செவ்வாய், ஜூலை 12, 2005

இன்னாத கூறல்

பள்ளியில் படிக்கும் காலத்தில் என் தந்தையார் எனக்கும் என் தம்பிக்கும் கூறிய நீதிக் கதைகள் பல உண்டு. அப்போதெல்லாம் அவைகளின் உள்ளர்த்தம் புரிந்ததில்லை - அது மட்டுமல்ல! எப்படி அந்தக் கதைகளைக் கேட்காமல் தப்புவது என்பதைப் பற்றித்தான் மனம் எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் 'சரியான அறுவை' என்றுதான் அந்தக் கதைகளைப் பற்றி நினைப்பு.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானபின் இப்பொது நினைக்கும் போது அந்தக் கதைகளின் அருமை புரிகிறது! நல்லவேளை இப்போதாவது புரிந்ததே என்ற சந்தோஷம் தான்! ஞாபக சக்தி இப்பொதும் கொஞ்சம் இருப்பதால், அந்தக் கதைகளில் சிலதை எழுத முடிகிறது! எத்தனை கதைகளை மறந்திருக்கிறேனோ தெரியாது!

மற்றவர்களைப் பற்றி இழிவாகவோ, தவறாகவோ பேசுவது - ஏன் ஒரு விளையாடுக்குக் கூட கிண்டலாகப் பேசுவது என் தந்தையாருக்கு சிறிதும் பிடிக்காது. எனக்கு கிண்டலாகப் பேசுவது பிடிக்கும்; அப்படிப் பேசும் போதெல்லம் 'அதிகப் பிரசங்கி' என்று திட்டும், சில சமயம் அடியும் வாங்கியிருக்கிறேன்! சமீபத்தில் கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பு படிக்கும் போது, இந்தச் செய்யுள் தென்பட்டது.

"பாம்பினைப் பற்றி ஆடாதே
பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே
வேம்பினை யுலகிலூட்டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்க நாட்டாதே"

திருவள்ளுவரின் இந்த இரு குறள்களும் இந்த விஷயத்தைப் பற்றிக் கூறுகின்றன
1. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

2. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

மேலும் வளர்த்தாமல் அவர் சொன்ன ஒரு கதையைத் தருகிறேன்.

இன்னாத கூறல்

ஒரு ஊரில் இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த இரு சகோதரர்களுக்கும் திருமணம் ஆயிருந்தும், மகவு இல்லை! மூத்தவர் தன் நிலத்தையெல்லாம் பார்த்துப் பராமரிக்கும் பொறுப்பை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு வாணிபம் செய்ய வெளிநாடு புறப்பட்டார். அண்ணனின் மனைவி ஒரு பக்திமான். ஊரில் இந்த இரு குடும்பத்தைப் பற்றியும் நல்ல பெயர். தம்பியும் பொறுப்புடன் அண்ணனின் நிலத்தையும், மற்றும் ஆடு மாடுகளையும் கவனித்து வந்து கொண்டிருந்தார்.

சிறிது நாட்கள் கழித்து, தம்பி தன் உடலில் தேமல் போல வந்திருப்பது கண்டு, ஊர் மருத்துவரைப் போய் பார்த்தார். மருத்துவர் வந்திருப்பது வெண் குஷ்டம் என்றும் மருந்தால் குணப்படுத்த முடியாது என்றும் கூறிவிட்டார்.

இதைக்கேட்ட தம்பியும் மிகவும் மனமுடைந்து, ஊரிலுள்ள சாமியாரைப் போய்ப் பார்த்தார். அந்த சாமியார் நடந்ததையெல்லாம் கேட்டு, இந்தப் பிணி வந்ததற்கு முன் வினையே காரணம் என்றும், இதைப் போக்க வழி இல்லை என்றும் சொன்னார். மனம் வருந்திய தம்பியும், தான தருமங்கள் செய்து மிகவும் நல்ல முறையில் வாழ்ந்து வரும் தனக்கு இதைப்போலொரு கஷ்டம் ஏன் வந்தது என அழுது புலம்பினார். இதைப் பார்த்த சாமியார் மனம் இரங்கி, தான் சொல்வது போல செய்தால் இந்தப் பிணி போக வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனால் மறு பேச்சு பேசாமல் தான் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தம்பியும் பிணி போவதற்கு எதுவும் செய்யத் தயார் என்றார். சாமியார் தம்பியிடம், தினமும் வயல் வேலைகளையெல்லாம் முடித்த பின், குளித்துவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்று, அண்ணியிடம் பாகவத விளக்கப் பாடம் பெறுமாறு கூறினார். பாகவத விளக்கம் பெற பக்தியுடன் ஒரு சீடன் போல அமர்ந்து கேட்க வேண்டும் என்றும், மற்றும் இது ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரை தொடர வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, இந்தப் பாடம் தனியாக நடக்க வேண்டும் என்றும், இதைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் கூறினார்.

தம்பியும் இந்த வினோதமான கட்டளைகளைப் பற்றி யோசித்தாலும் நோய் போக வேண்டும் என்பதால், நேரே அண்ணியிடம் சென்று நடந்ததை விவரித்தார். அண்ணியும் ஊர் சாமியார் சொன்னால் அது நல்லதிற்காகத்தான் இருக்கும் என்று சொல்லி, அன்றிலிருந்தே பாடத்தை ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார்.

இந்த பாகவதப் பாடம் தொடங்கி தினமும் நடக்க ஆரம்பித்தது. தம்பியின் உடலில் இருந்த தேமல் பெரிதாக ஆரம்பித்தது; ஆனாலும் அவர் பாடம் கேட்பதை நிறுத்தவில்லை. ஊரில் இது பற்றி முதலில் அரசல் புரசலாக பேச ஆரம்பித்தனர். எதற்காக அண்ணன் வீட்டிற்கு தினம் மாலை செல்ல வேண்டும், நள்ளிரவு வரை இருக்க வேண்டும் எனப் பேச ஆரம்பித்தனர். வேறு யாரும் இல்லாதது, இதைப் பற்றி கேள்வி கேட்டால் தம்பியோ, அண்ணியோ பதில் சொல்லாதது ஊர் மக்களின் வாயை மேலும் வளர்த்தது. தம்பியின் காதிலே இந்த பேச்செல்லம் விழ ஆரம்பித்ததும், அவர் சாமியாரைத் தேடிப் போனார். சாமியாரும் தம்பி சொன்னதையெலாம் கேட்டுவிட்டு, முன் போலவே பாடத்தைத் தொடருமாரு சொன்னார். தம்பியும் மிக மனக் கஷ்டத்துடன் தினமும் பாகவத பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

சில நாள் கழித்து அண்ணன் ஊருக்குத் திரும்பி வந்தார். அப்போது தம்பி வயலில் இருந்ததால் அவருக்கு அண்ணன் வந்த செய்தி தெரியாது. அண்ணன் வந்த செய்தி கேட்ட உடனேயே, ஊரில் இருந்த சிலர் ஒன்று சேர்ந்து அவரைப் போய் பார்த்தனர். அவர் மனைவியைப் பற்றியும், தம்பியைப் பற்றியும், தவறாக நிறைய வார்த்தைகள் பேசி, 'இருவரும் தினமும் நள்ளிரவு வரை தனியாக இருந்தது ஏன்' என விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அண்ணனும், தன் மனைவியைக் கூப்பிட்டுக் கேட்க, அவர் தம்பியைக் கேட்குமாறு கூறிவிட்டார். அண்ணனும், தம்பி வந்தவுடன் அவரை கேட்க, அவர் அண்ணனையும், அண்ணியையும், ஊர் சாமியாரிடம் அழைத்துச் சென்றார்.

சாமியாரை வணங்கி ஊர் மக்கள் அண்ணனிடம் பேசியதையும், அண்ணன் தன்னை விசாரித்ததையும் கூறி, 'தாங்கள் தான் இதை விளக்க வேண்டும்' என்று கேட்டார். சாமியார் தம்பியைப் பார்த்து, 'முதலில் உன் சட்டையை எடுத்துவிட்டுப் பார் - பிறகு புரியும்’ என்றார். தம்பியின் உடலில் இருந்த தேமல் காணவில்லை. உடனே தம்பி சாமியாரை விழுந்து வணங்கினார்!

சாமியார் ஊருக்கு விளக்கினார். 'ஊழ்வினைப் பயனால் இவருக்கு வெண்குஷ்டம் வந்து விட்டது. அதைப் போக்க எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரிந்தது. இவருடைய நோயை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதானால் இப்படியொரு வினோதமான வழி சொன்னேன். ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி தவறாகச் சொன்னால் அது பெரும் பாவம். பிழையாக தூற்றப்பட்டவரின் பாபங்கள், தூற்றுபவருக்கே போய் சேரும். இந்த ஊரில் இவர் பாகவதம் கேட்பது பற்றி தெரியாமல் யார் யாரெல்லாம் தவறாகப் பேசினார்களோ, அவர்கள் பேச்சுக்குத் தகுந்தபடி, இந்த நோய் இவரிடமிருந்து மற்றவர்களுக்கு போய் விட்டது. உங்கள் சட்டைகளை எடுத்து விட்டுப் பாருங்கள்' எனக் கூற, மக்கள் விழித்து பின் ஒவ்வொருவராக சட்டையைக் கழற்ற ஆரம்பித்தனர்.

ஊரில் யாரெல்லாம் தவறாக பழி பேசினரோ, அவர்கள் உடலில் எல்லாம் சிறு தேமல் இருந்தது. ஊர் மக்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கி தலை குனிந்து நின்றார்கள். அண்ணனும், தம்பியும், சாமியாரை விழுந்து வணங்கினர்.