ஞாயிறு, செப்டம்பர் 25, 2005

பணப்பைத்தியம்

சென்னையில் சார்ட்டட் அக்கௌன்டன்சி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் 'நிறையப் பணம் தரும் வேலை எது' என்று நண்பர்களோடு வீட்டில் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தந்தை 'பணத்தைப் பார்க்காதே - வேலை உனக்கு எந்த அளவு முன்னேற்றம் தரும் என்று பார்' என்றார். அப்புறம் இந்தக் கதையை எழுதினார். அப்போது இதன் தாக்கம் முழுவதுமாய் புரியவில்லை. இப்போது நன்றாகவே புரிகிறது.

பணப்பைத்தியம்

நான் ஒரு பணப்பைத்தியம். கோடி கோடியாக நிறையப் பணம் சேர்க்க வேண்டும். நிறைய நகைகள், தங்கம், வைரம் என சேர்க்க வேண்டும் என்று சதா சிந்தனை. இந்த ஆசை வேகமாய் வளர்ந்து என்னையும் மீறி வெளிப்படையாக தெரிய ஆரம்பித்ததும் தான், நான் பணப் பைத்தியமாக ஆவதை உணர்ந்தேன். வீட்டில் உள்ள பழைய பேப்பர்களை வெட்டி அடுக்கி வைத்தால் ரூபாய் நோட்டுகளாக மாறுமா? உடைந்த ஸ்பூன் முதல் ஓட்டை பித்தளை குடம் வரை தனி அறையில் பூட்டி வைத்தால் பொன்னாக மாறுமா என்று சதா எண்ண ஆரம்பித்தேன்.

நான் பணப் பைத்தியமாவதற்கு காரணம் இந்த டி.வி., பத்திரிகைகள்தான். பல நாட்களாக மாஜி மந்திரிகள், அரசாங்க உயர் அதிகாரிகள், மந்திரிகளின் பிரத்யேக உதவியாளர்கள் என பலரும், பணமும் நகைகளும் மூட்டை மூட்டையாக வீட்டில் எங்கு பார்த்தாலும் பதுக்கி வைத்திருந்ததை காலையிலிருந்து மாலை வரை படித்து, பார்த்து, கேட்ட எனக்கு பணப் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது.

எனது நண்பன், மற்றவர்கள் இதை அறியுமுன்பே தெளிவாகத் தெரிந்து கொண்டுவிட்டான். என்னை சமாதானப்படுத்தி, அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பெரியவர் ஒருவரை பார்த்து வரும்படி அவன் சொன்னதை, சொன்னபடி செய்தேன். இன்று கவலை ஏதுமில்லை, சந்தோஷத்தைத் தவிர.

இதோ அந்த அனுபவம்.

ஞாயிறு காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு அந்த கிராமத்தை அடந்த போது காலை மணி ஒன்பது. நண்பன் கூறிய அடையாளத்துடன் சுலபமாக அந்த பெரியவர் வசிக்கும் இடத்தை அடைந்தேன். சிறிய தென்னந்தோப்பில், நடுவில் நடுத்தர அளவில் ஒரு கூரை வேய்ந்த வீடு. தோப்பிற்கு வெளியே இரண்டு கார்கள். பெரியவரைப் பார்க்க யாரும் வந்திருக்கலாம். அந்த வீட்டின் முன் நான் வரும் போது இரண்டு கனவான்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இருவர் கைகளிலும் கனத்த தோல் பைகள். பணம் நிறைய கொண்டு வந்தார்களா, அல்லது கொண்டு செல்கிறார்களா? எனக்கு எப்பவும் பணம் பற்றிய நினைவுதான்.

பெரியவர் திண்ணையில் சில மாணவர்களுக்கு ஏதோ பாடம் நடத்திக் கொண்டிருந்தார் போலும். கனவான்கள் வருகையால் தடை பட்டிருக்க வேண்டும். என்னை நான் அறிமுகப் படுத்திக் கொண்டேன். நண்பர் பெயரைச் சொன்னதும் அவர் வரவேற்ற விதம் 'எனக்கு உன்னைத் தெரியும்' என்பது போல் இருந்தது. என்னை அமரச் சொல்லிவிட்டு பெரியவர் தொடர்ந்தார்.

“ஆக வந்த இருவரில் யார் பெரிய பணக்காரர் என்பதை முடிவாக சொல்ல முடியாது. இதுதானே உங்கள் பதில்'.” மாணவர்களில் பெரியவனான ஒருவன் சொன்னான், “இருவரும் காரில் வந்திருக்கிறார்கள். பணக்காரர்கள் தான். ஆனால் யாருக்கு சொத்து அதிகம் இருக்கிறது. வீடு, நிலம், தோப்பு என்று இருவரில் யாருக்கு அதிகம் உள்ளது. அந்த விபரம் தெரியாமல் இருவரில் யார் பெரிய பணக்காரர் என்பதை கூறமுடியாதே.”

இங்கும் பணப் பிரச்சனை தானா? நான் நிமிர்ந்து கொண்டு காதைத் தீட்டிக் கொண்டேன்.

சற்று மௌனத்திற்கு பிறகு பெரியவர் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். அவர் கண்களில் தெரிந்த அமைதி என்னை சற்று சாந்தப் படுத்தியது. “சரி. இப்போது கூறுங்கள். காரில் வந்தவர்கள் பணக்காரர்கள் என்றால் கார் இல்லாத நான் ஏழையா?”.

சிறுவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை போலும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாரும் பெரியவரை ஏழை என்று சொல்ல விரும்பவில்லை என அவர்கள் முகபாவத்திலிருந்து தெரிந்தது. பெரியவர் தொடர்ந்தார், “சரி, போகட்டும். இப்போது ஒரு கணக்கு. நமது கிராமத்திற்கு வெளியே சென்னை செல்லும் பிரதான சாலையில் ஒருவன் 'ஐயா பத்து பைசா கொடுங்கள், பத்து பைசா கொடுங்கள்' என்று சொல்லிக் கொண்டு பிச்சை கேட்கிறான் அல்லவா? அந்த மனிதனுக்கு தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் போகும் ஒவ்வொரு பஸ்ஸிலிருக்கும் ஒவ்வொறு பயணியும் ஒரு ரூபாய் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த மழை காலத்திற்குள் அந்த மனிதனின் நிலமை என்ன? அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும்?”

சிறுவர்களிடம் சலசலப்பு. கூட்டிப், பெருக்கி “மூன்று மாதத்திற்குள் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிடும். அவன் பணக்காரன் ஆகிவிடுவான்“, ஒரு சிறுவன் வேகமாய் சொன்னான். கூட்டல் பெருக்கல் சத்தம் ஓய்ந்து அமைதி நிலவியது. பெரியவர் தொடர்ந்தார், “மூன்று மாதத்தில் பணக்காரன், அப்படித்தானே?”

என் அருகிலிருந்த சிறுவன் மெல்லிய குரலில் சொன்னான், “அவன் பிச்சைக்காரன் தானே”. பெரியவர் சிரித்தார். மற்ற சிறுவர்களும் பெரிதாக சிரித்துவிட்டு, “இவனுக்கு கணக்கு தெரியாது. இந்த வருடம் தான் பள்ளியில் சேர்ந்தான். ஆயிரம் வரைதான் எண்ணத் தெரியும். அதனால் தான் பிச்சைக்காரன் என்று கூறுகிறான்” எனக் கூறி ஆரவாரம் செய்தனர்.
பெரியவர் அமைதிப் படுத்திவிட்டு, அந்த சிறுவனை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டு தொடர்ந்தார். “இவன் சொல்கிறான், பிச்சை எடுப்பதால் பிச்சைக்காரன் என்று. நீங்கள் சொல்கிறீர்கள், பல லட்ச ரூபாய் சேர்ந்துவிட்டது, அதனால் பணக்காரன் என்று. தினமும் 100 பஸ்கள், பஸ்ஸுக்கு 50 பயணிகள். ஆக தினம் 5000 ரூபாய். நூறு நாட்களில் ஐந்து லட்சம் - கணக்கு சரி. இப்போது கூறுங்கள் - எந்த ஒரு ரூபாய் அவனைப் பணக்காரனாக ஆக்கியது? அவன் எந்த நாள் பணக்காரன் ஆனான்? ஐந்து நாள் கழித்தா, அல்லது பதினைந்தாவது நாளிலா, இல்லை நூறாவது நாளிலா? என்று அவன் பணக்காரன் ஆனான்? எந்த ஒரு ரூபாய் அவனை பணக்காரன் என ஆக்கியது?”

சிறுவர்களுக்கு கேள்வியும் புரியவில்லை; பதிலும் தெரியவில்லை. எனக்கும் கூடத்தான். எந்த நாளில் எந்த நிமிடம் அவன் பணக்காரன் ஆனான். சிறு பொடியன் சொல்கிறான் - அவன் பிச்சைக்காரன் தானே! பணம் நிறைய இருந்தும் பிச்சைக்காரன் தானா? என்னைப் போலவே குழம்பிய சிறுவர்களை பெரியவர், “அடுத்த வாரம் இது பற்றி பேசுவோம், இன்று நீங்கள் போகலாம்”, எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். தன்னருகில் இருந்த அச்சிறுவனுக்கு வாஞ்சையுடன் ஒரு முத்தம் கொடுத்து அவனையும் அனுப்பினார்.

என்னைப் பற்றி சாதாரணமாய் விஜாரித்துவிட்டு, காலை சிற்றுண்டி தந்து உபசரித்து, மறுபடியும் விட்ட இடத்தில் பெரியவர் தொடர்ந்தார். “இப்போது நீங்கள் கூறுங்கள், யார் பணக்காரன், யார் ஏழை?”. மனதில் தோன்றியதை உடனே கூறினேன். “பணம் நிறைய இருந்தாலும் அவன் செல்வந்தன் இல்லை. பணம் அதிகம் இல்லாதவனும் ஏழை இல்லை”. பணப் பைத்தியமான என் வாயிலிருந்தா இந்த வார்த்தைகள்?

“சரியாக சொல்லிவிட்டீர்கள். விளக்க முடியுமா?” பெரியவர் கேட்க, “எனக்கு தோன்றியதை ஏதோ உடனே சொல்லிவிட்டேன். விளக்கம் என்றால்...” பேச்சு தடைப்பட்டது எனக்கு.

பெரியவர் தொடர்ந்தார். “இந்த பிச்சைக்காரன் பிச்சை பெறுவதை நிறுத்தாதவரை பிச்சைக்காரன். பணம் உள்ள பிச்சைக்காரன், அவ்வளவுதான். இவன் rich beggar . அதே போல பணம் ஒன்றே குறியாய், பணம் சேர்ப்பதை மட்டும் மனத்தில் கொண்டவன் - rich bagger - பணமூட்டை, அவ்வளவுதான்.

காலையில் இங்கு வரும் போது பஸ் பயணத்தில் முதியவர் ஒருவருக்கு அமர இடம் கொடுத்ததாகச் சொன்னீர்கள். உங்களிடம் முதியவருக்கு கொடுக்கும்படி ஒன்று இருந்தது - கொடுத்தீர்கள்.

இப்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறேன், கேளுங்கள். அதற்கு நானே சாட்சி. ரயில் தண்டவாளத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார்கள். பின்புறம் எதிர்பாராதவிதமாக ரயில் ஒன்று வந்தது. நடுவில் இருந்த மாணவன் இருபுறமும் இருந்தவர்களை, இருகைகளினாலும் தள்ளி விட்டு, தான் தப்பிக்க முடியாமல் இறந்து போனான். இது மற்ற மாணவர்களின், சாட்சிகளின் வாக்கு மூலம். இந்த விபரம் அந்த மாணவனின் வயதான தந்தைக்கு பக்குவமாக எடுத்துக் கூறப்பட்டது. முதலில் மிக வருந்தி அழுது புலம்பிய அந்த பெரியவர், இரண்டு நாள் கழித்து, துக்கம் கேட்க வந்த தனது கிராமத்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறினார்.

'மனிதன் பிறந்தவுடனேயே, இறப்பு என்பது நிச்சயம். இரண்டு உயிர்களைக் காக்க ஒருவன் உயிர் கொடுத்திருக்கிறான் என்றால் அது வருந்த வேண்டிய விஷயம் இல்லை. வாழ்வில் இது ஒரு மோசமான பேரம் இல்லை. இரண்டைக் காப்பாற்ற ஒன்றை இழந்தோம்' என வேதாந்தம் பேசுகிறார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், பஸ் பயணத்தில் முதியவர் ஒருவருக்கு அமர இடம் கொடுப்பது சாதாரணம். அதே போல் வாழ்க்கைப் பயணத்தில் உயிரைக் கொடுப்பது என்பது அசாதாரணம். இந்த இரண்டு 'கொடுத்தல்' என்ற நிகழ்சியில், காசு பணம் என்று ஏதும் வரவும் இல்லை, செலவும் இல்லை. ஆக 'கொடுத்தல்' என்பது ஒரு அரிய செயல் - பணம், காசு, தான்யம், பொருள் எல்லாவற்றையும் கடந்த ஒன்று.

'கொடுப்பவனே தனவான்' - இது பைபிள் வாக்கியம். 'கொடு. உன்னால் முடிந்ததை கொடு' - இது உபநிஷத வாக்கியம். ஒவ்வொரு மனிதனிடமும் கொடுப்பதற்கு ஏதாவது ஒன்று இருக்கும். பணம், பொருள் என்பதையும் மீறி, அதை அவன் மற்றவர்க்கு, தேவைப்பட்டவர்களுக்கு, கொடுக்க ஆரம்பித்தவுடனேயே, அவன் தனவான் ஆகிறான். அவன் ஏழையல்ல. கொடுக்கும் மனிதன் பணக்காரன் தானே?"

என் மனத்தினுள் ஒரு மின்னல். மனத்தை அழுத்திக் கொண்டிருந்த பணமூட்டை, இலேசாகி, காற்றில் கரைவது போல உணர்வு. நிமிர்ந்து பார்க்கிறேன் - நல்ல மழையாக அது பெய்து, எல்லாம் நனைந்து என் மனமும் குளிர்வது போல ஒரு நினைவு. பெரியவர் பேச்சு தாகத்திற்கு தண்ணீர் போல், வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது. அது ஒரு கருவி. கருவி தேவைதான், அதை உபயோகித்து உற்பத்தி பெருக்க வேண்டும். வேண்டியவர்களுக்கு வினியோகிக்க வேண்டும். பயணத்தில் செருப்பு காலுக்கு தேவைதான். ஆனால் பலப் பல ஜோடி என்றால், தலயில் செருப்பு மூட்டையைத் தான் தூக்க வேண்டும்.

எனக்கு பெரியவர், பணம் என்ற பிரமையிலிருந்து விடுபட, மனதுக்கு மருந்தாய் கூறிய வார்த்தைகள் இன்று பலருக்கும் தேவைப்படும். நான் கொடுக்க ஆரம்பிக்கும் போது நிச்சயம் எனக்கும் பலர் கொடுப்பார்கள். என்னால் கொடுக்க முடியும்; எல்லோராலும் கொடுக்க முடியும். வாழ்க்கை வாழ்வதற்கே - அது இனிமையானது. உங்கள் கருத்தென்ன?

சனி, செப்டம்பர் 24, 2005

சிந்தனைச் சிறகு

என் தந்தையார் கதைகள் மட்டுமல்லாது கவிதைகளும் எழுதியுள்ளார். இந்தக் கவிதை பத்து வருடங்களுக்கு முன் வங்கியில் பணியாற்றும் போது எழுதியது - மாதத்தில் ஒரு சனிக்கிழமை நடக்கும் 'கவிதை மாலை' என்னும் நிகழ்ச்சிக்காக. சிந்தனை எவ்வளவு முக்கியமானது - அதுவும் ஒரு ஒழுங்கோடு கூடிய, நல்ல சிந்தனை வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குகிறது.

சிந்தனைச் சிறகு

காக்கை சிறகினிலே
கண்ணன் கார்வண்ணம்
கண்டான் மாகவி தன்
சிந்தனை சிறகாலே.

நம்புங்கள்
நிந்தனை இல்லாத சிந்தனை
நிம்மதி தரும்
வஞ்சனை இல்லாத சிந்தனை
வாழ்வில் வளம் தரும்
தூய சிந்தனை
துயர் தீர்க்கும்.

சிறகடிக்கும் வானத்து
பறவைகளைப் பாருங்கள்
பார்த்தால் அவை காற்றில்
மிதக்கவும் இல்லை
மூழ்கவும் இல்லை.

ஆ! அதுவே ப்ரம்மத்தின் பிரதிபிம்பம்!!
உள்ளும் அதுவே! வெளியும் அதுவே!!
சிந்தனை சிறகை விரித்திடுவீர்
உண்மை உலகை உணர்ந்திடுவீர்.