ஞாயிறு, ஏப்ரல் 04, 2021

‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’

 ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’  

 சில தத்துவங்கள், சிறுவர்கள் விளையாட்டில் கூட, சுலபமாக

பேசப்படுகிறது. உதாரணமாக, ஒரு சிறுவன், மற்ற ஒரு சிறுவனின் காதில், ரகசியம் பேசுவதுபோல, ஏதோ சொல்லுவான். இது  மற்ற சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.

இரண்டாவது சிறுவனை மற்ற சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு, அந்த ரகசியத்தை அறிய ஆவலாய் வினவுவார்கள். அவனும் மிகவும் ‘பிகு’ செய்துவிட்டு, ‘உங்களில் தகுதியான ஒருவனுக்கு மட்டும் நான் காதில் ரகசியமாய் கூறுகிறேன்’, என சொல்லி அவன் காதில், ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது’ என்று சொல்லுவான். அவனும் தான் ஏதோ பெரிய ரகசியத்தை தெரிந்து கொண்டது போல் கூத்தாடுவான். அதைத் தொடர்ந்து மற்ற சிறுவர்கள், அந்த முதல் மூன்று சிறுவர்களையும் சூழ்ந்து கொண்டு ரகசியம் அறிய ஆவலுறுவார்கள். சிறிது நேரத்தில் எல்லா சிறுவர்கள் காதிலும் இந்த ரகசியம் சொல்லப்படும்.

‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது’ - இது என்ன ரகசியம்? என்ன விளையாட்டு?  சில உண்மைகள் சுலபத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை.  அதற்கு இது ஒரு உதாரணம்.

‘அரிசி’ - இதுதான் உணவுக்கு முதல் ஆதாரம். ஆனால், அரிசியை மட்டும் விதைத்து, உணவை உற்பத்தி செய்ய முடியாது.  நெல்லை விதைத்து, பயிர் செய்து, நெல் மூட்டைகளை அறுவடை செய்ய முடியும். ‘உமி’ நமக்கு உபயோகம் இல்லை, என்று நினைத்து உமி நீக்கி, அரிசியை மட்டும் விதைத்தால் என்ன ஆகும்? உள்ளதும் மண்ணோடு மண்ணாகும்.  ஆக, ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’

வாழ்க்கையில் எது அவசியம் இல்லை, அது உபயோகம் இல்லை என்று எதை உதாசீனம் செய்கிறோமோ, அது இல்லாமல் வாழ்க்கை இல்லை.  இது ஒரு வேதாந்தம் - ஒரு தத்துவம். இதை உணர ஏற்பட்ட சிறுவர்கள் விளையாட்டு,
 ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது!’  

சனி, ஏப்ரல் 03, 2021

அய்யம்பேட்டை விவகாரம்!

 அய்யம்பேட்டை விவகாரம்!

 
அய்யன்பேட்டை என்பது மருவி அய்யம்பேட்டை என வந்தது. அய்யன் - மதிப்புக்கும்  மரியாதைக்கும் உரியவர்கள், பேட்டை – வாழும் ஊர். ஆக அய்யன்பேட்டை.

விவகாரம் என்ற உடனே ஏதோ விபரீதம் என ஊகிக்கத் தோன்றுகிறது, அல்லவா! ஆமாம், கதை இதோ.

அந்த ஊரில் சகோதரர்கள் இருவர். வலுவானவர்கள், கூடவே விவகாரமானவர்கள். ஊரில் உள்ளவர்கள் ‘போக்கிரிகள்’ என அவ்விருவரைப் பற்றி எண்ணினாலும் வெளிப்படையாய் ஏதும் சொல்வது கிடையாது. துஷ்டனை கண்டால் தூர விலகு. அது அவர்களுக்கு தெரியும்.

அந்த ஊருக்கு வெளியூரிலிந்து பெரியவர் ஒருவர் வந்தார். மாலை நேரத்தில் சற்று நடந்து வரலாம் என புறப்பட்டார். பாதையில் நடக்க ஆரம்பித்ததும், எதிர்பட்ட அந்த ஊர்வாசி ஒருவர் மெதுவான குரலில்  சென்னார். "பெரியவரே! தயவு செய்து வேறு பாதையில் செல்லுங்கள். அதோ சற்று தூரத்தில் இந்த பாதையின் வாய்க்கால் மதகின் இருபக்கமும், எதிரும் புதிருமாய், இந்த கிராமத்தின் போக்கிரிகளான இரு சகோதரர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களால் தங்களுக்கு பிரச்சனை ஏதும் வரலாம். ‘துட்டரை கண்டால் தூர விலகு’ வார்த்தைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும்."  மிகவும் பயந்து, மெதுவாக சொல்லிவிட்டு வேறு பாதையில் சென்று மறைந்தார்.

பெரியவருக்கு தன்னம்பிக்கை அதிகம் போலும். நாம் ஏதும் வம்பை உண்டாக்கப் போவதில்லை. 'ஒதுங்கி ஓரமாய் போனால், அவர்கள் ஏன் வீண் வம்பிற்கு வரப்போகிறார்கள்?' என்ற நினைவோடு மேலே நடந்தார்.  சிறிது யோசனையும் கூட, 'உள்ளூர் அனுபவஸ்தர் சொல்கிறார், ஏதாவது வம்பு வந்து விடுமோ?' என்று.

அவர்கள் இருந்த இடம் வரும்போது அவர்கள் இருவரும் காரசாரமாய், ஏதோ ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு, ‘உனக்கு புத்தி இல்லை’ என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது பெரியவருக்குப் புரிந்தது. சற்று வேகமாய் நடந்து அவர்கள்  இருவரையும் கடந்து சென்றுவிடலாம் என மனது ஒருபக்கம் சொன்னது. ‘மனோ வேகம்’ என்று சொல்வார்களே, அந்த வேகம், அடுத்த கணம் இருவருக்கும் இடையே என்னதான் பிரச்சனை இருக்கும். இந்த ஆவலும் எழுந்தது.

பெரியவர், அவர்கள் பக்கம் நெருங்கி வந்தபோது இடதுபக்கம் இருந்தவன், எழுந்து பாதை நடுவே வந்து அடுத்தவனைப் பார்த்து, ‘உனகக்கு என்ன சொன்னாலும் புத்தி இல்லை. இதோ பெரியவர் வருகிறார். அவர் காலில் விழுந்து புத்தி கேள்’ என ஆரம்பித்தான். எதிர்புறம் இருந்தவனும் எழுந்து வந்து, ‘உனக்குத்தான் புத்தியில்லை. பெரியவர் காலில் விழுந்து புத்தி கேள்’ என குரலை உயர்த்தினான். இருவரும் எதிரும் புதிருமாய் நடந்து பெரியவர் மேலே போக முடியாமல் செய்தனர்.

‘புகழ்ச்சி ஒரு புதைகுழி’ யாரோ சொல்லியிருக்கிறார்கள். இது பெரியவருக்கு தெரிந்திருக்கலாம். அதேசமயம், ‘புகழ்ச்சி போதை தரும்’. கள் உண்டால்தான் போதை தலைக்கு ஏறும். ஆனால் தகுதியில்லாத புகழ்ச்சி, அளவுக்கு மீறிய புகழ்ச்சி, போதையை உண்டாக்கி சுற்றம் சூழ்நிலையை மறக்கடித்து விடும். பெரியவருக்கு புகழ்ச்சி போதை தந்தது.

'ஆகா! நம்மை பெரிய மனிதனாய் மதித்து இந்த இருவரும் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் குறையை கேட்டு சமாதானம் செய்தால்,   இந்த ஊர் மக்களும் நம்மை மதிப்பார்கள். இந்த முரடர்களையும் பணிந்து வாழ வழிகாட்டலாம்' என்று பெரியவர் மனம் புகழ்ச்சி போதையில் மகிழ்ந்தது! 

பெரியவர் என்ன? ஏது? என்று பலவாறு கேட்டபோதும், இருவரும், ‘நீ அவர் காலில் விழுந்து புத்தி கேள்’ என திரும்ப திரும்ப கூறிக்  கொண்டிருந்தவர்கள், திடீரென, 'ஏன் நான் அவர் காலில் விழுந்து என்ன புத்தி கேட்பது, அவர் வேண்டுமானால் என் காலில் விழுந்து என்ன என்று கேட்கட்டுமே', என ஆரம்பித்தான ;. பெரியவருக்கு விபரீதம் புரிந்தது. விட்டால் போதும் கிளம்பினாலும், இருவரும் வழியை மறித்து, ‘என் காலில் விழுந்து என்ன என்று கேள்’ என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவர்கள், ‘அவன் காலில் விழுந்தால் தெரியும் சேதி என் காலில் முதலில் விழு’ என மிரட்டவும் ஆரம்பித்தனர்.

பெரியவருக்கு இப்போது இந்த இருவரும் பெரிய போக்கிரிகள் என புரிந்தது. ஆனால் காலம் கடந்த ஞானம். உள்ளூர்வாசி, ஒதுங்கி வேறு பாதையில் போகும்படி சொன்னபோதும், தானே வலிய வந்து வம்பில் மாட்டியது புரிந்தது. ஒரு நொடியில் தீர்மானித்தார். ‘வீராப்பு, விவாதம்’ விவேகமாகாது.
 
பணிவு பயத்தின் விளைவு அல்ல, விபத்திலிருந்து வெளிவரும் வழி என தீர்மானித்து சொன்னார்.  "நீங்கள் இருவரும் மிக புத்திசாலிகள் என நான்   வரும்போதே சொன்னார்கள். புத்தியில்லாத நான், உங்களில் யார் அதிபுத்திசாலி என்பதை எப்படி தெரிந்து கொள்வது. இருவரும் சேர்ந்து நில்லுங்கள். உங்களிடம் புத்தி கேட்டுத் தெரிந்து கொண்டதற்கு வணங்கி
விடைபெறுகிறேன்."

பெரியவர் கைகூப்பி விடை பெற்றார். இக்கட்டிலிருந்து விடுபட்டார்.  என்ன செய்வது? இன்றும் ‘அய்யம்பேட்டை விவகாரம்’ பல ஊர்களில் பல இடங்களில் நடக்கிறது.   ஆனால் ‘மதிப்புக்குரியவர்கள் வாழும் ஊர்’ என பல அய்யன்பேட்டைகள் இருந்தபோதும் ‘அய்யம்பேட்டை விவகாரம்’  மட்டும் தனித்து நின்றுவிட்டது.