புதன், செப்டம்பர் 02, 2015

மாங்கொட்டையும் மகான்களும்


மாங்கொட்டையும் மகான்களும்

காஞ்சி முனிவர், பெரியவர், மகா பெரியவர் என்றெல்லாம் நாம் அன்புடன் வணங்கும், காஞ்சி சங்கராச்சாரியார் பலரும் எளிதில் புரிந்து கொள்ளும் படி வேதாந்தக் கருத்துக்களை சிறு சிறு கதைகள் மூலமாகவோ, அல்லது நாம் தினமும் காணும் காட்சிகளை அவர் வார்த்தைகளில் அன்றுதான் நாம் புதிதாகப் பார்ப்பது போல புதிய கோணத்தில் விளக்கிப் புரிய வைப்பார். 'கல்கி' இதழில் அவர் அருள் வாக்கு சிந்தையில் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய தேன் அமுதுகள். நான் சமீபத்தில் 'Everyday Inspirations' என்ற 2012 ம் வருட தினசரி நாட்குறிப்பு (டைரி) புத்தகத்தைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். ஒரு பக்கம் பெரியவாளின் படம், பல்வேறு சமயங்களில் எடுத்தது, அதன் கீழே ஆங்கிலத்தில் இரண்டு அல்லது முன்று வாக்கியங்களில் அவர் அவ்வப்போது சொன்ன விஷயங்கள். எதிர்புறம் நாட்குறிப்புக்கு என முழுப் பக்கம் என 800 பக்க அளவினாலான கனமான புத்தகத்தைப் பார்த்தேன், படித்தேன். அதில் July 17, 18, 19 நாட்குறிப்புக்கு எதிர்புறம் பெரியவாள் சொன்னவற்றை படித்ததின் பிரதிபலிப்புதான் இந்த எழுத்துகள், எண்ணங்கள்.

அவர் மாங்கொட்டையைச் சொல்லி மகான்களை உணர வைத்திருக்கிறார். இரண்டுக்கும் நடுவில் நமது இந்தப் பிறவியையும் உணரச் சொல்லியிருக்கிறார். என்ன இது! மாங்கொட்டைக்கும் மகான்களுக்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா! என்ற பழமொழி நினைப்புக்கு வரலாம். முதலில் நான் உணர்ந்தபடி கூறுகிறேன். பின் பெரியவரின் வார்த்தைகள். பிறகு உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள்.

முக்கனிகள் என்ன என்று தெரியும்; வாழை - மா - பலா. அதில் மாம்பழத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார், முன்றில் நடுவாக இருப்பதினாலோ என்னவோ. வேறு விதமாகவும் யோசிக்கலாம், மாங்கொட்டையை விதை என்று எடுத்தாள்வதினால் . வாழைக்கு விதை கிடையாது. வாழையடி வாழையென தாய் மரத்தின் அருகிலேயே கன்றுகள் வளர்ந்து பலன் தரும். பலாவை எடுத்துக் கொள்வோம். ஒரு மரத்தில் பல பழங்கள்; ஒரு பழத்தில் பல விதைகள். மொத்தத்தில் ஒரு மரத்தில் ஏகப்பட்ட விதைகள். மாம்பழம் என்று வரும் போது எவ்வளவு பெரிய பழமானாலும் நடுநாயகமாக உள்ளே ஒரு விதைதான். மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு பாதை ஓரம் கோட்டையை வீசி எறிந்துவிட்டு செல்வது பலரின் வழக்கம். யாரோ எறிந்த கொட்டை செடியாகி, மரமாகி, பின்னொரு நாள் அதே பாதையில் வரும் மனிதர்களுக்குப் பழம் தரும். அதே போல் கை தேர்ந்த தோட்டக்காரர்கள் மாங் கன்றுகளை வளர்த்து, வெட்டி, ஒட்டி, புது விதமான ஒட்டு மாம்பழம் என்று உண்டாக்குகிறார்கள். மனிதர்களுக்கு வருவோம். ஆண், பெண் என ஜோடி சேர்ந்து தம்பதிகளாகி, தாம்பத்திய வாழ்க்கை தொடங்கி மகன், மகளைப் பெறுகிறார்கள். வம்சம் விருத்தியாக வேண்டும் என்ற ஆவல் அந்த தம்பதிகளின் தாய் தந்தையற்குக்கு இன்னமும் அதிகம். அதே சமயம் அபூர்வமாக லக்ஷத்தில் ஒருவர், கோடியில் ஒருவர் என, ஒரு ஆணோ, பெண்ணோ தனித்திருந்து, தவமிருந்து, ஆன்ம விசாரம் செய்து, பலராலும் வணங்கப்பட்டு, வழிகாட்டியாய், மகான்களாய்ப் போற்றப்படுகிறார்கள். ஆக மாங்கொட்டைக்கும் மகான்களுக்கும் உணர்வுப் பூர்வமான பிணைப்பு இருப்பதாகத் தோன்றுகிறது அல்லவா? மேலே தொடர்வதற்கு முன் காஞ்சி முனிவர் வார்த்தைகளுக்கு வருவோம்.

ஜூலை 17, 2012: "ஒரு மாமரம் ஏராளமான பழங்கள் தருகிறது. பழத்தின் நோக்கம் அதனுடைய விதையிலிருந்து ஒரு மரம் வளர வேண்டும் என்பது தான். ஆனால் மாம்பழங்கள் எல்லாவற்றின் கொட்டைகளும் முளைத்து மரங்களானால் வேறு எந்த மரத்திற்கும் உலகில் இடம் கிடைக்காது. அதே சமயத்தில் பல நூறு பழங்களிலிருந்து ஏதோ ஒரு மாங்கொட்டை மரமானால் அதுவே நமக்கு திருப்தி தருவதில்லையா?"

அடுத்து மனிதர்களைப் பற்றி அவர் சொன்னது, ஜூலை 19, 2012: "நம்மில் பல லக்ஷம் அல்லது கோடி நபர்கள் சுயமாக ஆன்ம ஞானம் அடையாமல் வாழ்க்கையை நடத்தினாலும் பரவாயில்லை. கொடானுகொடியில் யாரோ ஒருவர் முழுமையை, பூரணத்துவத்தை அடைந்தால் அது போதும். படைப்பின் பலன் அது தான். அந்த ஒரு பூரணாத்மா நம் எல்லோருக்கும் எல்லா சுகத்தையும் கொடுப்பார்."

மாம்பழம் முழுவதுமாக உபயோகமாகிறது. அதன் கதுப்புப் பகுதிகள் மனிதர்கள், பறவைகள், அணில் போன்ற சிறு பிராணிகள் முதலாய், ஆடு மாடு வரை, எல்லோருக்கும் உணவாகிறது. கொட்டையும் அதே போல உணவாகிறது. ஏதோ ஒரு மாங்கொட்டை மட்டும் சிறு செடியாக வளர்ந்து, பெரிய மரமாக உயர்கிறது. அதே போல் மனிதர்களும், அவரவர் செய்யும் தொழிலினாலோ, அல்லது மற்றவர்களுக்கு செய்யும் சேவையினாலோ, பிறவியின் பலனைப் பெறுகிறார்கள். அதே போல் மகான்களும் தனக்கு என குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும் உலக சமூகத்தையே தன் குடும்பமாகக் கொண்டு வழி காட்டுகிறார்கள். மாங்கொட்டை தன்னை மறைத்து மரமாவது போல.

அடுத்து, மனிதர்களான நம்முடைய வினை, விதை என்பது பற்றி அவர் கூறுவது: ஜூலை 18, 2012: "ஜகன் மாதா, அம்பாளின் கட்டளை, சங்கல்பம்: ஒரு மரத்தின் விதையை விதைக்க, அந்த மரம் தான் விளையும். ஆனால் மனிதர்கள் முன் ஜன்ம வினைகளே விதையாக ஆகி, இந்தப் பிறவியில் பலன் அனுபவிக்கிறோம்." இந்த மூன்று விஷயங்களை நன்கு அசை போட, மனத் தெளிவு உண்டாகும். இப்பிறவியின் நல்ல செயல்கள், நல்ல பிறவியைத் தரும். கரும வினை, செய்யும் செயல்கள் - இவைதான் விதை. நல்ல விதை விதைக்க வேண்டும்; நல்ல மனிதர்களாக வளர வேண்டும். ஈஸ்வர கிருபை வேண்டும்; மகான்கள் கடாட்சம் வேண்டும் .