வியாழன், ஜூன் 23, 2005

பகவத் பாகவத பக்தி

கல்லூரியில் படிக்கும் போது முதல் முதலாக பகவத் கீதையைப் பற்றி படித்தேன். பாரதியாரின் தமிழ் விளக்கங்கள், கீதையைப் பற்றி ஒரு நல்ல எதிர்பார்ப்பை எனக்குள் வளர்த்தது. முக்கியமாக சிதப்பிரஞ்ஞன் பற்றி (சருக்கம் 45ல் இருந்து 53 வரை) எழுதப்பட்டவை என்னை மிகவும் பாதித்தது.

என் தந்தையாரின் இந்தக்கதை அதற்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும், எனக்கு இக்கதையின் அர்த்தம்/பாடம் கீதையைப் பற்றி படிக்க ஆரம்பித்த பிறகு தான் புரிந்தது. இந்தக் கதையும் அவரின் புத்தகத்தில் (தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்) இடம் பெற்றிருக்கிறது.

பகவத் பாகவத பக்தி

திருவரங்கம் கோயிலில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை, எனது நண்பர் விபரித்ததை, எழுத்து வடிவில் தருகிறேன்.

அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழாமில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் பல நேரங்களில் கருடன் சந்நிதியுடன் நின்று விடுவார்.

அரங்கன் திசை நோக்கி வணங்கிவிட்டு கருட மண்டபத்தில் சற்று இளைப்பாறி, மற்றவர்கள் திரும்பி வரும்போது தானும் திரும்பி விடுவார். பலவித விமர்சனங்கள், கேட்டும் கேளாதது போல், தினம் தினம் வருவதும் ஒரு சில நாட்கள் அரங்கன் கோயில் உள்ளே சென்று தரிசித்து வருவதுமாக இருந்த அவர், ஒரு நாள் கையில் பாகவதம புத்தகத்துடன் வந்து, கருட மண்டபத்தின் கீழ் பகுதியில் ஓரமாய் அமர்ந்து, சிறிது நேரம் படித்து விட்டு, வீடு திரும்புவது என வழக்கத்தை ஏற்படுத்துக் கொண்டார். ஆக அரங்கனை சென்று சேவிப்பது என்பது அபூர்வமாகி விட்டது.

பலரும் அவர் புத்தகம் படிப்பதை பார்த்துவிட்டு செல்வார்கள். பண்டிதர்கள் சிலர் நின்று சற்று நேரம் கேட்டு விட்டு செல்வார்கள். அதில் ஒரு சிலர் இவர் சில வரிகளை விட்டு விட்டு சில வரிகளை படித்து பக்கங்களை புரட்டுவதை பார்த்து, வயது மூப்பு காரணமாய் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க இயலாது ஆர்வம் ஒன்றே முதலாய் கொண்டு ஏதோ வயதான காலத்தில் படிக்கிறார் - பாவம்! தவறை தெரிந்தா செய்கிறார்? போகட்டும் என நினைத்து அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர்.

அங்கும் இங்கும், அவரவர் பேச, பண்டிதர் படிக்கிறாரே தவிர ஒரு ஒழுங்கும் இல்லை. பக்கத்தில் பாதி படிப்பது, மீதி விழுங்குவது என எதோ படிக்கிறார். அவ்வளவுதான்! மூப்பு காரணமாய் புத்தி சரியாக வேலை செய்யவில்லை, என பேசி கடைசியில் 'அதுவா! அது ஒரு அரைப்பைத்தியம்' என பட்டம் கட்டி விட்டார்கள்.

எது எப்படியோ! பண்டிதர், தான் தினமும் பாகவதம் படிப்பதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் அரங்கனை சேவிக்க, வெளியூரிலிருந்து, ஆச்சாரியார் நிலையில் உள்ள பெரிய பண்டிதர் ஒருவர் வரப்போவதாய் சேதி வந்தது. உள்ளூர் பண்டிதர்கள் கூடி அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்தனர்.

மேளதாளத்துடன், வேத கோஷத்துடன், பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்க வேண்டுமென முடிவு செய்யும் போது, கருட மண்டபத்தில் தினம் பாகவதம் படிக்கும் பண்டிதரைப் பற்றியும் பேச்சு வந்தது. அரைகுறையாக பாகவதம் படிக்கும் இவரை வெளியூர் பண்டிதர் பார்த்தால், இவர் படிப்பதைக் கேட்டால் உள்ளூர் பண்டிதர்கள் அனைவருக்கும் அவமானம். இதைத் தவிர்க்க என்ன செய்வது என்று கேள்வி பிறந்தது.

மூத்த பண்டிதர்கள் பலரும், அவர் ஒரு ஓரமாய் வயதான காலத்தில் ஏதோ ஆர்வத்துடன் படிக்கிறார்; அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்ல, சில இளவட்டங்கள் பிரச்சனையை வேறு விதமாக தீர்ப்பதாக சொன்னார்கள்.

“பெரியவரே! அரங்கனை தரிசிக்க வெளியூர் பண்டிதர் ஒருவர் வரப்போகிறார். மேளதாளம் என கூட்டம் அதிகம் கூடும். தாங்கள் பாகவதம் பக்தி சிரத்தையுடன் படிப்பதற்கு இங்கு இடைஞ்சலாய் இருக்கும். ஆகையால் ஒரு நாள் மட்டும், கிழக்கு கோபுரவாசல் பக்கம் மணல் வெளியில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து, எவ்வித தொந்தரவும் இல்லாமல் படிக்க வேண்டும்”, என பவ்யமாய் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அந்த அரைப் பைத்தியம் முரண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற பயமும் கூடவே இருந்தது.

ஆனால், அவரோ “ரொம்ப சங்தோஷம். முன்கூட்டியே சொன்னதற்கு மிக்க நன்றி. எல்லம் கண்ணன் கிருபை”, எனக் கூறி மறு நாள் தான் நேராக கிழக்கு கோபுரவாயில் வழியாய் வந்து, அங்கு மண்டபத்தில் பாகவதம் படிப்பதாக உறுதி கூறி விடை பெற்றார்.

இளைஞர்களுக்கு சந்தேகம். ஞாபக மறதி காரணமாய் பெரியவர் கருட மண்டபம் வந்து விட்டால் என்ன செய்வது என யோசித்து அன்று காலை தெற்கு கோபுர வாயிலில் இருவரும், கிழக்கு கோபுர வாயிலில் இருவரும் பெரியவரை எதிபார்த்து நின்றனர்.

பெரியவரும் சொன்னபடி கிழக்கு கோபுர வாசல் வழிவந்தார். அவரை உபசரித்து, மணல்வெளி மண்டபத்தில் அமர்த்த வந்த இளைஞர்களிடம், 'நீங்கள் வெளியூர் பண்டிதரை வரவேற்க செல்லுங்கள். நான் இங்கு பார்த்துக் கொள்கிறேன்', எனக் கூறி மண்டபத்தின் தூண் ஓரமாய் புத்தகத்தை வைத்து விட்டு, முன்னால் உள்ள மணல் வெளியில் பத்து அடி சதுரத்திற்கு சமன் செய்ய ஆரம்பித்தார். மேலாக தென்பட்ட சிறு கற்கள், தூசு தும்புகளை அகற்றி கைகளால் நன்றாக தட்டி மணலை அவர் சீர் செய்வதைப் பார்த்த அந்த இளைஞர்களுக்கு சிரிப்பு வந்தது. ஏதோ வரப்போகும் பண்டிதர் நேராக இங்கே வந்து, இவர் முன்னால் உட்கார்ந்து பாகவதம் கேட்கப் போவது போல, தன் முன்னால் மணலை சீர்செய்து விட்டு, அவர் புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், இனி இவர் எழுந்து வர மாட்டார் என சொல்லிக் கொண்டு வேகமாய் தெற்கு வாசலுக்கு, வெளியூர் பண்டிதரை வரவேற்கும் கூட்டத்தில் சேர விரைந்தனர்.

வெகு விமரிசையாக வரவேற்கப்பட்ட அந்த வெளியூர் பண்டிதர் கருட மண்டபம் வந்ததும், சற்று நேரம் உற்று கேட்டு விட்டு, எல்லோரையும் சற்று அமைதியாக இருக்கும்படி சொல்லி தொடர்ந்தார்.

“பண்டிதர்களே! இங்கு எங்கோ மிக மன அமைதியுடன் ஆத்ம சுகத்துடன் பாகவதம் படிப்பது என் காதில் விழுகிறது. அந்த யோகியை, பரம் பாகவதரை, முதலில் தரிசித்து வணங்கி, பிறகு அரங்கனை சேவிக்கலாம். அந்த மகானை தாங்கள் எனக்கு காட்ட வேண்டும்”, என கை கூப்பி தொழுதார்.

பண்டிதர்கள் பலருக்கும் ஆச்சர்யம்! கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி மணல் வெளியில் இருந்து கொண்டு பாகவதம் படிக்கும் அவர் குரல் இங்கு இவருக்கு எப்படி கேட்கிறது? ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிழக்கு கோபுர வாயிலில் இருந்து வந்த அந்த இளைஞர்களுக்கு மிக ஆச்சர்யம். ஆகா! அந்த பண்டிதர் பெரிய மகான் போலும்!இவர் அங்கு வந்து பாகவதம் கேட்பார் என நினத்துதானோ என்னவோ, தன் முன் மணலை சரி செய்து வைத்து விட்டு பாகவதம் படிக்கிறார் போலும் என நினைத்து உள்ளூர் பெரிய பண்டிதர்கள் வார்த்தையை எதிர்பார்த்து நின்றனர்.

உள்ளூர் பண்டிதர்களில் ஒருவர் தொடர்ந்தார். “ஸ்வாமி! இங்கு கருட மண்டபத்தில் உள்ளூர் பெரியவர், வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவர், தினம் இங்கு வந்து பாகவதம் படிப்பார். இன்று தாங்கள் வரும் போது கூட்டம் அதிகமாய் இருக்கும், அவருக்கு தொந்தரவு கூடாது என நினைத்து, இன்று மட்டும் அவரை கிழக்கு வாயிலில், அமைதியான சூழ்நிலையில் பாகவதம் படிக்கும்படி நாங்கள் தான் கேட்டுக் கொண்டோம். அவரும் சந்தோஷமாய் கண்ணன் கிருபை என சொல்லிப் போனார். அவர்தான் கிழக்கு வாயிலில் பாகவதம் படிக்கிறார் போலும்”.

இந்த வார்த்தைகளை கேட்டதும் வெளியூர் பண்டிதர், “ஆகா! நாம் எல்லோரும் அபசாரப்பட்டு விட்டோமே! இதற்கு நான் காரணமாகிவிட்டேனே! முதலில் அவரிடம் சென்று மரியாதை செலுத்தி விட்டு பிறகு தான் அரங்கனை சேவிக்க வேண்டும். பாகவத அபசாரம் கொடியது அல்லவா? சற்றே தள்ளியிரும் எனச் சொன்னது பாவம் அன்றோ? வாருங்கள், அவர் இருப்பிடம் போகலாம்” என விரைய, பலரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

உள் மணல் வெளியை தாண்டி, வெளி மணல் வெளியை அடந்த போது, எல்லோரையும் அங்கேயே சற்று நிற்கும்படி கையசைப்பின் மூலம் சொல்லி விட்டு, கூப்பிய கரங்களுடன் பாகவதம் படிக்கும் பண்டிதரின் வலது புறம் வந்து நின்றார். தனக்கு முன்னால் திரண்ட கூட்டத்தையோ, அல்லது வெளியூரிலிருந்து வந்திருந்த பண்டிதரையோ, பாகவதம் படித்துக் கொண்டிருந்தவர் கவனிக்கவில்லை. அவர் தமது வழக்கப்படி சில வரிகள் படிப்பதும், மெய்மறந்து தன் முன்னால் உள்ள மணல் பரப்பை மகிழ்வுடன் பார்ப்பதும், மாறி மாறி படிப்பதும், மெளனமாய் இருப்பதுமாக ஒருவாறு பாகவத புத்தகத்தை மூடி வைத்தார்.

அதுவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த வெளியூர் பண்டிதர் சற்று முன்பாக வந்து, பெரியவர் சமன் செய்து வைத்திருந்த மணல் திட்டை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, மிகவும் பய பக்தியுடன் அந்த மணல் திட்டிலிருந்து, சர்வ ஜாக்கிரதையுடன் சிறிது சிறிதாக மணல் துளிகளை தன் மேல் உத்திரியத்தில் திரட்டி, பாகவத பண்டிதரிடம் இரு கைகளாலும், மிக பணிவுடன் கொடுத்தார்.

அவரும் எழுந்து நின்று 'தங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லையே' என மன நெகிழ்வுடன் கூறி 'தாங்கள் ஸ்வீகரித்தபின் அல்லவோ, நான் பெற வேண்டும்', என்று கை கூப்பி நின்றார். வெளியூர் பண்டிதரோ, 'தங்களால் கிடைக்கப் பெற்றது. தங்களுக்கு முதலில் சமர்ப்பித்த பிறகு அல்லவோ மற்றவர்களுக்கு' எனக் கூறி மறுபடியும் மணல் துகள்களை உத்தரியத்துடன் காட்ட, உடனே பாகவதம் படித்த பண்டிதர் மிகவும் அடக்கத்துடன் சிறிது மணல் துளிகளை எடுத்து நெற்றியில் திலகமாய் இட்டுக் கொண்டு, சிரசிலும் தரித்துக் கொண்டு, சந்தனம் பூசிக்கொள்வது போல மார்பிலும் பூசிக் கொண்டார்.

இதைப் பார்த்த மக்களுக்கு ஏதும் புரியவில்லை. அதே சமயம் அவர்கள் மனத்தில் ஒரு தெளிவு. 'இது நாள் வரையில் அரைப் பைத்தியம் எனக் கருதப்பட்ட பெரியவர், சாதாரண பண்டிதர் இல்லை; கண்ணனின் கிருபை, அரங்கனின் அருள் பூரணமாய்ப் பெற்றவர். நாம் தவறு செய்துவிட்டோம்' என்ற எண்ணத்துடன் அவர்கள் மெளனமானார்கள். கூட்டத்தினர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கோண்டு இருக்கும் போது வெளியூர் பண்டிதரி தொடர்ந்தார்.

“ஸ்வாமி! தாங்கள் ஏன் பாகவத்தை தொடர்ச்சி விடாமல் படிப்பது இல்லை? சில பல இடங்களை விட்டுவிட்டு படிப்பதன் விபரம்தான் என்ன?”

பாகவதம் படித்த பண்டிதர் மிக அடக்கமாய் சிரித்துக் கொண்டே, “ஸ்வாமி! தாங்கள் எல்லாம் தெரிந்தும் தெரியாது போல் ஏன் கேட்கிறீர்கள்? பல நூறு மனிதர்கள் மன சந்தோஷத்துடன் உணவு உண்ணும் போது, அங்கே ஒரு பசித்தவன், அந்த விருந்தை பார்த்தாலும் அவன் பசி போகாதல்லவா? பசித்தவன் புசித்தால் அல்லவோ பசி போகும், வயிறு நிறையும், மனம் குளிரும்? அதே போல் பகவானை அனுபவிக்கும் போது, சுற்றிலும் பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அந்த ருசி தெரியாதல்லவா? தாங்கள் ருசி தெரிந்து, கண்ணன் பாத துளியை சேகரித்து எனக்கு கொடுத்தீர்கள். கண்ணனை கண்டேனே தவிர, அவன் பாத துளியை தரிசிக்க மறந்தேன். தங்களால் அந்த பாக்கியம் கிடைத்தது. தங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை. இன்று தங்கள் வருகையால் அல்ல்லவோ எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. நான் ஏதும் சொல்லுவதற்கு பதில், தாங்களே ஏதும் சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம். நானும் அதை உவப்புடன் கேட்பேன்.”

உடனே வெளியூர் பண்டிதர் கூட்டத்தினரைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“திருவரங்கவாசிகளே! நீங்கள் எல்லோரும் அரங்கனை தினம் தினம் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். பரம பக்தரான இந்த பண்டிதர் பாகவதம் படிக்கும் போது, என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. பேரருளாளன் கண்ணன் அறிவான். அவனை இவருக்கு தெரியும். இன்று காலை நான் வந்தவுடன் மேளதாள ஆரவாரத்திற்கும், வேத கோஷத்திற்கும் நடுவில் பாகவதம் படிப்பது என் காதருகில் மிக தெளிவாகக் கேட்டது. படிப்பது நின்றபோது சதங்கை ஒலி மட்டும் கேட்டது. ஆக பரமபாகவதாரன பெரியவர் முன் கண்ணன் களி நடனம் ஆடுகிறான். அதை அவர் அனுபவிக்கும்போது படிப்பதை நிறுத்தி விடுகிறார். கண்ணன் லீலை தொடற்கிறது. கண்முன் நின்ற கண்ணன் மறைந்ததும், பாகவதம் அங்கு தொடர்கிறது. மறுபடி கண்ணன் இவர் படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆட, கண்ணனை இவர் பார்ப்பதும், விட்டு விட்டு பாகவதம் படிப்பதும் தொடர்கிறது.

ஆக பாகவதம் எந்த குறையும் இல்லாமல் தொடர்கிறது. கருட மண்டபத்தில் இவர் தன் மேல் துண்டினால் தினமும் தன் முன்பாக சுத்தம் செய்துவிட்டு பிறகு பாகவதம் படிப்பது நம்மில் யாரும் அவர் முன்வந்து அமர்ந்து பாகவதம் கேட்போம் என்ற எண்ணத்தில் அல்ல. பாகவதம் படிக்க ஆரம்பித்ததும், கண்ணன் அவர் முன் தோன்றி, படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆடுகிறான். அவன் கால்படும் இடம் சுத்தமாக இருப்பதற்காகத்தான் தனது வஸ்திரத்தைக் கொண்டு சுத்தம் செய்கிறார். அதேபோல் இங்கு மணல் வெளியில் இவர் கையால் செய்த மணல்மேட்டில் கண்ணன் பாத சுவடுகள் படிந்திருப்பதைப் பாருங்கள். கண்ணன் இவர் முன் நடனம் ஆடியதற்கு அதுவே சாட்சி. அவர் தினமும் காணும் காட்சியைத்தான் நான் கண்டேன். இவர் தயவால் கண்ணன் களிநடனம் கண்டேன். அவன் பாதம்பட்ட இடத்திலிருந்து பாத துளி சேகரித்தேன். அதுதான் இந்த திருமண். திருவரங்கத்தில் பரம பாகவதர் இவர் வழிகாட்ட அரங்கனை சேவிக்க அனைவரும் செல்வோம்.”

அரைகுறை பைத்தியம் என அதுவரை ஊரால் கருதி வந்த அந்த பரம பக்தர் முன் செல்ல, அரங்கனை தரிசிக்க பின் தொடர்ந்தார் வெளியூர் பண்டிதர்!

திங்கள், ஜூன் 20, 2005

பாதுகா தரிசனம்

இந்தக் கதை என் தந்தையாருக்கு உண்மையாகவே ஏற்பட்ட அனுபவம். அப்போது நான் மன்னார்குடியில் எட்டாவது படித்தாக ஞாபகம் (1979). என் தந்தையார் இக்கதையை அப்போதே எழுதினாலும், 2003ல்தான் 'தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும்' என்ற புத்தகத்தில் முதன் முறையாக பதிப்பேறியது.

மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள விரும்பினால், முகவரி: பார்த்தசாரதி


பாதுகா தரிசனம்

நான் மன்னார்குடி வாசி.

ஊரின் பெயரைக் கேட்டதும் மன்னார்குடி மன்னன் அழகு என்று ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியைத்தான் நினைக்கத் தோன்றும். அந்த கோபாலனை ஒரு நாள் மாலை தரிசனம் செய்த போது கிடைத்த அபூர்வ அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதற்கு முன் மன்னார்குடியைப் பற்றி ஒரு வார்த்தை.

தஞ்ஞாவூர் அல்லது கும்பகோணத்திலிருந்து பஸ்ஸைப் பிடித்தால் ஒரு மணி நேரத்தில் மன்னார்குடியை அடையலாம். ஊரின் பெருமையை 'ஊர்பாதி குளம்பாதி' என்ற வழக்கிலிருந்து அறியலாம். பாம்பணியாறு ஊரை வலமாக வரும் அழகோடு கூட, மற்றும் ஒன்பது நீர் நிலைகள் பல்வேறு பெயர்களில் புராணகாலம் தொட்டு இன்று வரை இருந்து வந்து ஊருக்கு அழகூட்டுகின்றன.

ஹரித்ரா நதி என்ற பெரிய குளம் கோயிலின் வடக்கு பக்கம் உள்ளது. 23 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோபிகைகள் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமண பூச்சுகள் இந்த தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா நதி எனப் பெயர் பெற்றது எனக் கூறுவர். குளத்தின் நடுவே வேணுகோபாலன் சந்நிதி; இந்த பெரிய குளத்தை சுற்றிலும் செங்கல் சுண்ணாம்பு காரையுடன் கூடிய கரைக்கட்டு. இன்றும் ஒரு சேதமும் இல்லது பளிச்சென தெரியும் தோற்றம். கருங்கல்லினால் ஆன படித்துறைகள் எந்த நூற்றாண்டில் எந்த மன்னன் கட்டியதோ!

இன்று பல பொறியாளர்கள், பல நகரங்களிலும், குளம் குட்டைகளின், மழைநீரையோ, நதி நீரையோ, தேக்கி வைப்பதின் மூலம், நிலத்தடி நீரை காப்பாற்றி நல்ல முறையில் பெறலாம் என கூறுகிறார்கள். ஆனால், நம் முன்னோர்கள் பல தீர்த்தங்கள் என்ற பெயரில் புனிதமான பல நீர்நிலைகளை கட்டிப் பாதுகாத்து, பராமரித்து, நல்ல நிலையில் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஹரித்ரா நதி இன்றும் நல்ல நிலையில் பளிங்கு போல் நீருடன் பராமரிக்கப்படுவதற்கு ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தீர்த்த தரிசனம் செய்து கோயில் முன் வந்தால் கண்ணில் முதலில் படுவது 54 அடி உயரமுள்ள ஒற்றைக்கல் கருட ஸ்தம்பம்தான். கம்பீரமான அதன் உச்சியின் மேல் கருடனுக்கு என ஒரு சிறு அழகிய கோயில். ஆச்சரியமான அமைப்பு. அடுத்து பதினாறு கால் மண்டபத்தை தாண்டி ராஜகோபுரத்தை அடைகிறோம்.

கோயில் வாயிலை அடைந்ததும் நமது முதல் எண்ணம் கால் செருப்புகளை எங்கு விட்டுச் செல்வது என்பதுதான். இருபுறமும் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆமாம் - எல்லோரும் செருப்புக் காலுடன் தான் ராஜகோபுரத்தில் நுழைகிறார்கள். 'எல்லோரும் எவ்வழி அவ்வழியே நம்வழி' என நாமும் செல்ல வேண்டியதுதான். நூறு அடிக்கு மேல் கருங்கல் தளத்தில் நடந்து சென்றால் இரண்டாம் கோபுரவாயிலின் மண்டபத்தை அடையலாம். தென்புற திண்ணையில் காலணிகளை விட்டுச் செல்ல 'பாதணிகள் பாதுகாக்குமிடம்' என்று சிறு பலகையில் சாக்கட்டியால் எழுதிய விபரத்தைக் காணலாம்.

எந்தக் கோயிலிலும் இல்லாத இந்த சலுகை ஏன்? என்று நான் பலமுறை நினத்தது உண்டு.

ஆமாம்! கோபாலனின் எண்ணத்தை புரிந்து கொள்வது சுலபமா? பாதை தவறாமல் வழிப்படுத்த கூடவே ஒரு கோல். தவிற காடுமேடு சுற்றி, மேய்க்க அவன் செல்லும் போது அவன் பாதங்களைப் பாதுகாக்க பாதரக்ஷை. அவன் பணி செய்யும் பாதரக்ஷையை கோபுர வாயிலுக்கு வெளியே என்று வைக்காமல் உள்ளே என்று இடம் கொடுக்க எண்ணினானோ என்னவோ!

ஒருமுறை முதியவர் ஒருவர் ராஜகோபுரத்தை தாண்டி காலில் செருப்பு இல்லாமல் முன் மண்டபத்தை அடையுமுன் வெய்யில் சூட்டில் 'கோபாலா! கோபாலா!' என்று தவித்ததைப் பார்த்தேன். ராஜகோபுரத்திற்கு வெளியே காலணிகளை விட்டுவிட்டு வரும் பக்தர்கள், அவன் கோயில் உள்ளே கால்சூடு பொறுக்கமாட்டாமல் 'கோபாலா' எனக் கூப்பிட்டால் என்ன செய்வது? பக்தர்கள் வசதிக்காகவோ என்னவோ கோபுரவாயிலைக் கடந்து சில நூறு அடி தூரம் தாண்டி இரண்டாம் கோபுரவாயில் பக்கம் பாதணிகளை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவன் திருவுளம் போலும். பாதணிகளைப் பாதுகாக்கும் பெரியவர் அங்கு திண்ணையில் அமர்ந்திருப்பார்.

பல இடங்களில் காணப்படுவது போல், மரக்கூண்டுகள் கட்டி அதில் செருப்புகளை வைக்கும் நடைமுறை கோபாலன் சந்நிதியில் கிடையாது. பெயருக்கு மூங்கில் பிளாச்சுகளினால் ஆன தடுப்பு இடத்தில் தரையில் அமர்ந்திருப்பார் பெரியவர். அவரச் சுற்றி பல ஜோடி செருப்புகள். அவரே ஒரு புதிர்! பொறுமையாக இருக்கும் அவர், ஏதாவது காரணத்தால் அவர் பொறுமையை யாரவது சோதித்தால், அமர்ந்த படியே கம்பீரமான குரலில் தாண்டிக்குதிப்பார். யாராலும் அவரைப் பிடிக்க முடியாது. இதுவரை யாரும் எதிர்த்து பேசியது இல்லை. வயது முதிர்ந்தவர் என்ற மரியாதை காரணமாய்க் கூட இருக்கலாம்.

அவர் செருப்புகளை நம்மிடமிருந்து வாங்கும் விதம், அவற்றை வைக்கும் முறை எல்லாமே விசித்திரமாய் இருக்கும். கால் செருப்புகள் தானே என சிலர் அலட்சியமாய் அவர் முன் வைத்தாலும், ஏதோ தன் பொறுப்பில் விட்டுச் செல்லப்படும் பொக்கிஷத்தை எடுத்து பத்திரப் படுத்துவது போல், இரு கைகளாலும் ஜோடியை எடுத்து வைப்பார்.

மற்றும் பல சேவார்த்திகள், முதியவர் முகத்துக்கு முன் கால் செருப்பை கழற்றாமல், முன்பாகவே கழற்றி, கையில் எடுத்துக் கொண்டு வந்து தாங்களே மூங்கில் தடுப்பிற்குள் வைத்து விடுகிறோம் என்பார்கள். அதற்கு அவர் சம்மதிக்க மாட்டார். தன் முன்னால் வைக்க வேண்டும்; தான் மட்டும் தான் அவற்றை உள்ளே எடுத்து வைக்க வேண்டும் எனத் தீர்மானாய் கூறி விடுவார்.

என்னைப் பொறுத்தவரையில், கோபாலனின் சந்நிதியில் கிடைக்கும் ஆனந்தத்தைப்போல், மாலை நேரத்தில் சிறிது நேரம் இந்த பெரியவர் நடவடிக்கைகளை கவனிப்பதில் ஒரு வித மகிழ்ச்சி; மன அமைதி.

இரண்டாம் கோபுர வாயிலைத்தாண்டி உட்புறம், ஆயிரங்கால் மண்டபத்தையும் கடந்து, அடுத்த கோபுர வாயிலையும் தாண்டி வந்தால் துவஜஸ்தம்பமும் பலிபீடமும் காணலாம். தெற்கு பக்கம் முற்ற வெளியை கடந்து தாயார் சந்நிதியை அடையலாம்.

ஸ்ரீ செங்கமல தாயார் சந்நிதியை அடந்ததும், நாம் தாயாரின் கடாக்ஷத்தில் மன அமைதி பெற்று, ஆனந்ததை அடைவதை உடனேயே உணரலாம். வீற்றிருந்த திருக்கோலம். அங்கு உள்ள பட்டர் அனாவசியமாய் பேசமாட்டார். பார்க்கப் போனால் பேசவேமாட்டார்தான். அர்ச்சனைத் தட்டைக் கொடுத்தால் நம் காதுக்கு மட்டும் கேட்கும் படி, 'பெயர், நக்ஷத்திரம்' எனக் கேட்டு அர்ச்சனையை ஆரம்பிப்பார். மதுரமான குரல். அவர் ஒதுங்கி நின்று பணிவுடன் அர்ச்சனை செய்யும் போது, நம்முடைய சிந்தனைக்கும், தாயாரின் கருணைப் பார்வைக்கும் துளியும் இடையூறு இல்லது, தாய்க்கும் மகவிற்கும் நடுவில் நான் ஏன்? என்ற தோரணையில் நடந்து கொள்கிறாரோ என நினைக்கத் தோன்றும்.

தரிசனம் முடிந்ததும் மிக அழகான, அகலமான தாயார் பிரகாரத்தை வலம் வந்து, பெருமாள் சந்நிதிக்கு வரும் வழியில் உள்ள அனுமாரையும் வணங்கி விட்டு கோபாலனின் சந்நிதியை அடையலாம்.

ராஜகோபாலனின் சந்நிதியில் இருக்கும் பட்டரின், பேச்சு செயல் எல்லாமே வேறு விதமானது. கருவறையில் இருப்பவன் ராஜா என்றால் இவரோ அவன் மதிமந்திரி போல். குடிமக்கள் மந்திரி மூலம் அரச அவையில் முறையீடு செய்வது போல, பட்டர் நடுவில் நான் இருக்கிறேன் என ராஜபயம் இல்லாது செய்துவிடுவார்.

கருடன் சந்நிதியைத் தாண்டி வாயில்படி ஏறி இறங்க வேண்டும். கோபாலனின் சந்நிதிக்கு முன் மகாமண்டபமான சபை. தூண்கள் எல்லாம் பித்தளைத் தகடுகள் வேயப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில்தான் ஸ்ரீ கோபலனுக்கு உற்சவ காலங்களில் அலங்காரம் நடைபெறும். நாம் படி ஏறும்போதே மகாமண்டபத்தில் மேற்புறம் இருக்கும் பட்டர் 'வாங்கோ! வாங்கோ!' எனக் கம்பீரமாக குரல் கொடுப்பார். சற்று வெளிச்சக் குறைவான இடம். தவிர வெளியிலிருந்து வருபவர்களுக்கு இன்னும் இருட்டாய் தெரியும்.

அந்த இடத்தில் பட்டரின் குரல்தான் முதலில் நம்மை வரவேற்கும். 'நிதானமாய் பார்த்து வாங்கோ; கீழே படியில் நன்றாக பார்த்து வாங்கோ' என்ற வார்த்தைகள். படியின் கீழே கோயில் திருப்பணி செய்த அரச தம்பதிகள், எந்த அரசரோ நமக்குத் தெரியாது, விழுந்து வணங்கும் முறையில் செதுக்கப்பட்டிருக்கும் கருங்கல் சிலை. 'தடுக்கி விழுந்து விடாதீர்கள்' என சொல்ல மாட்டார். அவர் எச்சரிக்கை வேறு விதமாய் இருக்கும். அதே போல் மகாமண்டபத்தில் குறுக்கே போகும் வழக்கம் கிடையாது. அதற்காக 'குறுக்கே வராதீர்கள்' எனக் கூற மாட்டார்; 'பிரதஷணமாய் வாருங்கள்' என்று தான் கூறுவார். எதையுமே 'இல்லை; கூடாது' என எதிர்ப்பதமாய்க் கூறாமல், 'எப்படி செய்ய வேண்டும்' என பாந்தமாய்க் கூறுவார்.

வரும் பக்தர்களை உபசாரமாய் வரவேற்று, அவர்கள் மனத்தில் ஒரு நொடியில் சந்தோஷத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி விடுவார். 'எந்த ஊரோ?' என்ற அவர் கேள்விக்கு வந்தவர்கள் இவருக்குத் தெரிந்திருக்குமோ என்ற தயக்கத்துடன் தொலைவிலுள்ள 'இராமநாதபுரம் பக்கம்' என்று பதில் சொன்னால் உடனே, 'அடடே! நம்ம இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்தவர்களா? சேதுபதிகள் பல கோயில்களை கட்டி, நிர்வகித்து ஆண்ட புண்ணிய பூமியல்லவா? ரொம்ப சந்தோஷம். கோபாலனின் கடாக்ஷம் எல்லோருக்கும் குறைவில்லாமல் உண்டு. வாருங்கள்!' என்று ஆரம்பிப்பார். வந்தவருக்கு நாம் பிறந்த பூமியைப் பற்றி இவ்வளவு அறிந்திருக்கிறாறே என்ற சந்தோஷத்தில் இராமநாதபுரம் சேதுபதிக்கு கொடுக்கும் வரவேற்பு மாதிரி தனக்கும் பலத்த உபசாரம் செய்யப்படுவது போல உணர்வார்.

சற்று வழுக்கை விழுந்ததால் வயதான தோற்றமுடையவரும், ஒப்பனை கூடுதலான அவர் சகதர்மணியும் வந்தால் 'யார் இது, தங்கள் பெண்ணா?' இன்று இங்கிதம் இல்லாமல் கேள்விகள் கேட்க மாட்டார் இந்த பட்டர். வருபவர்கள், ஒருவருக்கு ஒருவர் என்ன உறவு, என்ன வரம் வேண்டி கோபாலனை தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள், என்பதையெல்லாம் ஒன்றிரண்டு தூண்டுதல் கேள்வி கேட்டு, பல விபரங்களை நொடியில் தெரிந்து கொண்டு விடுவார். வந்தவர் தேவைக்கு தகுந்தபடி, சேவை நடத்தி வைப்பதில் கெட்டிக்காரர்.

அப்படித்தான், எனது நெருங்கிய உறவினர், தம்பதிகளாய் ஒருமுறை சென்னையிலிருந்து கோபாலனை சேவிக்க வந்தபோது, ஒரு சில நிமிடங்களில், அவர்கள் தங்களின் இரண்டாவது பெண் கல்யாணம் நல்லபடியாக நிச்சயம் ஆக வேண்டும் என்ற அபிலாஷையுடன் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, ஸ்ரீகோபாலன் சேவை முடிந்ததும், 'திருவண்ணாழி பிரகாரத்தை வலமாக வாருங்கள்' என்று கூறினார். நாங்கள் வலம் வரும் முன்பு வடக்கு பக்கம் பிரசன்னமானார் பட்டர். அங்கு வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, குங்குமம் பிரசாதம் கொடுத்து, 'வெகு சீக்கிரத்தில் நல்ல வரன் அமையும். கல்யாணத்திற்கு பிறகு துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, உங்கள் செளகரியப்படி மஞ்சள் அரக்கு கலர் வஸ்திரம் சாத்துங்களேன்', என்று சொன்னார்.

ஊர் போய்ச் சேர்ந்த உறவினரின் தகவல் கடிதத்தை எதிர் பார்த்த எனக்கு மணியார்டர் வந்திருப்பதாக தபால்காரர் சொன்னதும் ஆச்சர்யம். சென்னைக்கு திரும்பியவுடனேயே அவர் பெண் கல்யாணம் நிச்சயமானதால் பதில் உடனே எழுத முடியவில்லை என்றும், ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு அபிஷேகம் செய்வதற்காக ரூபாய் அனுப்பியிருப்பதாய் எழுதியிருந்தார்.

இப்படிப் பல அனுபவங்களைப் பெற்ற எனக்கு, மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்த ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் மாலை நாலு மணியளவில், நானும் எனது தாயார், மனைவி, மக்களுடனும், வெளியூரிலிருந்து வந்திருந்த எனது சித்தி, சித்தப்பாவுடன் கோபாலனை தரிசிக்கப் புறப்பட்டு கோயில் வாயிலை அடைந்தோம்.

கோயிலின் முன்னால் வீட்டு மற்றும் விவசாய உபயோகத்திற்கு என இரும்பு சாமான்கள் செய்யும், ராமலக்ஷ்மணர் கடை என எல்லோராலும் அழைக்கப்படும் கடை உள்ளது. நான் மட்டும் தனியாகப் போனால் செருப்போடு உள்ளே போகாமல், அந்த நண்பர்கள் கடை வாசலில் ஓரமாக என் செருப்புகளை விட்டுச் செல்வது வழக்கம். சகோதரர்கள் இருவரும் அருமையான நண்பர்கள். பல ஜோடி செருப்புகளை கடைவாயிலில் விட்டுச் செல்வது அவ்வளவு மரியாதை இல்லை என நினைத்து, செருப்போடு கோயில் வாசலை கடந்து இரண்டாம் கோபுர வாயிலை அடைந்தோம். நல்ல சகுனம்; பெரியவர் அப்போது தான் வந்தார் போலும். அவர் ஆசனமான மடித்த சாக்கை பரப்பிவிட்டு பக்கத்தில் டோக்கன் பெட்டியை வைத்துவிட்டு கோபாலனின் சந்நிதியை நோக்கி ஒரு முறை கைகூப்பி வணங்கிவிட்டு வந்து உட்கார்ந்தார்.

எங்கள் எல்லொருடைய செருப்புகளையும் அவர் வழக்கப்படி வரிசையாக வாங்கி வைத்துவிட்டு ஜோடி டோக்கன்களில் ஒன்றை செருப்புகளின் மேல் வைத்துவிட்டு, மற்றொரு டோக்கனைக் கொடுத்தார். அவர் நடந்து கொள்ளும் முறையை புதிதாக ஒருவர் பார்த்தால், ஏதோ செருப்புகளுக்கு செய்ய வேண்டிய உபசாரங்களை செய்துவிட்டு பிறகு பிரசாதமாய் டோக்கனை தருவது போல தோன்றும். அவ்வளவு மரியாதையாக இரு கைகளாலும் அந்த டோக்கனை அவர் தரும் போது அப்படித்தான் தோன்றும்.

இவ்வளவு நிதானமாய் அவர் செய்யும் காரியத்தின் விளைவு, சில நேரம் சில மனிதர்களுடைய பொறுமையின்மையுடன் கூடிய வாதங்கள், அதன் முடிவு பெரியவரின் கோபம். சிறுவர்கள் 'சிடுசிடுப்பு தாத்தா' எனப் பெயர் சூட்டி, பின்பு அதுவே மருவி 'சிரிசிரிப்பு தாத்தா' என்றாகி அதுவே நவீனமாய் 'புன்னகை மன்னன்' என்ற பட்டப் பெயராகி விட்டது. பெரியவருக்கு இது தெரியுமோ தெரியாதோ. அவர் ஒரு கர்ம யோகி. அவர் வழிதான் நடப்பார்.

டோக்கனை பெரியவரிடமிருந்து பெற்றுக் கொண்டு முதலில் தாயார் சந்நிதியை அடந்தோம். வேறு யாரும் வ்ராததால் ஏகாந்த சேவை. அது முடிந்து கோபாலன் சந்நிதிக்கு வந்தவுடன் உள்ளே பார்த்தால் ஏக கூட்டம். சற்று காத்திருந்து, சந்நிதியை அடைந்தோம். அன்று விசேஷமாய் பச்சை பட்டாடை உடுத்தி, பாரிஜாத புஷ்பங்களால் ஆன மாலைகளை நிறைய அணிந்து கோபாலன் குதூகலமாய் இருந்தான். அவன் புன்னகையைப் பார்த்ததும் ஏனோ தெரியவில்லை, வாயிலின் செருப்பை பாதுகாக்கும் பெரியவர் நினைவு வந்தது. அவரின் பட்டப் பெயர் 'புன்னகை மன்னன்' என்ற காரணமோ என்னவோ! கோபாலனை சேவிக்க எந்த கெடுபிடியும் இல்லாமல் வந்து போகும் நம்மையெல்லாம், செருப்பை போடும் போதோ அல்லது எடுத்துக் கொள்ளும் போதோ, ஏக கெடுபிடி செய்யும் அந்த பெரியவரை மறுபடி நினைக்க தோன்றியது.

இவ்வளவு தூரம் கடந்து வந்து, கோபாலனை அவர் சேவித்திருப்பாரா, அல்லது கோபாலன் பல வாயில்களை கடந்து, அந்த இரண்டாம் வாயிலை அடையும் போதாவது தன் செருப்பு குவியல்களிலிருந்து, விழி உயர்த்தி கோபாலனை பார்த்திருப்பாரா என்ற எண்ணமும் தோன்றியது.

மனம் இவ்வாறு ஒரு நிலைப்படாது, ஒரு நொடி வாயிலில் உள்ள செருப்புக் குவியல்களைப் பற்றியும், அந்தப் பெரியவரைப் பற்றியும் மறுகணம் கோபாலனையும், அவன் பின்னிருந்து முன்நோக்கும் பசுவையும் பற்றி நினைத்தது. இந்த கோபாலன் தன் பசுவையும் கன்றையும் கர்பகிரகம் வரை அழைத்து வந்ததோடு அல்லாது பசுவின் மீது ஒய்யாரமாய் சாய்ந்து நின்று புன்னகை புரிகிறானோ என்றும் தோன்றியது. இதற்கு நடுவில் பட்டர் மூலவருக்கு மாலை சாற்றுவதற்காக, செளகரியத்தை உத்தேசித்து, கோபாலனின் பின்னால் நின்ற வெள்ளிப் பசுவை சற்று பின்னிருந்து முன்னோக்கி நகர்த்தி, பசு கோபாலனை இன்னம் அருகில் வந்து பார்ப்பது போல நிறுத்தினார். என் கவனம் பசுவின் மேல் சென்றது.

பசு தன் முன்னங்கால் இரண்டையும் தூக்குவது போல் பிரமை. அவை கைகளாய் மாறி கோபாலனை தொழுதது. பசுவின் முகத்தைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கு இரண்டாம் வாயிலில் உள்ள புன்னகை மன்னன் முக மலர்ச்சியுடன் தொழுத கையுடன் கோபாலனின் கடைக்கண் பார்வையில் நிற்பது போல தோற்றம். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் அந்த கிழவரைப் பற்றி நினைத்ததன் விளைவா இந்த பிரமை அல்லது கோபாலனின் திருவிளையாடல்களில் ஒன்றா இந்த காட்சி. 'என் பரம பக்தன் என்றாவது கருவறை வந்து சேவித்திருப்பாரா என்றா எண்ணினாய்? இதோ என்னுடன் இருப்பதைப் பார்' என எனக்குக் காட்டினானோ என்னவோ! ஏதும் தெரியவில்லை.

மனத்தை கட்டுப்படுத்தி கோபாலனை சேவிக்க முயன்று, ஒன்றும் புரியாத நிலையில் கோயிலில் இருந்து தரிசனம் முடிந்து வெளியே வந்தேன்.

இரண்டாம் கோபுர வாயிலை அடையும் போது மணி ஆறு. டோக்கனையும், இரண்டு ரூபாயும் கொடுத்து, மொத்தம் ஏழு ஜோடி என கணக்கு சொல்லி மீதி சில்லரையை வாங்கி, செருப்புகளையெல்லாம் பெரியவர் அவர் முறைப்படி தனித்தனி ஜோடியாக எடுத்துக் கொடுக்க, என் சித்தப்பா செருப்பு மட்டும் காணவில்லை. பின்னால் வந்த கூட்டத்தில் இடம் மாறி விட்டது போலும். பெரியவரின் அனுமதியுடனவர் எல்லைக்குள் நுழைந்து செருப்பை தேட ஆரம்பித்தேன். கையில் கோபாலனுக்கு அர்ச்சனை செய்த தட்டு – அதில் தேங்காய் பழத்துடன், கோபாலன் சூடிக்களைந்த பாரிஜாத மலர் மாலை ஒன்றும் உதிரிப் புஷ்பங்களும். ஒரு வழியாகத் தேடி, செருப்பை கண்டுபிடித்தேன். பெரியவரின் அனுமதியுடன் எடுப்பது தான் முறை என்ற எண்ணத்துடன் 'பெரியவரே, செருப்பு இதோ இருக்கிறது. எடுத்துக் கொள்ளட்டுமா' என ஆரம்பித்தேன்.

'நீங்க எடுக்காதீங்க சாமி, இதோ நான் வருகிறேன்' என்று பதில் வர, நான் சற்று தயங்கினேன். அதற்குள் இன்னம் சில சேவார்த்திகள் வர பெரியவர் கவனம் அங்கே சில நிமிடங்கள் சென்றது.

வெகு வினயமாய் பேசுவதாக நினைத்து 'ஐயா பெரியவரே! இவை எனது சித்தப்பா செருப்புதான். அவர் செருப்பை எடுத்துப் போடுவது தவறில்லை' என்றேன்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தார் பெரியவர். மிகக் கூர்மையான பார்வை.

"ஐயா சாமி! தப்புப் பண்ணிட்டீங்களே! செருப்பை நீங்க எடுத்துப் போடுவது கேவலம் என நினைத்து, நீங்க எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களே! கோபாலன் சந்நிதிக்கு வருபவர்களே புண்யாத்மாக்கள். இதில் யார் யார் மகாத்மாக்கள் என்று எனக்குத் தெரியாது. கோபாலனை சேவித்த மகாத்மாக்கள் பாதரக்ஷையைத் தொட்ட புண்ணியமாவது எனக்கு கிடைக்க வேண்டும் என்றல்லவா இங்கு உட்கார்ந்திருக்கிறேன். உங்களை மாதிரி ஓரிருவர் பாதரக்ஷையை எடுத்துப் போட்டால் வெட்டியாய் இருந்து விட்டேன் என்றல்லவா போய்விடும் ஐயா! கேவலம் என நினைத்து நீங்கள் எடுக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. என் புண்ணியத்தை நீங்க கொண்டு போயிடாதீங்க என்று தான் சொன்னேன்."

பெரியவரின் ஒவ்வொறு வார்த்தையும் என்னை என்னவோ செய்தது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கண்கள் இருள ஆரம்பித்தன. என் கண்களில் பெரியவரின் முகமும், பல ஜோடி செருப்புகளும் மட்டும் தான் தெரிந்தன. மயங்கி விழப் போகிறாய் என உள்மனம் எச்சரித்தது. எங்கிருந்தோ வந்தது சுகமான சுகந்தத்துடன் கூடிய தென்றல். கருவறையில் கோபாலனை சேவித்துவிட்டு, பல புஷ்பங்களின் சுகந்தம் மிக மிக அருகில் வருவது போல் உணர்ந்தேன்.

கண்கள் தெளிவாக தெரிகிறது. உடல் இலேசாகி மிதப்பது போல் உணர்வு. செருப்புகளைப் பார்க்கிறேன். அந்த பெரிய பெரிய செருப்புகளில் கருவறையில் பார்த்த அதே கோபாலன் பச்சை பட்டாடையுடன் பாரிஜாத மாலைகளுடன் நடனமாடுகிறான். ஒவ்வொரு செருப்பிலும் அவன் தன் பிஞ்சு கால்களை வைத்து தாண்டி குதித்து குதிநடனம் போடுவதைப் பார்க்கிறேன். 'இந்த செருப்பு அடுத்து என் பக்தன் எடுத்து போடப்போகும் செருப்பு', என்று சொல்லி குதிப்பது போல தெரிகிறது. அவன் ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் ஒன்றிரண்டு பாரிஜாத மலர்கள் அந்த செருப்புகளில் விழுகின்றன. அவற்றை மிதிக்காமல் அடுத்த செருப்பில் லாவகமாய் குதிக்கிறான், புன்னகை பூக்கிறான்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென மறைந்து விட்டான். திரும்பி பெரியவரைப் பார்க்கிறேன். தொழுத கைகளுடன் 'கோபாலா! கோபாலா!' என்று வாய்விட்டு அழைத்தவாறே ஒவ்வொரு பூவையும் செருப்புகளிலிருந்து எடுக்கிறார். அவர் கை நிறைய பூக்கள். ஏதும் புரியாத நிலை.

'சாமி உங்க புண்ணியத்தில் கோபாலன் பிரசாதம் கிடைத்தது. போய் வாருங்கள் ஐயா!' - பெரியவரின் குரல் என்னை நிதானப் படுத்தியது. அதற்குள் என் மனைவி கையில் இருந்த அர்ச்சனைத் தட்டை வந்து பெற்றுக் கொள்ள, அந்த பாதுகா சிரோன்மணியை, கைகூப்பி தொழுதேனோ என்னவோ தெரியாது, கையில் ஜோடி செருப்பை எடுத்துக் கோண்டு வெளியே வந்தேன்.

மனத்தின் எண்ண ஓட்டத்தின் வேகம், நடை தானாகவே தடைப்பட்டது.

'என்ன?' மனைவியின் குரல்.

திரும்பிப் பார்க்கிறேன்.

'என்ன யோசனை என்று கேட்கிறேன்' மனைவி விழைகிறாள்.

'ஒன்றுமில்லை'.

'என்ன ஒன்றுமில்லை? எதோ தீவிர யோசனை. சித்தப்பா இரண்டு தடவை ஞாபகப் படுத்திய பிறகு தான், அவர் செருப்பை கீழே போட்டிருக்கிறீர்கள். முதலில் கையில் செருப்புடன் யோசனை. இப்போது என்னடாவென்றால் இங்கு மண்டபத்திலேயே நின்று விட்டீர்கள். அதோ பாருங்கள், எல்லோரும் முன்னால் கோபுரவாயில் வரை போயாகி விட்டது. உங்களை காணவில்லையே எனத் திரும்பி வந்தால் இங்கேயே நின்று விட்டீர்கள்.'

'ம்...' என்னுடைய பதில்.

'என்ன 'ம்...'. கோவிலுக்கு வந்தால் பெருமாளை சேவிக்க வேண்டும். சேவிப்பது முன்னே பின்னே இருந்தாலும் அபசாரப்படக்கூடாது.'

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. நான் பெரியவரிடம் அபசாரப்பட்டது தெரிந்து சொல்கிறாளா?

'என்ன சொல்கிறாய்?'

'ஆமாம். அர்ச்சனை தட்டுடன் செருப்பைத் தேடப் போனதே சரியில்லை. தட்டை என்னிடம் கொடுத்துவிட்டு தேடியிருக்கலாம். அங்கு காற்றில் ஒவ்வொரு பூவாக பறந்து செருப்பில் விழுவதைப் பார்க்கவில்லை. அப்போதும் ஏதோ யோசனை.

பெருமாள் சூடிய புஷ்பம் செருப்புகள் மேல் விழுவது அபசாரமாய் படவில்லை உங்களுக்கு. நல்ல வேளை, அந்தப் பெரியவர் பக்திமான். ஒரு பூவையும் விடாது எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு தன் பெட்டியில் போட்டுக் கொண்டார். இல்லாவிட்டால் வருவார் கால்பட்டு அந்த அபசாரம் வேறு வேண்டுமா நமக்கு.'

மனைவி யதார்த்தவாதி. நான் கனவுலக சஞ்சாரி என நினைக்கிறாள். நல்லவேளை நான் பெரியவரிடம் அபசாரப்பட்டது இவளுக்குத் தெரியாது.

நான் செய்தது அபசாரமில்லை. கோபாலன் பெரியவருக்கு செய்த உபசாரத்திற்கு, பூத்தட்டுடன் நின்றேன். அவ்வளவுதான். ஒருக்கால் நான் அபசாரமும் செய்யவில்லை - உபசாரமும் செய்யவில்லையோ என்னமோ. யாருக்குத் தெரியும். எனக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு புதுவிதமான பாதுகா தரிசனம்!

எல்லாம் கண்ணனுக்கே! எல்லாம் கண்ணனே!

வெள்ளி, ஜூன் 17, 2005

முன்னோட்டம்

என் தந்தையார் திரு. பார்த்தசாரதி 35 வருடங்களுக்கு மேலாக வங்கியில் பணியாற்றியிருந்தாலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் நிறைய எழுதியிருக்கிறார். எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆவல் உருவாக அவரும் ஒரு காரணம். அவர் எழுத்துக்கள் சிலவற்றை இந்தப் பகுதியில் தர உத்தேசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் - 2003ல் - நியூயார்க் வந்த போது, சுதந்திர தேவி சிலையைப் பார்த்து வந்தார். அப்பொது அவர் எழுதிய ஆங்கிலக் கவிதை, சுதந்திர தேவி சிலையைப் பற்றிய ஒரு வலைத்தளத்தில் வெளியானது. அதன் இணைப்பு இதோ:
http://www.endex.com/gf/buildings/liberty/SOLPoemParth.htm

அன்புடன்,
ரங்கா.