செவ்வாய், நவம்பர் 29, 2005

தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - மூன்று

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்

பகுதி மூன்று

சபையை விட்டு தனியாக வெளியேறிய சகுனி, நதிக்கரையை அடைகிறான்.  நதிக் கரையில் அமர்ந்து சொக்கட்டான் காய்களை வைத்த துணியை பிரிக்கிறான்.  தான் இதுவரை போற்றி பாதுகாத்த காய்களை ஒருமுறை, கடைசியாக ஒரு முறை, பார்த்துவிட்டு நதியில் விட்டு விட வேண்டும் என்று எண்ணம். காய்கள் இரண்டும் சுடுகாட்டு சாம்பல் போல் உதிர்ந்து காணப்படுகிறது.  திரௌபதி காலால் சிறிது நேரம் சபையில் மூடிய போது தகித்த வெப்பம் காய்களை பஸ்பமாக்கியிருக்கு வேண்டும்.  பின் எழுந்த குளிர்ச்சியில் இவை ஈர மாவுப் பண்டம் போல் இருந்திருக்கின்றன.  இப்போது எல்லாம் தவிடு பொடி.  நதியில் எடுத்துப் போட்டு விட்டு தானும் மூழ்கி எழுந்து, துரியோதனன் இருப்பிடம் வருகிறான் சகுனி.

துரியோதனனும் கர்ணனும் அமர்ந்திருக்கிறார்கள்.  சோகமாய் சகுனி தளர் நடையில் வருவதைப் பார்த்த கர்ணன் எழுந்து வரவேற்கிறான்.  துரியோதனனும் வேண்டா வெறுப்பாய் "அமருங்கள் மாமா!" என்கிறான்.

துரியோதனன்: "என்ன மாமா?  காலால் இட்டதை தலையால் செய்வது போல், காலால் எடுத்துப் போடப்பட்ட பகடைக்காய்களை, அவள் சொன்னபடி பத்திரமாய் சுருட்டி எடுத்துக்கொண்டு, நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்றீர்களே?  அவற்றுக்கு ஈமக்கிரியை செய்து முடித்து விட்டீர்களா?".

சகுனி எண்ணுகிறான்: 'இவன் தோற்ற காய்கள், இறந்த காய்கள் என்ற அர்த்தத்தில் ஈமக்கிரியை என்கிறான்.  திரௌபதியோ, இவை முன்னோர்கள் எலும்பு என உணர்ந்தே தங்கள் உசிதப்படி மற்ற காரியங்களைச் செய்யுங்கள் என்று அழகாய்ச் சொன்னாள்'.

சகுனி: "துரியோதனா!  இது என்னுடைய மானம், அவமானம் கலந்தது.  சந்தோஷத்தை சிறுவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முடியும்.  ஆனால் எனது துக்கத்தை, வயதில் என்னில் பெரியவர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும். ஆகையால் இது பற்றி ஏதும் பேச வேண்டாம்."

கர்ணன்: "மாமா, தாங்கள் மிகவும் களைப்படைந்து காணப்படுகிறீர்கள்.  சற்று ஓய்வெடுங்கள்."

சகுனி: "கர்ணா! இனி ஓய்வென்பது கிடையாது.  என்னைப் பொருத்தவரை நமக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.  எப்போது ஆரம்பமானது என்பது குறித்து மட்டும் தான் சந்தேகம்.  ஓய்வுக்கு நேரம் ஏது?"

கர்ணன்: "மாமா, நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்.  நான் நண்பன் துரியோதனனிடம் யுத்தம் ஆரம்பிக்கப் போகிறது என்றேன்.  தாங்கள் ஆரம்பித்தது எப்போது என்பது தான் சந்தேகம். யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பது உறுதி என்கிறீர்கள்.  ஆனால்..."

சகுனி: "ஏன்? துரியோதனன் வேறு விதமாய் கூறுகிறானா?  துரியோதனா, உன் கருத்துதான் என்ன?"

துரியோதனன்: "கர்ணன் யுத்தம் வரப் போகிறது என்றான்.  தாங்களோ யுத்தம் வந்தே விட்டது என்கிறீர்கள்.  அவமானப்பட்ட திரௌபதி ஏதோ புலம்பினாள்.  பீமனும், அர்ச்சுனனும் முனகினார்கள்.  இதை வைத்து நீங்கள் இருவரும் மிகவும் குழம்பி விட்டீர்கள்".

சகுனி: "துரியோதனா!  நீதான் மிகவும் குழம்பியிருக்கிறாய்.  கர்ணனும் நானும் தெளிவுடன் தான் பார்க்கிறோம்.  எல்லாவற்றையும் எப்போதும் பார்க்கக் கற்றுக் கொள்.  பாண்டவர்கள் தோற்று இராஜ்யத்தை உன் கையில் கொடுத்துவிட்டு புறப்பட்டு போய் விட்டார்கள் என்று எண்ணாதே.  திரும்பி வராமல் அவர்கள் சென்று விடுவார்கள் என்றும் எண்ணாதே.  நாளை சபையில் என்ன நடக்குமோ?"

துரியோதனன்: "மாமா, இப்போது சொன்னீர்களே, இது வார்த்தை.  யுத்த பயத்தை விட்டு யோசிப்போம்.  நாளை மன்னர் இராஜ்யத்தை திரும்ப தந்துவிட்டேன் என்று அறிவித்தால் என்ன செய்வது என்று தான் நான் யோசிக்கிறேன்."

கர்ணன்: "நண்பா! இது வீண் கவலை.  மன்னர் தந்தேன் என்றாலும், யுதிஷ்டிரன் சம்மதித்தாலும், மற்ற பாண்டவர்கள் இதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  திரௌபதியே இதற்கு அவையில் ஒரு கோடி காட்டி விட்டாள்.  'மன்னர் தந்து பெற வேண்டுமா?  அல்லது தாங்கள் வென்று பெற வேண்டுமா? என்பதை ஐவரும் தீர்மானிக்கட்டும்' என்று திரௌபதி கூறியது உனக்கு ஞாபகம் இல்லையா?  இந்நேரம் அவர்கள் ஐவரும் திரௌபதியின் பேச்சுக்கு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்."

சகுனி: "கர்ணா! சரியாகச் சொன்னாய்.  மன்னர் அவையில் 'நெருப்பை யாரவது கட்டிப் போட முடியுமா?' என்று திரௌபதியைப் பார்த்து கேட்டார்.  ஆனால் இந்த நெருப்பு பாண்டவர் ஐவரையும் ஒன்றாக சேர்த்து ஒரு பலமான வார்ப்பாய்ச் செய்து விடும்.  இதுதான் என் கவலை.  யுதிஷ்டிரன் நியாயத்தை மறந்து விடுவான். அவன் தர்மத்தை - சாசுவதமான தர்மத்தை - மட்டும் தான் பேசுவான்.  நியாய வாதங்களை முன் வைத்து பாஞ்சாலி என்ன செய்வாள் என்று தெரியாது.  ஏற்கனவே பீமனும், அர்ச்சுனனும் அவள் பக்கம் என்று சபையில் தெரிந்துவிட்டது.  ஆக அவள் பக்கம் மூன்று பேர் என நிச்சயமாகிவிட்டது.  நகுல சகாதேவன் யார் பக்கம்?  அவர்களும் திரௌபதி பக்கம் என்றால் யுதிஷ்டிரனும் வேறு வழியின்றி அவர்களுடன் ஒத்துப் போக வேண்டியதுதான்.  ஆக அவர்கள் ஆறு பேரும் ஒன்று என்று கொள்ள வேண்டியதுதான்.

துரியோதனன்:  "மாமா!  பாண்டவர் ஐவரும் ஒரு பக்கம் என்று கூறுங்கள்.  போயும் போயும் திரௌபதியையும் சேர்த்து அறுவர் நமக்கு எதிரி என்று கூறாதீர்கள்.  ஒரு பெண்ணையும் கணக்கில் சேர்த்து, யுத்தத்திற்கு வியூகம் வகுக்க வேண்டுமா என்ன?"

சகுனி:  "யுத்தம் என்று வந்த பிறகு ஒவ்வொரு உயிர் உள்ள ஜீவனையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.  ஏன்?  யார் கையில், என்ன என்ன அஸ்திரங்கள் இருக்கின்றன என்பதையும் கணக்கிடுவது இல்லையா?  இன்னும் காடு, நதி, மேடு, பள்ளம் என்று எல்லாவற்றையும்தான் கணக்கில் கொள்ள வேண்டும்.  ஏன் சிறு துரும்பு கூட நமக்கு பாதகமோ அல்லது சாதகமோ செய்யும்.  போர் என்றால் வெற்றி, வீர மரணம் என்பது மட்டுமில்லை."

கர்ணன்: "மாமா! தங்கள் கருத்துகள் மிகவும் யோசிக்க வைப்பவையாய் இருக்கின்றன.  சபையிலேயே நான் அர்ச்சுனனை எதிர்த்திருப்பேன்.  நண்பன் துரியோதனன், பீமனின் வார்த்தைகளை ஒரு பொருட்டாய் கொள்ளவில்லை.  நான் மட்டும் அவசரப்பட்டு ஏதும் ஆரம்பிக்கக் கூடாது என்று பொறுமையை கடைபிடித்தேன்.  நாம் பலமுறை சிந்தித்து செயல் பட வேண்டும்.  சரி, நாளை சபையில் நமது நிலை என்ன?"

சகுனி: "கர்ணா! சபையிலிருந்து நான் வெளியேறிய போதே அடுத்த ஆயுதம் என்ன, எப்படிப் பிரயோகிக்க வேண்டும் , என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.  துரியோதனா! கவனமாய்க் கேள்.  தயவு செய்து குறுக்கே கேள்விகள் கேட்காதே.  முழுவதையும் கேட்டுவிட்டு பிறகு உன் மாமாவை எது வேண்டுமானாலும் கேள்.  நாளை சபையில் மன்னர் அனேகமாய் இந்திரபிரஸ்த்தத்தை பாண்டவர்களுக்கு திரும்ப கொடுத்து விட்டு சமாதானமாகப் போக விழைவார்."

துரியோதனன் ஒரு உறுமலுடன் குறுக்கிட ஆரம்பிக்கிறான்.  உடன் சகுனி மிகவும் அழுத்தமான குரலில், "துரியோதனா! முழுவதையும் கேட்டுவிட்டு பிறகு உன் மாமாவை எது வேண்டுமானாலும் கேள்.  ஏன்? உன் மாமாவின் தலையே வேண்டுமானாலும் கேள்.  முதலில் காது கொடுத்துக் கேள்"

கர்ணன் (சமாதானமான குரலில்): "மாமா நீங்கள் கூறுங்கள்.  நண்பா! நெருப்பு என்றால் பற்றி எரிகிறது என்று அர்த்தமில்லை.  முதலில் முழுவதையும் கேட்போம்.  பிறகு மாமா யோசனையை ஏற்பதா, வேண்டாமா என்று யோசிக்கலாம்.  மாமா இவ்வளவு மனக் கஷ்டத்துடன் 'ஏன் - என் தலையே வேண்டுமானாலும் கேள்' என்று கூறுகிறார் - சற்று யோசி."

சகுனி: "என் யோசனை முழுவதையும் கேட்டால் துரியோதனன் நிச்சயமாக என் தலையைத் தான் முதலில் கேட்பான்.  அதை முன் வைத்தே நான் கூறுகிறேன்.  கவனமாய் இருவரும் கேளுங்கள்.

துரியோதனா! நாளை காலை உன் தந்தையைப் போய் பார். இன்று இரவு முழுவதும் அவர் தன்னையும் உன்னையும் பற்றிய சிந்தனையில் தான் இருப்பார்.  ஆகவே காலையில் முதல் வேலையாக, நீ அவரைப் போய் பார்க்க வேண்டும்.  அவரிடம், 'தந்தையே! நேற்று அவையில் நடந்தவைகள் தங்களுக்கு மிக மன வருத்தத்தை கொடுத்து விட்டன.  தங்கள் மகன் என்ற முறையில் நானும் மிகவும் வருந்தினேன்.  மன நிம்மதிக்காக சில வருடங்கள் காட்டில் சென்று தனித்து இருப்பது என்று முடிவு செய்தேன்.  ஆனால் மாமா சகுனி, "நடந்தவெற்றுக்கெல்லாம் நீயோ, மன்னரோ மட்டும் காரணம் என்று கூற முடியாது. இதில் யுதிஷ்டிரன் பங்கு என்ன?  ஏன் விளையாட்டை வினையாக அவன் ஆக்கினான்.  எப்படிப் பார்த்தாலும் யுதிஷ்டிரனுக்கு அதிக பொறுப்பு உண்டு.

ராஜசூய யாகம் எல்லாம் செய்து விட்டு அரசனாய் விளங்கிய அவன், சொக்கட்டான் விளையாட்டை வினையாக செய்து, நாடு நகரமெல்லாம் இழந்து, எப்படியோ அடிமை என்றில்லாமல் தனி மனிதனாய் போய்விட்டான்.  எப்படிப் பார்த்தாலும், அவன் தான் காட்டில் போய் தனித்து வாழ வேண்டும்.  சிறு பிள்ளையான உன் மனம் குழம்பியிருக்கிறது.  யார் குற்றவாளி என்பதை தீர்மானிப்பது எப்படி?  யுதிஷ்டிரனா அல்லது நீயா? எந்த குற்றவாளியும் தானே முன் வந்து தான் தான் குற்றமிழைத்தேன் என்று கூற மாட்டான்.  ஆனால், உன் வெள்ளை மனம், விளையாட்டை நாம் தானே ஆரம்பித்தோம்; நாம் தான் குற்றவாளி என்று கருதுகிறது.  இன்னம் ஒரு முறை, ஒரே ஒரு முறை காய் ஆடி, அதில் யார் தோற்கிறார்கள் என்று பார்த்து, குற்றவாளியை நமக்குள் தீர்மானித்து, தோற்றவர் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து, பின் ஒரு ஆண்டு யார் கண்ணிலும் படாது மறைந்து வாழ வேண்டும் என்று கூறு.  மறுமுறை நீயும் யுதிஷ்டிரனும் சொக்கட்டான் ஆட அரசர் அனுமதி பெற்று ஆடு.  இதில் தோற்றவரே குற்றவாளி.  அவர்கள் தான் காட்டில் தனித்து இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்று சொன்னார்.  

தந்தையே! தாங்கள் அனுமதி கொடுத்தால் நான் ஒரே ஒரு முறை ஆடி, ஜெயித்தால் நாட்டில் இருக்கிறேன்.  யுதிஷ்டிரன் தோற்றால் காட்டில் வாழலாம்.  இல்லை அனுமதி கொடுக்க விரும்பவில்லை என்றால், இதோ, இப்போதே நான் மனநிம்மதியுடன் காட்டிற்கு புறப்படுகிறேன்! தங்கள் உத்திரவு'
துரியோதனா! இவ்வாறு மன்னரிடம் நீ மன்றாட வேண்டும்.  நீ காட்டிற்கு புறப்பட்டு விட்டாய் என்று மன்னர் எண்ண வேண்டும்.  அதை தவிர்ப்பதற்கு ஒரு முறை காய் விளையாடுவது, அதில் தோற்றவர் தான் குற்றவாளி என்ற முடிவிற்கு மன்னர் வர வேண்டும்.  அது முக்கியம்.

நாளை காலை அரச அவைக்கு வரும்போது மன்னர் ஒரு முறை காய் ஆடி தோற்றவரை தீர்மானிக்கும் எண்ணத்துடன் வர வேண்டும்.  பிறகு மற்றவைகளுக்கு நான் பொறுப்பு."  சகுனி எழுந்து புறப்பட தயாரானான்.

துரியோதனன்: "மாமா! யுதிஷ்டிரன் காட்டிற்கு போவது குறித்து எனக்கு மிக சந்தோஷம் தான்.  ஆனால் ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டால் நான் அல்லவோ காடு போக வேண்டும்.  பிறகு இராஜ்யம் முழுவதும் யாருக்கு?  நேற்று திரௌபதி தங்கள் சிகப்பு வெள்ளை காய்கள் இரண்டையும் வெற்றி கொண்டு விட்டாள்.  நாளை தோல்வி நமக்கு வராது என்பது என்ன நிச்சயம்.  'துரியோதனன் தலையைத்தான் கேட்பான்' என்று சொன்னீர்களே, அது சரிதான்.  இந்த யோசனையைக் கேட்டதும், தங்கள் தலையை மட்டும் தனியாக எடுத்து மரியாதை செய்தால் என்ன? என்று தான் எண்ணம் வருகிறது.  மாமா என்னை மன்னியுங்கள்"

சகுனி: "நீ கேட்பதற்கு முன் நான் தருகிறேன் என்று கூறிவிட்டேனே.  நான் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்று நினைக்கிறாய்?  மறுமுறை சென்நிறக் காயையோ அல்லது வெள்ளைக் காயையோ நாடப் போவதில்லை.  தக தக என ஜொலிக்கும் செம்பு உலோகத்தில் காய்களை இனிப் போய் செய்வேன்.  நான் வணங்கும் தேவதைகளிடம், 'இந்த முறை தோல்வி ஏற்பட்டால், உடனேயே என் தலையை காணிக்கையாக காலடியில் சமர்ப்பித்து விடுவேன்.  இது நாள் வரை செய்து வந்த பூஜைகள் தொடர்வதற்காகவாவது எனக்கு வெற்றியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், என்னையே பலியிடுவதன் மூலம் பேயாக திரிந்து வருவேன்.  தேவதைகளே!  உங்களுக்கு உபசாரங்கள் செய்வது இனி நிற்கப் போவதுடன் அல்லாது, பேய் உருவில் பெரும் தொந்திரவும் கொடுப்பேன்', என்று சபதம் செய்து பின் விளையாட வருவேன்.  வெற்றி நிச்சயம்.  துரியோதனா! தவிர தோல்வி உனக்கு வந்தால் தான் என்ன?"

கர்ணன்: "மாமா! பெரும் தோல்வியை எதிர்பார்த்து ஆடலாமா?"

துரியோதனன்: "தோல்வி என்றால் சாதாரண தோல்வியா இது?  பன்னிரண்டு வருடம் காட்டில் வாசம்.  ஒரு வருடம் தலை மறைவு வாசம்.  கேட்கவே அருவருப்பாய் தெரிகிறதே?  எப்படிப் பொறுப்பது மாமா?  தோல்வி என்று ஏற்பட்ட உடனே தலையை தேவதைகள் முன் எடுத்து வைத்துவிட்டு வீர சொர்க்கம் போய்ச் சேருவீர்கள்.  என் பாடு?  இராஜ்யமும் இழந்து காட்டு வாசியாக பல வருடம் திரிய வேண்டியது தான்."

சகுனி:  "துரியோதனா!  உயிரையே பணயமாய் வைத்து உன் வெற்றிக்காகப் பாடுபடப் போவது நான்.  அதில் மிகவும் கருத்தாய் இருக்க மாட்டேனா?  ஏன் இப்படி சோர்வடைகிறாய்?  தோல்வி என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு.  உன் பக்கம் தோல்வி என்றால் காட்டு வாசம் சரி.  நீ ஏன் இராஜ்யத்தை இழக்க வேண்டும்?  இது வரை நான் பேசிய பேச்சில் இராஜ்யத்தைப் பற்றி நான் ஏதாவது கூறினேனா?  எதை எப்போது பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை எப்போது தான் நீ தெரிந்து கொள்ளப் போகிறாயோ?

குற்றவாளி யார் என்பதை தீர்மானிப்பதற்கு இந்த ஆட்டம் ஒரு வழி.  தோற்றவர் காடு செல்ல வேண்டும் - அவ்வளவுதான்.  யுதிஷ்டிரன் தோற்றால் அவன் காடு செல்லப் போகிறான்.  நடுவில் அரசைப் பற்றி என்ன பேச்சு? இந்த நாடு முழுவதும், அதாவது இந்திரப் பிரஸ்தம் உட்பட்டு, மன்னர் திருதராஷ்டிரர் அவைக்கு உட்பட்டது.  பதிமூன்று வருடங்களையும் பதிமூன்று நாட்கள் போல் வனவாசத்தை, வன போஜனத்திற்கு போய் வருவது போல், நீ கழித்து விட்டு திரும்பி வந்துவிடலாம்.  அப்போது ஒரு மாறுதல் மட்டும் தான்.  உன்னை வரவேற்க மாமா சகுனி உயிருடன் எதிரில் நிற்க மாட்டார். அவ்வளவுதான்."

துரியோதனன் (ஆச்சர்யமும் அவநம்பிக்கையும் கலந்த குரலில்): "மாமா! இதற்கு யுதிஷ்டிரன் சம்மதிப்பானா?"

சகுனி: "துரியோதனா! இப்போது தான் நீ சரியாக யோசிக்க கற்றுக் கொண்டுவிட்டாய் என்று தெரிகிறது. 'யுதிஷ்டிரன் சம்மதிப்பானா?' - நிச்சயம் யுதிஷ்டிரன் அரச சபையில் மன்னர் கேட்டால் உடன் 'உத்திரவு பெரியப்பா' என்று மட்டும் தான் சொல்வான்.  மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி நமக்கு கவலை இல்லை.  யுதிஷ்டிரன் சம்மதத்தை முதலில் பெற்று விட்டால் பிறகு தடையேதும் இல்லை, நிச்சயம் வெற்றி நமக்குத்தான்."

கர்ணன்: "மாமா!  நானும் இராஜ்யத்தைப் பற்றி ஏதும் சரியாக சிந்திக்கவில்லை.  துரியோதனன் பயந்தது போல இராஜ்யம் போய்விடுமோ என்று பயந்தேன்.  ஆனால் முழு இராஜ்யத்தையும் கண்முன்னால் மறைத்து விட்டீர்கள்!  மாமா!  நீங்கள் மிகவும் தந்திரசாலி.  தோல்வி பெற்றவர் வனவாசம் போக வேண்டும், யுதிஷ்டிரன் வென்றாலும் இராஜ்யம் திரும்பக் கிடையாது. துரியோதனன் வென்றால், எதிரி பாண்டவர்கள் வனவாசம்.  எனக்கு இது தாங்கள் சொன்ன பிறகு தான் புரிகிறது.  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  யுதிஷ்டிரன் நிச்சயம் ஏமாந்து போவான், அத்துடன் தோல்வியுடன் வனவாசம் போவான்."

சகுனி: "கர்ணா!  மிகவும் மகிழாதே.  யுதிஷ்டிரன் ஏமாற மாட்டான்.  பின் நமக்கு வெற்றியா என்றா கேட்கிறாய்?  நிச்சயம் யுதிஷ்டிரன் வனவாசம் போவான்.  ஆனால் தோல்வி என்று எண்ணி வனவாசம் போக மாட்டான், தன் வெற்றி என்றெண்ணித்தான் போவான்.  அது எனக்குத் தெரியும்.  ஆனால் அதை உனக்கோ, துரியோதனனுக்கோ எடுத்துச் சொல்லி இப்போது புரிய வைக்க முடியாது.  'எதிரியின் பலம், பலவீனம் என்ன?' என்பதை அறிபவனே மிக புத்திசாலி.  எனக்கு, பலவான் யுதிஷ்டிரனை நன்றாகத் தெரியும்.  நேரம் பொன் போன்றது.  காலத்தை வீணாக்கக் கூடாது.  

துரியோதனா! ஞாபகம் இருக்கட்டும், உன் தந்தையின் உத்திரவு, நாளை யுதிஷ்டிரன் அரசவையில் மறுபடியும் சொக்கட்டான் ஆடுவது.  எனக்கு நேரம் ஆகிறது.  இனி நான் புதிதாக செம்பை உருக்கி வார்த்து, காய் செய்து, இரவு முழுவதும் விழித்திருந்து என் இஷ்ட தேவதைகளிடமிருந்து சக்தி பெற வேண்டும்.  நான் வருகிறேன்."



முன்னுரை
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
பகுதி மூன்று
பகுதி நான்கு
பகுதி ஐந்து
பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)