அரியும் சிவனும் ஒன்று; அறியாதவன் வாயில் மண்ணு.
அரியும் சிவனும் ஒன்று; அறியாதவன் வாயில் மண்ணு.
இது சாதாரணமாய் பலராலும் சொல்லப்படும் வார்த்தைகள்.
அரியை பற்றி முழு நினைவுடன் இருந்து, சிவனை சிந்திக்காமலே
இருப்பவன், 'வாயில் மண்ணு' என்று நினைக்க மனம் ஒப்பவில்லை.
அதேபோல் 'எல்லாம் சிவமயம்' என சிவத்தில் மூழ்கிய பக்தன்
'வாயில் மண்ணு' என நினைக்கவும் மனம் ஒப்பவில்லை.
ஏதோ பிழை இருப்பதாக தோன்றியதால், சிந்திக்க மண் மனத்தில்
மறைந்து மெல்ல மெல்ல எண்ண, எண்ண ஒரு தெளிவு ஏற்பட்டது.
அரியும் சிவனும் ஒன்று
அறியாதவன் வாய் மெல்லும்.
ஆமாம்! எல்லாம் எங்கும் நிறைந்த பிரம்மத்தை நினைத்து உணர,
எல்லாம் தானாகவும், தானே எல்லாமாகவும் 'ஒன்று அல்லது மற்று
வேறு ஒன்று இல்லை' என உணர, 'மௌனம்' மட்டும்தான்
நிலைக்கும். ஆக அறியாதவன் வாய், பேச்சு, அது இது என மெல்லும்.
இதை என் நண்பருடன் பகிர்ந்து கொள்ள, அவர் சொன்னது இங்கே!
அவரைப் பற்றி: தினமும் தவறாமல் விஷ்ணு பூஜை செய்து, பின் தன்
தாயாருக்கு காலை ஆகாரம் தன் கையால் பரிமாறி, பின் நேரம்
இருந்தால் தானும் உண்டுவிட்டு அலுவலகம் செல்வார். நேரமின்மை
என்று வந்தால், மதிய ஆகாரத்தை கையில் எடுத்துச் செல்வார்.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னது: "மண்ணை மறக்க முடியாது.
பிறவி என ஒன்று வந்து விட்டால், மண்ணே மனித உடம்பு. பிறந்த
குழந்தையை கூட 'பச்சை மண்' என அன்பாக கூறுவார்கள்.
மண்ணை நம்மால் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.
பிறப்பிலிருந்து மறையும் வரை 'மண்'. மண்ணில் ஆரம்பித்து 'விண்'
என மேலுலகம் வரை, மண்ணை மனிதன் மறக்கவும் முடியாது,
மறுக்கவும் முடியாது.
ஆக, அது இதுதான்!
அரியும் சிவனும் ஒன்று.
அறியாத வரையில் மண்ணு.
எல்லாம் ஒன்று என பிரம்மத்தில் நிலைத்து நின்றால், மண்ணும்
விண்ணும் ஒன்றாய் தெரியும். அது புரியும் வரை மண்ணில் பிறவி
தொடரும். அதாவது மண்ணில் பிறந்து, பிறவி சுழற்சியில் அந்த
ஜீவன், மறுபடி, மறுபடி பிறந்து, பிறந்து, கர்மவினைப்படி வாழும்.
ஆமாம்.
அரியும் சிவனும் ஒன்று.
அறியாத வரையில் மண்ணு."
0 Comments:
கருத்துரையிடுக
<< Home