ஞாயிறு, ஏப்ரல் 04, 2021

‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’

 ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’  

 சில தத்துவங்கள், சிறுவர்கள் விளையாட்டில் கூட, சுலபமாக

பேசப்படுகிறது. உதாரணமாக, ஒரு சிறுவன், மற்ற ஒரு சிறுவனின் காதில், ரகசியம் பேசுவதுபோல, ஏதோ சொல்லுவான். இது  மற்ற சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.

இரண்டாவது சிறுவனை மற்ற சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு, அந்த ரகசியத்தை அறிய ஆவலாய் வினவுவார்கள். அவனும் மிகவும் ‘பிகு’ செய்துவிட்டு, ‘உங்களில் தகுதியான ஒருவனுக்கு மட்டும் நான் காதில் ரகசியமாய் கூறுகிறேன்’, என சொல்லி அவன் காதில், ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது’ என்று சொல்லுவான். அவனும் தான் ஏதோ பெரிய ரகசியத்தை தெரிந்து கொண்டது போல் கூத்தாடுவான். அதைத் தொடர்ந்து மற்ற சிறுவர்கள், அந்த முதல் மூன்று சிறுவர்களையும் சூழ்ந்து கொண்டு ரகசியம் அறிய ஆவலுறுவார்கள். சிறிது நேரத்தில் எல்லா சிறுவர்கள் காதிலும் இந்த ரகசியம் சொல்லப்படும்.

‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது’ - இது என்ன ரகசியம்? என்ன விளையாட்டு?  சில உண்மைகள் சுலபத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை.  அதற்கு இது ஒரு உதாரணம்.

‘அரிசி’ - இதுதான் உணவுக்கு முதல் ஆதாரம். ஆனால், அரிசியை மட்டும் விதைத்து, உணவை உற்பத்தி செய்ய முடியாது.  நெல்லை விதைத்து, பயிர் செய்து, நெல் மூட்டைகளை அறுவடை செய்ய முடியும். ‘உமி’ நமக்கு உபயோகம் இல்லை, என்று நினைத்து உமி நீக்கி, அரிசியை மட்டும் விதைத்தால் என்ன ஆகும்? உள்ளதும் மண்ணோடு மண்ணாகும்.  ஆக, ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’

வாழ்க்கையில் எது அவசியம் இல்லை, அது உபயோகம் இல்லை என்று எதை உதாசீனம் செய்கிறோமோ, அது இல்லாமல் வாழ்க்கை இல்லை.  இது ஒரு வேதாந்தம் - ஒரு தத்துவம். இதை உணர ஏற்பட்ட சிறுவர்கள் விளையாட்டு,
 ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’