ஞாயிறு, அக்டோபர் 16, 2005

இக்கரையில் முத்திரை பதிப்போம்!

இக்கரையில் முத்திரை பதிப்போம்!


நித்திரையில் பூத்த கனவு மலர்கள் நினைவில்
இத்தரையில் முத்திரை பதிக்க முயலும் மனிதர்களே!
சித்திரை வானத்தில் விண் பூக்கள் நடுவில்
மலர்ந்த வெண்தாமரை வட்ட நிலா உண்டு.
சித்திரையில் வனத்தில் பூத்த மரங்களும் உண்டு.
மாபூத்து மனிதர்களுக்கு காய் பழம் தருவதுமுண்டு.
வேம்பும் பூத்து பறவையினம் பழம்பெறும் வழியுமுண்டு
பூக்காமல் காய்த்து பழுத்து பலந்தரும் பலாவுமுண்டு

நெட்ட நெடுமரமாய் வளரும் மனிதன்
பூப்பதுமில்லை; காய்ப்பதுமில்லை
அவன் பழுத்த பழமானாலும்
யாருக்கும் பலன் இல்லை.

இக்கரைக்கு அக்கரைப் பச்சையென
அக்கரை சீமையிலே பசை தேடுவான்
அக்கரையோடு உழைத்தால்
இக்கரை பசுமை அறிவானே!

பழுத்த பழம் தின்னும் பறவைகள்
விடுத்த விதைகள் செடியாகி, மரமாகி
பூத்துக் காய்த்து, மறுபடியும் பழந்தரும்
விந்தை வழியை மனிதன் பார்த்தானா?

நெடிய பலமரமும்
இத்தரையில் பதித்த
முத்திரை விதையும்
அறிய மறந்த மனிதன்
இத்தரையில் முத்திரை பதிக்க
மரமாய் மாற வேண்டாம்.
மனிதனாய் மகிழ்ந்து வாழவேண்டும்
சித்திரை முதல் அவன் சிந்தை
வளரட்டும்; சொற்பகை மறையட்டும்
நிறைந்த சாதனை பல படைக்கட்டும்
'இத்தரையில் முத்திரை பதிக்க'
எழுத்தறிவையும் இறையுணர்வையும் ஊட்டட்டும்.

வெள்ளி, அக்டோபர் 07, 2005

உழைப்பாளியின் குமுறல்!


மற்றுமொரு கவிதை - என் தந்தையின் குறிப்பிலிருந்து. பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.

உழைப்பாளியின் குமுறல்

'ஒரு நாள் உண்ணாவிரதம்' என
ஊர் முழுதும் ஓராயிரம் சுவரொட்டி
கண்ட சுவர் எல்லாம் ஒட்டி
கால்நடைக்கு தீனிபோடும்
அரசியல் அண்ணாத்தைகளே!
அரை வயிறு கஞ்சி குடிக்காமல்
கால்நடையாய் கழனிமேடு சுற்றும்
தம்பிகள் எங்களையும் கவனியுங்கள்

சுவரொட்டியில் 'மாபெரும் உண்ணாவிரதம்'
உண்மையில் ஒரு வேளை மட்டும் உணவு குறைப்பு
காலையில் உண்டு களைத்து 'விரத' ஆர்பாட்டம்
மாலையில் பழரசம் பருகி 'வெற்றி' கொண்டாட்டம்.
ஏமாறுவது எங்கள் மரபு என்றாலும்
ஏமாற்றுவது உங்கள் தொழிலாகலாமோ?
எல்லோரும் ஏமாந்தவர்கள் அல்ல
எல்லா நேரமும் எவரையும் ஏமாற்றமுடியாது!

சுவரொட்டிக் காகிதம் ஏமாற்றி உரித்தெடுத்த
எங்கள் பொதி சுமக்கும் முதுகுத்தோல்!
வண்ண வண்ண எழுத்துகள் நீங்கள்
உடலிலிருந்து உறிஞ்சியெடுத்த ரத்தம்
ஒட்டும் பசையோ, உழைத்துக்
களைத்து கால் வயிறு குடிக்க
கையில் வைத்திருந்த
கலயக் கஞ்சியே ஆகும்.

எங்களில் பலர் இதையறிந்தும்
ஒன்று சேராத ஊமைகள்;
பங்கு கேட்காத பேதைகள்!
நாங்கள் ஒன்று பட்டால்
உங்களையும் உண்மையாய்
உழைக்க வைக்க முடியும்!
எப்போது அது முடியும்?
எப்போது அது ஆரம்பம்?

சனி, அக்டோபர் 01, 2005

புழுத்த அரசியலில் மக்கள் மீன்கள்

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என் தந்தையால் எழுதப்பட்ட கவிதை; இன்றைய அரசியலுக்கும் பொருந்தும்!

புழுத்த அரசியலில் மக்கள் மீன்கள்

மாநாடு கூட்டும் சாதி சங்கங்களே!
மாந்தர் அறிவார்
சேற்றில் செந்தாமரை பூக்குமென்று.

ஆனால் நீங்கள்
அரசியல் சகதி
ஆர்பாட்டத்தில்
அனைத்தும் கிடைக்கும் என
ஆர்பரிக்கிறீர்கள்.

உண்டி குலுக்கி அரசியல்வாதி
உலகம் ஆள
'சாமானியன் நான்' என
சாகசம் காட்டுகிறார்.

கஞ்சி குடிக்கும் காசை நீங்கள்
சங்கம் நடத்தும் பேர் ஆசையில்
கரைக்கிறீர் இங்கு மெரினா கடலில்.

அடிமடியில் கை போட்டு
ஆளுக்கு பலகோடி என சொத்து
அவர் சேர்க்கிறார், கண் எதிரில்.

தன் கையே தனக்கு உதவி
என்பதை தான் மறந்து, நீங்கள்
மண்ணிலே மாயப் பார்க்கிறீர்களே இங்கு.

அரசியல் அரிதாரம் பூசி
அவதார வேடமிட்டு
அரசு கட்டிலேறி
அங்கு சாதி இரண்டல்ல
அறுநூறு என்றும்,
அத்தனையும் தாழ்ந்தது
அனைவரும் தாழ்ந்தவரே என்பார்.

எந்தாய் உயர்ந்தவன்
என் இனம் உயர்ந்தது
என் மனம் உயர்ந்தது
என நிமிர்ந்து எழாமல்
எதிலும் நான் தாழ்ந்தவன்
என் குலமும் தாழ்ந்தது
எனப் புலம்புவது எதற்காக?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்
ஒருவர் தாழ்ந்தவர் என்றாலும்
ஒற்றுமை நீங்கும் இங்கு
ஒன்றி உணரீரோ இன்று?