தீ நாக்குகள் போல் ஜ்வலிக்கிறது. தன்னைத்தானே சுற்றி அவையை அவள் நிமிர்ந்து பார்க்கும் போது தெரியும் அவள் வெளிர் முகம் தீ நடுவே தெரியும் வெளிர் சுடர் போல் மின்னுகிறது. அவள் நிமிர்ந்த பார்வையை சந்திக்க முடியாத சபையில் உள்ளவர் அனைவரும் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். ஆனால்..."

திருதராஷ்டிரன்: "என்ன ஆனால்..."

சஞ்சயன்: "ஆனால் அவள் விரிந்த கூந்தல் தீயின் நடுவே எழும் கரும் புகை போல் தெரிகிறது. அது துச்சாதனன் கைகளால் தீண்டி இழுத்ததாலோ என்னவோ, அது கீழ் நோக்கியே அசைகிறது. புகை எவ்வழியோ அவ்வழியே நெருப்பின் ஜ்வாலையும் வரும். இந்த சபையில் நெருப்பு எப்போது இறங்கப் போகிறதோ தெரியவில்லை."

திருதராஷ்டிரன் நெருப்பின் ஜ்வாலையையோ புகையின் கருமையையோ பார்த்தது இல்லை. ஆனால் நெருப்பின் உஷ்ணத்தையும் புகையின் கமரலையும் உணர்ந்தவன் தான். புகை சுடாமலே மூச்சு முட்ட வைத்து கொன்று விடும் என்ற அச்சம் அவனுக்கு உண்டு.

திருதராஷ்டிரன் மனத்தில் ஏதோ நினைத்து "சஞ்சயா!" என்றழைத்தான்.

சஞ்சயன்: "சற்று பொறுங்கள் மன்னரே! திரௌபதி கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஏதோ சொல்ல விழைகிறாள். அதை முதலில் கேட்போம்".

திரௌபதி: "சபையோர்களே கேளுங்கள்! எந்த துச்சாதனன் என் கூந்தலை பிடித்து சற்றும் யோசியாது இழுத்தானோ அந்த கைகளை சகதி எது சந்தனம் எது என்று தெரியாத அகப்பையை யார் எங்கு எப்படி எடுத்துப் போட்டர்களோ, அங்கு அப்படி விழுந்து கிடப்பது போல தரையில், சகதியில் இற்று விழ நான் பார்க்க வேண்டும். எந்த துரியோதனன் தன் துடைகளை தானே தட்டிக் கொண்டு அரச அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை இச்சபையில் பேசினானோ அந்த துடைகளை முறித்து கூழாக்கி அதை என் விரிந்த கூந்தலுக்கு நறுமண சாந்தாகப் பூசவேண்டும். இது பாஞ்சாலியின் விருப்பம், சபதம்".

பீமன் எழுந்து சொன்னான்: "பாஞ்சாலியின் இரு சபதத்தையும் நிறைவேற்ற நானும் என் கதையும் துணை நிற்போம். இது சத்தியம்".

அர்ச்சுனன்: "பாஞ்சாலியின் இந்த சபதத்திற்கு மூல காரணமான கர்ணனை என் காண்டீபத்திலிருந்து நேராகப் புறப்படும், பல வளைவுகளை உடைய பாணங்களினால் துளைத்து மடியச் செய்வேன்".

முன் சஞ்சயன் கூறியதை கேட்டு மிகவும் விசனித்து இருந்த திருதராஷ்டிரன் இபோது திரௌபதியை சமாதானம் செய்தால் நிலமையை சீர் செய்யலாம் என்ற எண்ணத்துடன், "பாஞ்சாலி, உனக்கு வரம் தருகிறேன் என்றேன். அதை பெரியப்பவிடமிருந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லையா?" என்றான்.

திரௌபதி: "பெரியப்பா! எனக்கு என் கணவர்கள் வேண்டும். இந்த சபையில் சூதிடமிருந்த அவர்களை சூதாலேயே வென்று பெற்று விட்டேன். பாண்டவர்களுக்கு அவர்கள் இராஜ்யம் வேண்டும். அதை நான் வரமாகக் கேட்க முடியாது. அது அவர்கள் தேசம். தவிர க்ஷத்திரியர்களான பாண்டவ புத்திரர்கள் அதை வென்று பெறப் போகிறார்களா? அல்லது தாங்கள் தந்து பெறப் போகிறார்களா? என்று எனக்கு தெரியாது".

மன்னன் திருதராஷ்டிரன் யோசிக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் இப்போது சுதந்திரமானவர்கள். இப்போது மேலும் பேச்சை வளர்த்தினால் இன்றே யுத்தம் துவங்கிவிடும். இதற்கு உடனே அணை போட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு, "யுதிஷ்டிரா! இங்கு சபையில் நடந்தவைகள் யாருக்கும் விருப்பமில்லாதவைகளாய் நடந்துவிட்டன. நாளை சபை கூடியதும் மறுபடியும் பேசலாம். இப்போது நீங்கள் ஐவரும், பாஞ்சாலியும் சென்று ஓய்வெடுங்கள்", என்று கூறி அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் வெளியேறியதும் அனேகமாய் பலரும் தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)

1 Comments:

Blogger தங்ஸ் said...

kalakkala irukku! Vaazthukkal!

9:50 AM  

கருத்துரையிடுக

<< Home